Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 22 August 2014

புதிய முயற்சிகளே வெற்றிக்கு அடிப்படை: அப்துல் கலாம்

புதிய முயற்சிகளே வெற்றிக்கு அடிப்படை: அப்துல் கலாம்
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளே வெற்றிக்கு வழிவகுக்கும் என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் கூறினார்.

சென்னை திருவேற்காட்டில் உள்ள எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களிடையே அப்துல் கலாம் பேசியது:

ஆண்டுதோறும் பொறியியல் துறையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் பெருகிவருகின்றன. அதற்கேற்றவாறு, மாணவர்களின் அறிவுத் திறன் மேம்பட்டு வருகிறது. இன்றைய சூழலில், கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்கள் தனியாகவும், குழுவாகவும் புதிய தொழில்களை மேற்கொண்டு அதில் வெற்றி பெறுகின்றனர்.

யாராக இருந்தாலும் அவர் எந்தத் தொழிலைச் செய்தாலும், அதில் புதுமையைப் புகுத்தி, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் வெற்றி சாத்தியமாகும். கல்வி, தொழில் என நீங்கள் சார்ந்துள்ள அனைத்து விதமான செயல்பாடுகளிலும் சமுதாயத்துக்கான பங்களிப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.
தாமஸ் ஆல்வா எடிசன், மேரி கியூரி அம்மையார், ரைட் சகோதரர்கள், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் ஆகியோர் தாங்கள் எடுத்த முயற்சிகளில் எளிதாக வெற்றி பெறவில்லை.

கணக்கற்ற தோல்விகளைச் சந்தித்த பிறகுதான் அவர்களால் சாதிக்க முடிந்தது. எனவே, சின்னச் சின்ன தோல்விகள் ஏற்பட்டாலே துவண்டு போகும் மனநிலையை முதலில் மாற்றுங்கள். எது வந்தாலும் மன உறுதியுடன் எதிர்கொள்வேன் என்ற பக்குவம் வேண்டும். இலக்கை அடையும் வரை உங்கள் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மாணவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு அப்துல் கலாம் பதிலளித்தார்.

கேள்வி: வருங்காலத்தில் ஆசிரியர்களின் இடத்தை தொழில்நுட்ப வளர்ச்சியால் நிரப்ப முடியுமா?
பதில்: ஒரு கம்ப்யூட்டரால் மற்றொரு கம்ப்யூட்டரை உருவாக்க முடியும். ஆனால், அதே கம்ப்யூட்டரால் மனிதனை உருவாக்க முடியாது. அதேபோல், வழிகாட்டு நெறியும், கருணை உள்ளமும் படைத்த ஆசிரியர்களின் இடத்தை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நிரப்ப முடியாது.

கே: இந்தியா 2020-இல் வல்லரசாகும் என்று நீங்கள் கூறியது, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் எந்தளவுக்குச் சாத்தியம்?
ப: உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப, நமது பொருளாதாரமும் அடிக்கடி சில மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இடையிடையே ஏற்பட்ட சில பின்னடைவுகளுக்களால் நமது முன்னேற்றம் முற்றிலுமாக தடைபட்டு விடாது. நாட்டின் தொழில்நுட்பம், இளைஞர்களின் அயராத முயற்சிகள் நமது இலக்குகளை அடைய உதவும்.

கே: உங்களது நூல்களில், விஞ்ஞானி விக்ரம் சாராபாயை சில இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளீர்கள். அதன் மூலம் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: வாழ்வில் நீங்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டிய மனிதர்களில் அவரும் ஒருவர் என்பதை உங்களுக்கு நினைவூட்ட அந்த மேற்கோள் பயன்படும் என நினைக்கிறேன்.

கே: அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளதே?
ப: உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க துறைகளில் இந்தியா பிற நாடுகளுக்கு முன்னோடியாக இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உங்களைப் போன்ற இளைஞர்களின் ஆற்றலால்தான் நமது ஒட்டுமொத்த வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்த முடியும்.
நிகழ்ச்சியில், கல்லூரியின் தாளாளர் டி.சபரிநாத், முதல்வர் எஸ்.சுயம்பழகன், இயக்குநர் பி.வெங்கடேஷ்ராஜா, தலைவர் டி.துரைசாமி, செயலர் டி.தசரதன், இணைச் செயலர் எஸ்.கோபிநாத், துணைத் தலைவர் டி.பரந்தாமன், பொருளாளர் எஸ்.அமர்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

‘குரூப் ஸ்டடி’ சரியா? தவறா?

