Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 31 August 2014

ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை;

ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை;

நிலம் மாறினாலும் நிறம் மாறாத செல்வம் கல்வி.

கற்றவர்களே கண்ணுடையவர்களாக மதிக்கப்படும் காலம் இது.

மனிதனைச் சிந்திக்கச் செய்வது கல்வியின் அடிப்படை நோக்கமாகும்.

தொல்காப்பியரும், பிராய்டும் உளவியலின் முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்களாக மதிக்கப்படுகின்றனர்.

இவ்விருவரின் வழியில் நான் மாணவர்களிடம் கற்ற உளவியல் கூறுகள், என்னைப் போன்ற கல்வியாளர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
1. ஆசிரியரின் கண்கள் மாணவர்களைத் தம் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.

2. சில ஆசிரியர்கள் ஆண்கள்பக்கமோ, பெண்கள் பக்கமோ, நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பக்கமோ திரும்பி பிற மாணவர்களை நோக்காது பாடம் நடத்துவர். இச்சூழலில் மாணவர்கள் உள்ளத்தால் வகுப்பை விட்டு வெளியே சென்று விடுகின்றனர்.உடல் மட்டுமே அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

3. ஆசிரியரின குரல் ஒலி அளவு எல்லா மாணவர்களுக்கும் கேட்குமாறு ஏற்ற இறக்கங்களுடன் இருத்தல் வேண்டும்.

4. ஆசிரியர் தாம் சொல்லவந்த கருத்துக்களை முழுவதும் வெளிப்படுத்த தேவைக்கேற்ப உடல் அசைவு மொழிகளைக் கையாளவேண்டும்.

5. பாடத்தோடு தொடர்புடைய செய்திகளையும் இடையிடையே சொல்ல வேண்டும்.

6. பாடத்தை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திச் உரைக்க வேண்டும்.

7. பெரிய கருத்துக்களையும் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளச் செய்வன நகைச்சுவைகளும், சின்னக் கதைகளும் என்பதை ஆசிரியர் மனதில் கொள்ள வேண்டும்.

8. பாடத்திற்கு ஏற்ப கரும்பலகை, பவர்பாயின்ட், ஒலி, காணொளி, கணினியின் துணைகொண்டு விளக்கமுறைகளைக் கையாளவேண்டும்.

9. மாணவர்களிடையே வினாக்களை எழுப்ப வேண்டும். அவர்கள் தவறாகச் சொன்னாலும் அவர்களின் குறைகளை அவர்களுக்குப் புரியவைத்து மீண்டும் சொல்ல ஊக்குவிக்கவேண்டும்.

10. “பாராட்டு“ ஆசிரியர் கையிலிருக்கும் மிகப் பெரிய ஆயுதம் என்பதை ஆசிரியர் நினைவில் கொள்ளவேண்டும்.

11. ஆசிரியர்கள் திட்டுவதாலோ, தண்டனை தருவதாலோ மாணவர்களைத் திருத்திவிடமுடியாது என்பதை உணர்ந்து, அன்பாகப் பேசி அவர்களுக்கு அவர்களின் தவறைப் புரியவைக்க வேண்டும்.

12. மாணவர்கள் மதிப்பெண் வாங்குவதைவிட அப்பாடப் பொருள் குறித்த ஆர்வமும், போதிய அறிவும், படைப்பாக்கத்திறனும் கொண்டவர்களாக உருவாக வேண்டும் என்பதை ஆசிரியர் புரிந்துகொள்ள வேண்டும்.

13. மாணவர்கள் தம் துறை சார்ந்து புதியன படைக்க ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருத்தல் வேண்டும்.