‘குரூப் ஸ்டடி’ சரியா? தவறா?
‘குரூப் ஸ்டடி’ என்ற ஒரு விஷயத்தை, ‘படிப்பதாக கூறி ஏமாற்றும்‘ ஒரு வித்தை என்றே இன்றும் பலர் நினைக்கின்றனர்.

இன்றைய நிலையில் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் ‘குரூப் ஸ்டடி’யில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. ஏனெனில் நண்பர்களுடன் சேர்ந்து படிக்கிறேன் என்ற போர்வையில், அரட்டை அடித்து நேரத்தை தங்களின் பிள்ளைகள் வீணாக்குகின்றனர் என்றே அவர்கள் கவலைப்படுகின்றனர்.

‘குரூப் ஸ்டடி’ என்ற வெற்றிகரமான பயிற்சியை சரியாக அமைத்துக்கொள்ளவில்லை எனில், பெற்றோர்களின் கவலை நிஜமாகிவிடும். ஆனால் ‘குரூப் ஸ்டடி’, அதன் உண்மை அம்சத்தோடு மிகச் சரியாக மேற்கொள்ளப்பட்டால், அதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

‘குரூப் ஸ்டடி’ என்பது தேர்வு நேரத்தில் மட்டுமின்றி, எல்லா காலங்களிலும், மாணவர் பருவம் முழுவதும் கடைபிடிக்கத்தக்க ஒரு வெற்றிகரமான அம்சம். சிறந்த நன்மையைத் தரும் ‘குரூப் ஸ்டடி’யை எவ்வாறு மேற்கொள்வது என்று மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இங்கே:
* ‘குரூப் ஸ்டடி’க்கு தகுந்த நபர்கள் அமைவது முதலில் மிக அவசியமானது. ஒரே வகுப்பில் அல்லது ஒரே பள்ளியில் படிக்கும் அல்லது அருகருகே வசிக்கும் மாணவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். படிப்பில் அக்கறையும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஆர்வமும் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 மாணவர்கள் வரை பங்கேற்கலாம்.

* ஒரு நல்ல ‘குரூப் ஸ்டடி’ என்பது மற்றொரு வகுப்பறை போன்றது. ஏனெனில் பல மாணவர்கள் சேரும்போது ஒரு பாடத்தில் தங்களின் தனிப்பட்ட புரிந்துணர்வுகளை பரவலாக பகிர்ந்துகொள்கின்றனர். ஒரு பாடத்தை படிக்க எடுத்துக்கொள்ளும்போது, எத்தனை மாணவர்கள் இருக்கிறார்களோ அத்தனை பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். அந்த பாடத்தை அனைவரும் முடிக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
முடிவில் பிரித்துக்கொண்ட ஒவ்வொரு பகுதியிலும் அவரவர்களுக்கு புரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனால் ஒரே பாடத்தில் பரவலான புரிதல் ஏற்படும். அந்த பாடத்தைப் பற்றிய பயமும் போகும். ஒருவேளை அதுசம்பந்தமான ஏதேனும் குழப்பங்கள் தோன்றினால், ஆசிரியரிடம் கேட்டு சரிசெய்துகொள்ள வேண்டும்.

* பகுதிகளைப் பிரித்துக்கொண்டு படிக்கும்போது, தங்களின் பகுதியை நன்கு படித்து தெளிவாக விளக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். எனவே ஒவ்வொருவரும் ஆழமாகவும், கவனமாகவும் படிப்பார்கள். இதனால் ஒரு ஆரோக்கியமான படித்தல் போட்டி அங்கே உருவாகும். ஒருவருக்கு சரியாக தெரியாத விஷயம் மற்றவருக்கு நன்றாக தெரிந்திருக்கும். இதன்மூலம் பாடத்தில் எழும் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.

* ‘குரூப் ஸ்டடி’க்கு தேர்ந்தெடுக்கும் இடம் பற்றி யோசிக்க வேண்டியதும் முக்கியம். எந்த தொந்தரவும், இரைச்சலும் இல்லாத, கவனம் சிதறும் வகையிலான விஷயங்கள் இல்லாத இடமாக இருந்தால் மிகவும் நல்லது. ஒரு நல்ல அறையாகவோ, மொட்டை மாடியாகவோ மற்றும் ஒதுக்குப்புறமான மரத்தடியாகவோ இருக்கலாம்.

* ‘குரூப் ஸ்டடி’யில் தேர்வுக்கான ஒரு மாதிரி கேள்வித்தாளை உருவாக்கி நண்பர்களுக்குள் எழுதிப் பார்க்கலாம். அவற்றை மாற்றி மாற்றி திருத்திக் கொள்ளலாம். தேர்வுக்கான நேரத்தையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இதனால் ஒரு பயிற்சி தேர்வை எழுதிய அனுபவம் உங்களுக்கு கிடைத்து, தேர்வு பயம் அகன்றுவிடும். விடைத் தாள்களை மாறி மாறி திருத்திக் கொள்வதால் உங்களின் தவறுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படும்.