14. அந்தக் காலத்தில மாணவர்கள் வகுப்பு வேளையில் அலைபேசியை வைத்து குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள், இன்று நவீன தொழில்நுட்பத்துடனான அலைபேசிகளில் முகநூலில் (பேஸ்புக் சாட்) அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கையிலிருந்து நாம் அந்த அலைபேசியைப் பறிப்பது எளிது. ஆனால் அதைவிட நம்மை ஏமாற்றி அவர்கள் வகுப்பு வேளையில் அதனைப் பயன்படுத்துவது அதைவிட எளிது. அதனால் காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்களும் அவர்களின் மனநிலையையும் அறிவுத் திறனையும் புரிந்து கொண்டு அவர்களே அதனைப் புறந்தள்ளும் விதமாக புதிய தொழில்நுட்பங்களுடன் பாடம் நடத்த வேண்டும். அச்சூழலில் அவர்களே அந்த அலைபேசிகளைத் தூக்கி எறிந்துவிடுவார்கள்.

15. இவை எல்லாவற்றுக்கும் மேலே மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்க வேண்டிய பெரும் பணி ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

மாணவர்கள் வெள்ளைத் தாள்!
அதில் ஆசிரியர் என்ன எழுதினாலும் அப்படியே பதிகிறது!!

குறைந்து வரும் குருபக்தி

குறைந்து வரும் குருபக்தி

நல்ல ஆசிரியரால் நல்ல மாணவரை உருவாக்கமுடியும்
நல்ல மாணவரால் நல்ல ஆசிரியராக உயரமுடியும் என்பது பொன்மொழி.

வியாபாராமயமாகிவிட்ட கல்விச் சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு கேள்விக்குறியாகியிருக்கிறது.
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்ற பழமொழி கூறப்படுவதுண்டு. இதன் அர்த்தத்தை அறியாமல் சிலர், ஏளனமாகக் கூறுவதுண்டு. ஆனால், போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பதன் சுருக்கம்தான் அது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.
சமுதாயத்தில் மாதா, பிதாவுக்கு அடுத்த நிலையில் குரு தெய்வமாக போற்றப்படுகின்றனர். மன்னர் காலம் தொட்டு, எத்தகைய உயர் நிலையில் இருப்பவரும் ஆசிரியருக்கு தலைவணங்குவர்.
வருவாய் குறைந்த நிலையிலும், தன்னிடம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, சிறந்த கல்வி போதிப்பதை கடமையாகச் செய்தனர். வீட்டில் வறுமை வாட்டி வதைத்தாலும், நேர்த்தியான உடையணிந்து மிடுக்காக கல்விச் சாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கு கல்வியைப் போதித்தனர்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், பாடங்களைச் சரியாகப் படிக்காவிட்டாலும் கண்டிப்பதில் பாகுபாடு காட்டுவதில்லை. பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத கல்வி அறிவை குழந்தைகள் பெற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினர்.
பள்ளிக் கூடங்களுக்கு சென்று ஆசிரியர்களைச் சந்தித்து, தனது மகனை கடுமையாக தண்டித்தாவது படிக்க வையுங்கள் என மன்றாடிக் கேட்ட பெற்றோர்கள் ஏராளம்.
அந்தளவுக்கு கல்வியின் மீது பெற்றோர்களுக்கு மரியாதையும், ஆசிரியர்கள் மீது நம்பிக்கையும் இருந்தது. ஆசிரியர்களும் மாணவர்களை படிக்க வைப்பதற்கு முடிந்தளவு முயற்சி எடுப்பர்.
சரியாக படிக்காத மாணவர்களை கடுமையாக தண்டிக்கவும் செய்தனர். இதை பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டனர். வீட்டில் வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் தவித்த ஏராளமான ஏழை மாணவர்களை, தங்களது சொந்தச் செலவில் படிக்க வைத்த ஆசிரியர்களும் உண்டு.
எத்தகைய உயர் பதவிகளை அடைந்த போதிலும், ஆசிரியரை நேருக்கு நேர் சந்திப்பதற்குக்கூட மாணவர்கள் தயக்கம் காட்டினர். ÷
மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களுக்கு தனிமரியாதை கொடுப்பதும் வழக்கம். அந்தளவுக்கு சமுதாயத்தில் ஆசிரியர்கள் மரியாதையுடன் போற்றப்பட்ட பொற்காலம் அது.
காலப்போக்கில் கல்வி வியாபாரமாக்கப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியப் பணியின் மீதிருந்த மரியாதை மெச்சும் நிலையில் இல்லை.
கல்வி போதிப்பதை சேவையாக செய்யும் ஆசிரியர்கள் பல ஆயிரம் பேர் இருந்தாலும், சில ஆசிரியர்களின் தவறான செயல்களால் அந்த இனத்துக்கு இருந்த கௌரவத்துக்கே ஆபத்து வந்துள்ளது.
இன்றைக்கு அரசுகளும் ஆசிரியர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருகின்றன. எந்தக் குழந்தையாக இருந்தாலும், தேவைப்படும்போது கண்டித்தால்தான், சொல்வதைக் கேட்கும். அந்தக் குழந்தை நல்வழியில் செல்லும்.
பெரும்பாலான ஆசிரியர்களும் சேவை மனப்பான்மையிலிருந்து விலகிச் செல்வதால், மாணவர்களின் மீது முழு ஈடுபாட்டைக் காட்ட முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
கூட்டுக் குடும்பச் சிதைவு, வியாபாரமாக்கப்பட்டுவரும் கல்வி போன்ற பல்வேறு காரணிகளால், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையேயான சுமூக உறவிலும் இணக்கம் இல்லாமல் போய்விட்டது.
இதனால், கட்டுப்பாடு இழந்த காளையர்களாக மாணவர்களில் பலரும் தவறான வழிக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. தரமான கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.
இன்றைக்கு பொறியியல் படிப்பு மீதான நம்பிக்கை, மாணவர்களிடம் குறைந்து வருவதற்கும் இதுவே காரணியாக அமைந்துள்ளது.
இந்த நிலை மாற வேண்டும். அரசுகள் என்னதான் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க பல ஆயிரம் கோடி திட்டங்களைத் தீட்டினாலும், ஆசிரியர்கள் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
ஆசிரியர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய உயர்நிலையிலிருந்து தடம் புரளாமல், தரமான கல்வியைப் போதிக்க வைராக்கியம் கொள்ள வேண்டும். மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
ஆசிரியர் - மாணவர் உறவு மேம்பட வேண்டும். எந்தக் கல்வியாக இருந்தாலும், அதனைத் தரமாகக் கற்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