* ‘குரூப் ஸ்டடி’யில் ஈடுபடும் முன்பாக ஒரு குழு தலைவரை தேர்வுசெய்து கொள்ளுதல் நல்லது. அவர் குழுவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பார். ஒவ்வொரு மாணவரும் மாறி மாறி குழுத் தலைவராக இருக்கலாம். ஆனால் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம்.

தேசிய நல்லாசிரியர் விருது

தரமான கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்பிப்பதால் தேசிய நல்லாசிரியர் விருது : மதுரை ஆசிரியர் பெருமிதம்
மாணவர்களின் கல்விக்கு அப்பாற்பட்டு அவர்களின் ஒழுக்கத்தின் மீதும் கவனம் செலுத்தி வருவதாலேயே தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளதாக மதுரை தலைமை ஆசிரியர் முத்தையா தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்தையாவிற்கு,48, தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே அவருக்கு மாநில நல்லாசிரியர் விருதும் கிடைத்துள்ளது.

அவர் கூறியதாவது: டி. கல்லுப்பட்டி அரசினர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றேன். ஆசிரியராக தேனி மாவட்டம் வருசநாடு ஒட்டணை கிராமத்தில் சேர்ந்தேன். பின் குறவகுடிக்கு மாறுதலாகி போலக்காபட்டியில் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். செம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றியபோது முதன் முதலாக செயல்வழிக்கற்றல் அறிமுகமானது. மாநில அளவில் பயிற்சி பெற்று மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்றுனராக பணியாற்றினேன். மாவட்ட அளவில் அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சியை வழங்க முற்பட்டதும் இங்குதான். 2008ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்தது. தற்போது தேசிய அளவில் நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

செம்பட்டி பள்ளியில் 80 மாணவர்கள் 4 ஆசிரியர்கள் நான் சேர்ந்த போது இருந்த எண்ணிக்கை, தற்போது 200 மாணவர்கள் 12 ஆசிரியர்கள் அங்கு உள்ளனர். மாணவர்களின் கல்வி மட்டுமல்லாது, அவர்களது ஒழுக்கத்தின் மீதும் கவனம் செலுத்தினால் தரமான கல்வி அவர்களுக்கு தானாக கிடைக்கும், என்றார்

சில ஊர்களின் முழுமையான மற்றும் மிக பழைய‌ பெயர்கள்

சில ஊர்களின் முழுமையான மற்றும் மிக பழைய‌ பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.

தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது

பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது

வென்க‌ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது

செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது

எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது

குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது

உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா?

ஒத்தை கால் மண்டபம்,ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது

ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்

விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே

வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு""
வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல

தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே ,இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார்

கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்" ஆகும்

பாண்டிபசார் என்பதன் உண்மையான பெயர் "சவுந்தரபாண்டியனார் அங்காடி" என்பதே .அய்யா சவுந்தரபாண்டியனும்
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது
மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர்,

குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்

நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்

நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது.

வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.

தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.

மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்

ஏர்க்காடு

சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.

திருகோணமலை

இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த ‘கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் தமிழீழத்தில் உள்ள இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குடிதனைப் பெருக்கிக்
கொடிதனை நெருக்கி வாழும்
கோணமாமலை....

என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும்

ரயிலில் கிடைத்த பாடம்!

சமீபத்தில் இணையத்தில் நாம் கண்ட ‘பளார்’ பதிவு இது. நம்மை ரொம்பவே சிந்திக்க வைத்தது. பதிவை எழுதியவரை தொடர்புகொண்டு உரிய அனுமதி பெற்று நமது தளத்தில் அளித்திருக்கிறோம். படியுங்கள்… நமது கருத்துக்களை இறுதியில் தந்திருக்கிறோம்.

ரயிலில் கிடைத்த பாடம்!