அ எழுதச் சொல்லித்தந்தவர் ஆசிரியாராயினும் – அதை
அடி மனதில் பதியவைத்த அம்மாவும் ஆசிரியர்தான்!

மதிப்பெண் எடுக்கக் கற்றுத்தருபவர் ஆசிரியராயினும்
மதிப்போடு வாழச் சொல்லித்தரும் தந்தையும் ஆசிரியர்தான்!

அன்பு ஆழமானது என்று எடுத்துரைப்பவர் ஆசிரியராயினும்
அன்பின் ஆழத்தை உணர்த்தும் காதலியும் ஆசிரியர்தான்!

இன்பதுன்பங்களை அடையாளப்படுத்துபவர் ஆசிரியராயினும்
இன்பதுன்பங்களில் துணைநிற்கும் மனைவியும் ஆசிரியர்தான்!

சிரித்துவாழ வேண்டும் என்று பாடம் புகட்டுபவர் ஆசிரியராயினும்
சிரித்துக் கொண்டே இருக்கும் குழந்தையும் ஆசிரியர்தான்!

நட்பின் இலக்கணத்தை எடுத்தியம்பியவர் ஆசிரியராயினும்
நட்பின் இலக்கணமாய் திகழும் நண்பர்களும் ஆசிரியர்கள்தான்!

போராட்டம் என்றால் என்ன என்றுரைப்பவர் ஆசிரியராயினும்
போராட்டத்தை ஏற்படுத்தும் எதிரியும் ஆசிரியர்தான்!