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் , குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம் , பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடையாள அட்டை என ஒரு பெருமிதத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

வழக்கமாக இதே ரயிலில் வருவதால் வேலை செய்யும் பேன்ட்ரி ஆர்டர்லிகளுடன் ஒரு சிநேகிதம் இருக்கத்தான் செய்தது .தேவையான இடத்தில் தேவையானவற்றை அவர்கள் தருவதும், புகை பிடிக்க பேன்ட்ரி கார் செல்வதும் எனக்கு பழக்கமாகிபோனது

அப்படி புகைப்பிடிக்க சென்ற போதுதான் அவரை பார்த்தேன். ஆனந்தம் நல்லெண்ணெய் விளம்பரம் போட்ட கை வைக்காத பனியன் ,கிருதா வழியாக வழியும் எண்ணை, கால்சட்டை தெரியுமளவிற்கு தூக்கிகட்டிய லுங்கி , சரியாக சவரம் செய்யாத உலர்ந்த கன்னம், நட்புடன் பார்க்கும் விழிகள். இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று தோணியது , வேறு எங்கே , மளிகைக்கடையில் மடித்து கொடுக்கும் மக்கள் இதே போல் தானே இருக்கிறார்கள் . சரி , இவருக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி அருகே என்ன வேலை , இந்த கோலத்தில் இருக்கும் இந்த ஆள் கண்டிப்பாக ஏ சி டிக்கெட் வாங்க வாய்ப்பே இல்லை , ஆனால் நெடு நேரமாக இங்கு தான் இருக்கிறார் என்ற போது ஒரு சிறிய சந்தேகம் எட்டி பார்த்தது . இருந்தாலும் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் கதவருகே நின்றுகொண்டே சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன் , இன்னும் அந்த ஓட்ட வைத்த புன்னகை அவரிடமிருந்தது .

ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை நெருங்கியபோது அவரிடம் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது , அப்போதுதான் கவனித்தேன் அவர் அருகில் இருக்கும் ஒரு சாக்கு மூட்டையை , எனக்கு இப்போது தெளிவாக புரிந்தது , குப்பை பொறுக்கும் ஆள் தான் அவர் . உடன் ஒரு சின்ன கோபமும் வந்தது , இப்படி இவர்களை ஏ சி பெட்டிகளில் அனுமதித்தால் , ஏதேனும் களவு போய் விட வாய்ப்புகள் அதிகமாயிற்றே , வரட்டும் அந்த டி டி ஆர் என்ற நினைத்துக்கொண்டே மீண்டும் அவரை நோட்டமிட ஆரம்பித்தேன் . இது எனக்கு தேவையில்லாத வேலை தான் என்றாலும், அவர் முகத்தில் தெரிந்த அந்த அம்மாஞ்சி களையும், கண்களில் இருந்த சிநேக பார்வையும் எண்ணை அவரிடம் பேச சொல்லி தூண்டியது.

“என்னங்க ! ஈரோட்டுல இறங்குறீங்களா?”

“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன், இங்க இறங்கி சில்ர வேலைகளே முடிச்சிறனும்!”

“ஒ ,அப்ப பாம்பே வர்றீங்களா !”

“ஆமா சார் ! நீங்க பம்பாய் தான் போறீகளா !” பாமரத்தனமாக கேட்டார்

“ஆமாங்க !” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரயில், நிலையத்தை அடைந்தது

உடன் அவர் இறங்கி கொண்டார் , சாக்கு மூட்டையை தோளில் போட்டுகொண்டு ஒரு கையால் இன்னொரு முனையை பிடித்துக்கொண்டார் . அது அவர் தோளில் தொய்வாகவும் குப்பைகளை போடுவதற்கு ஏதுவாக திறந்த நிலையிலும் இருந்தது. சட சட வென பொறுக்க ஆரம்பித்தார்., ரயில் நின்ற பத்து நிமிடங்களில் அவர் ஓட்டமும் நடையுமாக மொத்த பிளாட்பாரத்தையும் அலசிவிட்டு மறுபடியும் நான் இருந்த பெட்டிக்கே வந்து நின்றுகொண்டார். வண்டி கிளம்பியது.

இம்முறை நான் கேட்டுவிடுவது என்று தீர்மானித்து கொண்டேன் .

இம்மாதிரி கேள்விகளை ஆரம்பிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்கிறது

“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல ”

“இல்ல சார் , அங்க இருந்த நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று கொஞ்சம் படபடப்புடன் பேசினார்

“சாரு பாங்க்ல வேல செய்திகளோ ” கேள்வி கேட்டார் சற்று எதிர்பார்ப்புடன்,

“இல்ல ,ஏன் கேக்குறீங்க ” என்றேன்

“ஒரு சின்ன விஷயம் கேக்கணும், இந்த டாக்ஸ் எப்பிடி கட்டுறதுன்னு கேக்கலாம்னு தான் கேட்டேன் ”

சிரிப்பு வந்தது எனக்கு. “டாக்ஸ் கட்டுறதுக்கு ஆடிட்டர பாக்கணும் , பேங்க்ல வேலை செய்றவங்களுக்கும் டாக்ஸ்க்கும் சம்பந்தமில்ல” என்ன ஒரு அப்பாவியாக இருக்கிறார் , இது தான் இந்திய மக்களின் நிலைமை என்ற அளவிற்கு என் சிந்தனை சென்று கொண்டிருந்த போது தான் என் ஆறாம் அறிவு டக் என விழித்து அந்த சந்தேகத்தை இடி போல் இறக்கியது

“குப்பை பொறுக்கும் ஒருவன் எதற்காக டாக்ஸ் கட்டவேண்டும் என்கிறான்” என்ற எண்ணம் தான் முன்னதாக நான் ஏய்த ஏளனத்தில் கொஞ்சம் வருத்தமாகி அவர் நகர்ந்து கொண்டிருந்த வேளையில் நான் அழைத்தேன்.

“அண்ணே, ஒரு நிமிஷம்” என் வாய் தானா அவரை அண்ணா என்றது. எல்லாம் காசு பண்ணும் இல்லை இல்லை டாக்ஸ் பண்ணும் வேலை .

திரும்ப அருகில் வந்தவரிடம் “யாருக்கு டாக்ஸ் கட்டனும்” என்றேன்

“எனக்குதான் சார் , அதில்லாம நான் பேங்க் பத்தி கேட்டது டாக்ஸ் கொறைக்க என்ன முதலீடு செய்யலாம்னு கேக்கதான் சார் ” என்று சொல்லும்போதே என் தலை சுற்ற ஆரம்பித்தது , ரயில் இரைச்சலின் நடுவேயும் என் உள் மணம் என்னை அசிங்கமாக திட்டியது தெளிவாக கேட்டது .இந்த நேரத்தில் நான் என்ன பேசினாலும் உளறுவது போலத்தான் இருக்கும் ,எனவே சற்று நேரம் மௌனம் சாதித்தேன்

“அண்ணே , டாக்ஸ் கட்டுற அளவுக்கு என்ன தொழில் பண்றீங்க ” அவர் செய்யும் வேலையை இப்போதுதான் பார்த்தேன் , என்றாலும் குப்பை பொறுக்குற நீங்க ஏன் டாக்ஸ் கட்டுறீங்க என்று கேட்பது என் உள் மன பொறாமையையும் வஞ்சத்தையும் காட்டிவிடும் என்று அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் .

அண்ணன், ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார், வேலை என்னவென்றால் கன்னியா குமரியில் இருந்து ரயிலில் ஏறி , முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும் , வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும் , முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள் , எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள் . இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது ,அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம், எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம், மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ,செலவு நாப்பதாயிரம் , வருமானம் இரண்டு லட்சம் , வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் .இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும் , இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன .

மலைத்து நின்றேன். கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான் ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து , கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார். அன்று நான் இருந்த ஏ சி பெட்டி கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது. எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம், அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

“சார் ! எனக்கு தெரிஞ்ச நண்பரோட போன் நம்பர் இது ,இவரு முதலீடு செய்றத பத்தி உங்களுக்கு உதவி செய்வாரு சார் ” என்று கூறி விடைபெற்றேன். இம்முறை என்னையும் அறியாமல் அவரை சார் என்று அழைத்தேன்.

====================================================================

பதிவை படித்ததும் அதை உடனடியாக நமது வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினோம். பதிவாசிரியர் திரு.பார்த்தசாரதிக்கு மின்னஞ்சல் செய்தோம். இரண்டு நாட்களில் நம்மை அலைபேசியில் தொடர்பு கொண்டார். முதலில் அவருக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டோம். பின்னர் மேற்படி பதிவை நமது தளத்தில் வெளியிட அனுமதி கேட்டோம். மகிழ்ச்சியுடன் இசைந்தார்.

மேற்படி பதிவும் அதில் வரும் சம்பவமும் உண்மையா அல்லது கற்பனையா என்கிற நமது சந்தேகத்தை கேட்டோம். உண்மையாக தனக்கு நிகழ்ந்த அனுபவம் தான் என்று தெரிவித்தார். அவரது எழுத்துக்கள் நன்றாக இருப்பதாகவும் தொடர்ந்து எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு, நன்றி கூறி விடைபெற்றோம்.

மேற்படி பதிவு உணர்த்தும் நீதியை பற்றி குறிப்பிடவேண்டுமானால்…

ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.

இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை. ஒரு தொழிலில் இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.

மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்.

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்!

.நன்றி பார்த்தசாரதி,

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!