இதுதான் ஒழுக்கம் என்றுரைப்பவர் ஆசிரியராயினும்
இதுதான் வாழ்க்கை என உணர்த்தும் யாவரும் ஆசிரியர்தான்!

நிலம், நீர், தீ, காற்று, வான்..
பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என நாம்

திரும்பிப்பார்க்க,
போலச்செய்ய,
தன்னம்பிக்கைகொள்ள,
தவறுகளைத் திருத்திக்கொள்ளத் துணைநிற்கும்,
இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் கூட நமக்கு ஆசிரியர்தான்!

அதனால் இதுவரை.....
ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

இன்றுமுதல்...
காலைக் கதிரவனுக்கும்,
புல்லின் பனித்துளிக்கும்,
பூத்துச் சிரிக்கும் மலருக்கும்,
துயிலெழுப்பும் பறவைகளுக்கும் காலை வணக்கம் சொல்வோம்!

விலங்குகளின் விவாதத்தையும்,
மழையின் சொற்பொழிவையும்,
காற்றின் கவிதையையும்,
செவிமடுத்துக் கேட்டு அவற்றிடம் வினாத் தொடுப்போம்!

தாவரங்களின் அழிவையும்,
மனிதனின் இழிவையும்,
இயற்கையின் பெருந்தன்மையையும்,
ஆராய்ந்து தேர்வு எழுதுவோம்!
இவ்வாறு நம்மைச்சுற்றிய மனிதர்களிடமும், இயற்கையின் கூறுகளிடமும் பாடம் கற்ற நாம் நம்மையே மதிப்பீடு செய்து பார்ப்போம்...

பாடம் பயிற்றுவோர் நமக்கு முழு நேர ஆசிரியர்கள்!
உறவுகள் நமக்கு வாழ்நாள் ஆசிரியர்கள்!
சமூகம் நமக்குப் பகுதிநேர ஆசிரியர்கள்!
நூலகங்கள் வாய் பேசாத ஆசிரியர்கள்!
பறவைகள் நம்மைப் பறக்கச் செய்த ஆசிரியர்கள்!
விலங்குகள் நம்மை மனிதனாக்கிய ஆசிரியர்கள்!
இயற்கையின் கூறுகள் நமக்கு என்றென்றும் ஆசிரியர்கள்! என்பது புரியும்.

இப்போது நமக்குத் தோன்றும்..
ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்! என்று!!

வாழ்க்கை என்னும் பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஓராயிரம் பாடங்களை தினம் கற்று வருகிறேன்,
21ஆண்டுகாலம் நான் வகுப்பறைகளில் கற்றதைவிட நூலகங்களில் கற்றவை அதிகம் - அதனால்

நூல்களும் எனக்கு ஆசிரியர்கள் தான்!
இத்தனை ஆண்டுகாலம் எத்தனையோ தேர்வுகள் எழுதியிருக்கிறேன் இருந்தாலும், மாணவர்களைப் போன்ற கேள்வித்தாள்களை நான் எங்கும் பார்த்ததில்லை – அதனால்
மாணவர்களும் எனக்கு ஆசிரியர்கள் தான்!

என்வாழ்வில் எத்தனை எத்தனை ஆசிரியர்கள்..!!!
எல்லோரும் உயர்ந்தவர்களே!
என்னை உயர்த்தியவர்களே!!

இருந்தாலும் இவர்களுள் மிக உயர்ந்த ஓர் ஆசிரியர் இருக்கிறார்...
ஆம் அவர்தான் “அனுபவம்“

அனுபவத்தைவிடப் மிகப் பெரிய ஆசிரியரை இதுவரை நான் கண்டதில்லை!

இத்தனை ஆசிரியர்கள் இருந்தாலும், நான்
ஆசிரியர் தினம் கொண்டாடுவதில்லை....
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுகிறேன்!

அப்ப நீங்க..??

திருவண்ணாமலை மாணவர்களுடன் உரையாடுகிறார் மோடி

திருவண்ணாமலை மாணவர்களுடன் உரையாடுகிறார் மோடி

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தன்று சிறந்த ஆசிரியர்களுக்கு டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

இந்நிலையில், ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்களுடன் வீடியோ-கான்பரன்சிங் மூலம் கலந்துரையாட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லியில் பள்ளி மாணவர்கள் மத்தியில் நேரில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அவரது உரையை கேட்கவும், அவருடன் வீடியோ-கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடவும், கேள்விகள் கேட்கவும் தமிழ்நாட்டில் திருவண் ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாட மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையத்தில் (நிக் சென்டர்) பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நல்லாசிரியரின் நற்பண்புகள் யாவை?

நல்லாசிரியரின் நற்பண்புகள் யாவை?

வரவிருக்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளைப் (செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்) பெருமைப்படுத்தும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது.

நன்னூல் கூறும் நல்லாசிரியர்

பவணந்தியார், நன்னூலில் (நூற்.26-30) நல்ல ஆசிரியரின் பண்புகள், மாண்புகள் முதலியவற்றை விரிவாகவும் நுட்பமாகவும் தொகுத்துக் கூறியுள்ளார். ஆசிரியர், நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர் போன்ற மாண்புடையவர் என்கிறார்.

1. நிலத்தின் மாண்புகள்:

நிலம் ஓரிடத்தில் நின்று அதை முழுவதும் பார்க்கவே முடியாதபடி பரப்பினால் பெருமையுடையது.

எவ்வளவு பாரத்தையும் சுமக்கும் திடமுடையது.

மனிதர்கள் அகழ்தல், பிளத்தல் முதலிய குற்றங்களைச் செய்தாலும், அவற்றைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையுடையது.

தக்க பருவதிலே உழவர்கள் செய்கின்ற உழவுத்தொழில் முயற்சிகளுக்குத் தகுந்தபடி அவர்களுக்குப் போதிய பலன்களைத் தரவல்லது.

ஆசிரியரின் மாண்புகள்:

தமது பரந்துபட்ட கல்வியறிவால் பெருமையுடையவர்.

தம்மிடம் வாதமிடுபவரைத் தாங்கும் திண்மை உடையவர்.

தம்மை இகழ்தல், எதிர்த்தல் போன்ற குற்றங்களையும் பொறுத்துக் கொள்பவர்.

தமது மாணவர்களுக்குத் தக்க பருவத்தில், தக்க அளவு, தகுந்த பயன்களைத் தருபவர்.

2. மலையின் மாண்புகள்:

உருவில் பெரியது. தன்னிடத்தில் பலவிதப் பொருள்களை உடையது.

எந்த வகையான பேராற்றலாலும் கொஞ்சமும் அசைக்க முடியாத அழுத்தம் உடையது.

தூரத்தில் இருப்பவரும், தன்னை எளிதில் காணக்கூடிய பெருமிதத் தோற்றமுடையது.

மழை பொழியாமல் வறண்டு போனாலும், எல்லா உயிர்களுக்கும் தன்னிடமுள்ளதைத் தரவல்ல கொடைப்பண்பு உடையது.

ஆசிரியரின் மாண்புகள்:

கல்வியறிவால் பெருமையுடையவர். புலமையுடைய எவராலும் தம்மை வாதத்தால் அசைக்க முடியாத அழுத்தமுடையவர்.

எண்ணற்ற நூற்பொருள்களை உணர்ந்தவர்.

அவரைக் காணாதவரும் (தூரத்தில் இருப்பவரும்) அவரது புகழைத் தெரிந்துகொள்ளக் கூடிய தன்மையுடையவர்.

மாணவர் தரும் செல்வம் குறைவாகவே இருந்தாலும் தம்மிடமுள்ள குறையாத கல்விச் செல்வத்தை அவர்களுக்கு அள்ளித்தரும் கொடையாளி.

3. தராசின் மாண்புகள்:

தராசு ஐயம் இல்லாதபடி, பொருளின் அளவை நடுநிலைமையுடன் நிறுத்துக் காட்டும்.

ஆசிரியரின் மாண்புகள்:

மாணவர்களிடம் சற்றும் சந்தேகம் எழாதபடி பாடங்களைத் தெளிவாகக் கற்பிப்பவர். எல்லோரிடமும் நடுவுநிலைமையுடன் பழகுபவர்.

4. மலரின் மாண்புகள்:

மங்கலமானது.

எல்லாக் காரியங்களிலும் தேவையானது.

எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஏற்பது.

மென்மையானது.

குறித்த பொழுதில் மலர்வது.

ஆசிரியர் மாண்புகள்:

மங்கல காரியங்களில் பங்கேற்பவர்.

எல்லாக் காரியங்களும் நிறைவேற முன்னிற்பவர்.

எல்லோராலும் ஏற்கத்தக்கவர்.

மென்மையான பண்புகளைக் கொண்டவர்.

பாடங்களைக் கற்பிக்கும்போது மகிழ்ச்சியுடன் இருப்பவர்.

இவ்வாறு நிலம், மலை, தராசு, மலர் ஆகிய நான்கு உவமைகளின் வாயிலாக, நல்லாசிரியரின் நற்பண்புகளை எடுத்துக்கூறி, அவர்கள் நன் மாணாக்கர்களை உருவாக்க வழி வகுத்துள்ளார் பவணந்தியார்.

மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு!!!! ..

மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு!!!! ..

மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..

1. வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்;

2. நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு;

3. தாகத்தை தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்;

4. கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்டிர்;
5. கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;

6. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்;

7. நீராட வருபவனின் பாவம் தீர குளிக்க இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவை ஏழும் இருந்தும் பயனற்றவை.

ஆசிரியர்களுக்குத் தான்,முதல்இடம்

ஆசிரியர்களுக்குத் தான்,முதல்இடம்

ஆசிரியர் என்பவர் கற்பிப்பவர்; குரு என்பவர், கற்று வழி நின்று, மாணவருக்கு வழிகாட்டுபவர். "எங்கு நடப்படுகிறாயோ, அங்கு மலராகு' என்பது பொன் மொழி.குறிக்கோள் இல்லாத மாணவ வாழ்க்கை, முகவரியில்லா கடிதத்திற்கு சமம். அவர்களின் எதிர்காலம், ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்பத்திலிருந்தே, மாணவர் மனதில் பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை காணும் போது, ஆசிரியரின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றும். இதை சொல்வதை விட, உணர்வு பூர்வமாக உணர முடியும்.தன்னிடம் பயிலும் மாணவர்களை, நல்ல மாணவர்களாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும், ஆசிரியரைச் சேரும்.ஒரு சிறந்த ஆசிரியரின் பண்புகள், குணங்கள், முகம் பார்க்கும் கண்ணாடியாக மனதில் பதியும். அவர்கள், ஓர் காலக் கண்ணாடி.ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்களின் உழைப்பை, அதிகம் பாராட்ட வேண்டும். ஆரம்பக் கல்வி பயில வரும் குழந்தைகளிடம், பொறுப்பும், சகிப்புத் தன்மையும், அன்பும், அரவணைப்பும் மிகவும் தேவை.

அவர்களை அடித்தோ, மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது; அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் ஏறாது. மழலைச் செல்வங்களுக்கு பாடம் சொல்லித்தரும் போது, ஆசிரியரும், குழந்தையாகவே மாற வேண்டும். அவர்களின் மழலைப் பேச்சும், சிரிப்பும், புதியதோர் உலகிற்கு சென்ற உன்னத உணர்வு, மனதில் ஏற்படும்.கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றுவதிலுள்ள மகிழ்ச்சி, சற்று வித்தியாசமானது. அங்கு பயிலும் மாணவன், எத்தகைய உயர்நிலைக்குத் தான் சென்றாலும், ஆசிரியரையும், அப்பள்ளியையும் மறப்பதில்லை.

மாறுபட்ட குணங்கள், தோற்றங்கள், நடத்தைகள், சிந்தனைகள் என்ற, இனிய கலவை அனைத்தும், ஒரே இடத்தில் காணலாம். அதுதான் வகுப்பறை.அர்ச்சுனனுக்கு ஒரு துரோணாச்சாரி போல, கொள்ளை, கொலை பல புரிந்து வந்த திருடனை, "ராமாயணம்' என்ற வரலாற்றுக் காவியத்தை படைக்கும் அளவிற்கு, வால்மிகி உருவாகக் காரணமான ஒரு நாரதரைப் போல, விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல, ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு வாழ்வியல் ஆசான்கள், இன்றும் இருக்கின்றனர்.நாட்டின் எதிர்காலம், வகுப்பறையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது.

சிறந்த ஆசிரியர் என்பவர், சொல்லுக்கும், செயலுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும். அப்போது தான் ஆசிரியப் பணி சிறக்கும்.மாணவர்களை சிறந்த பண்பாளராக ஆக்க முயலும் ஆசிரியர்கள், முதலில் சிறந்த பண்பாளராக இருக்க வேண்டும். ஒரு சிலரின் தகாத செயல்களால் தற்போது, ஒட்டு மொத்த ஆசிரிய சமூகத்திற்கே, தலைக்குனிவு ஏற்படுகிறது. வகுப்பறையில் சரியாக சொல்லித் தராத ஆசிரியர்கள் சிலர், தன்னிடம் வந்து, டியூஷன் படிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். இது தவறல்லவா?ஒரு ஆசிரியர் தவறு செய்தால், எட்டாத அளவிற்கு, எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்பதை, கருத்தில் கொள்ள வேண்டும். இதை உணர்ந்து செயல்பட்டால், ஆசிரியர் பணி செழிக்கும்; நாடு சிறக்கும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம். டாக்டர், இன்ஜினியர் என்று சொல்வதில்லை. தமிழ் சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல், "அன்னையும், தந்தையும் குழந்தையை உலகிற்கு தருகின்றனர்; ஆனால், ஒரு நல்ல ஆசான், இவ்வுலகத்தையே குழந்தைக்கு தருகிறான்!'பிறநாடுகளில் இந்த அளவிற்கு, மாணவர் மீது, அக்கறை காட்ட மாட்டார்கள் என்கின்றனர்.

தன்னைத் தட்டிக் கேட்பதையோ, கண்டிப்பதையோ, இப்போதுள்ள மாணவர்கள் விரும்புவதில்லை. சுயகவுரவம் பாதிக்கப்படுவதாக எண்ணி, தகாத வழியில் செல்கின்றனர்.
"அடிக்க ஒரு கை, அணைக்க ஒரு கை' என்பர். தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது; தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தி
ஆகணும்."பாதை தவறிய கால்கள், விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை' சிந்தியுங்கள். அன்று, உங்களின் கரம் பிடித்து, கரும்பலகையில் எழுத வைத்ததால் தான், இன்று கணினி முன், கம்பீரமாய் உட்கார்ந்து கடமையாற்ற முடிகிறது.

இதை மறவாதீர்.ஒரு சாதாரணக் குடியில் பிறந்து, கல்வி கற்று, ஆசிரியப் பணியை ஆர்வமுடன் ஏற்று, அதைச் செவ்வனே முடித்து, இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று, "பாரத ரத்னா' என்ற மகுடத்தை சூட்டிக் கொண்டவர், டாக்டர் ராதாகிருஷ்ணன். இப்பெறற்கரிய பேற்றை, சாதனையை, இதுவரை யாரும் பெறவில்லை. ஒவ்வொரு இந்தியனும், இதுகுறித்து, பெருமிதம் கொள்ள வேண்டும். ஞானத்தின் சுடரை ஏற்றுகிற இப்பணியை, நன்றியுடன் நினைவு கூறுவோம்.ஆசிரியரிடம் கற்ற பாடங்களே, மாணவர்களுக்கு உந்து சக்தியாக மாறி வழிகாட்டுகிறது. வேறு எந்த துறையைக் காட்டிலும், அதிக பொறுப்புகளும், முக்கியத்துவமும் வாய்ந்தது, ஆசான்களின் பயணம்.

மண் கலவையை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பதில் கை தேர்ந்தவர்கள், "குடத்துள் விளக்காய்' இருக்கும், மாணவரின் திறமையை வெளிக்கொணர்ந்து, "குன்றின் மேலிட்ட விளக்காய்' பிரகாசிக்க செய்வது, ஆசிரியரின் தனிச்சிறப்பு.அரிஸ்டாட்டில், தம் மாணாக்கர் பலருடன், ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களிடம், "நீங்கள் இங்கேயே நில்லுங்கள். ஆற்றில் சுழல் உள்ளதா என பார்த்து வருகிறேன்...' எனக் கூறி ஆயத்தமானார். அதற்குள் ஒரு மாணவன், நீரில் இறங்கி நீந்தி, அக்கரைக்குச் சென்றான்."குருவே சுழல்கள் இல்லை, தைரியமாய் ஆற்றை கடக்கலாம் வாருங்கள்...' என்றான். அரிஸ்டாட்டில், "உன்னைச் சுழல்கள் இழுத்துச் சென்றால், என்னவாகி இருக்கும்?' என்றார்.அதற்கு அம்மாணவன், "ஆயிரம் அரிஸ்டாட்டில்களை உருவாக்கும், வல்லமை பெற்றவர் நீங்கள். அரிதான குருவான உங்களை இழந்தால், நாங்கள் பரிதவித்துப் போய் விடுவோம்' என்றான். அப்படி ஓர் அற்புதமான ஆசிரியர், மாணவர் உறவு அமைவது, சமூகத்திற்கு புது சுவாசத்தை கொடுக்கும்.

மாணவ, மாணவியருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்... சுற்றுப்புறமும், சூழ்நிலையும், கூடாத
நட்பும் தான், ஒருவனை குற்றவாளியாக்குகிறது. இளமையிலிருந்தே அன்பு, கருணை, பணிவு, பக்தி, ஒழுக்கம், நேர்மை, தன்னம்பிக்கை, பொறுமை, அடக்கம், சிறந்த நட்பு, பிறரை மன்னித்தல், விடா முயற்சி, பெற்றோரைப் பணிதல், ஆசிரியருக்கு கீழ்ப்படிந்து நடத்தல், சுற்றத்தாரை மதித்தல் ஆகிய, நற்பண்புகளை, பின்பற்றி நடந்தால், பெற்றோருக்கு நல்ல மகனாக, நல்லாசிரியருக்கு சிறந்த மாணாக்கனாக, அவனது சமூகத்திற்கே உயர்ந்த குடிமகனாக விளங்க முடியும்.
நாம் மனிதனாகப் பிறந்ததே, சாதிப்பதற்காகத் தான் என்ற எண்ணம், மேலோங்க வேண்டும். தோல்வியைக் கண்டு துவளாமல், சவாலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

பள்ளியையோ, கல்லூரியையோ விட்டு வெளியேறும் போது, "இவ்வளவு சிறந்த ஆசிரியர்களைப் பிரிகிறோமே...' என, மாணவரும், "நல்ல மாணவர்கள், நம்மை விட்டு செல்கின்றனரே...' என, ஆசிரியர்களும், நினைத்துப் போற்றும் வண்ணம், பசுமை நிறைந்த நினைவுகளோடு, வெற்றி நடை போட்டு வாருங்கள்.உலகில், தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்பவர், என்றும் நிலைத்து நிற்பர். இந்த வரிசையில் ஆசிரியர்களுக்குத் தான்,முதல்இடம்என்பதுயதார்த்தஉண்மை.

-ஜெயஸ்ரீ சமூக நல ஆர்வலர்-

இ-மெயில்: suryanidhi1999@hotmail.com_.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!