Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 2 September 2014

"விண்வெளி ஆய்வில் இந்தியா

"விண்வெளி ஆய்வில் இந்தியா சளைத்தது அல்ல"
          கோபி, மொடச்சூர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்கு குறித்த கருத்தரங்கில், திருவனந்தபுரம் ஐ.எஸ்.ஆர்.ஓ., விண்கல ஏவுகணை வடிவமைப்பு இணை இயக்குனர் முத்துக்குமார் பேசியதாவது:

         கடந்த, ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., செயற்கைகோள், இஸ்ரோவின், 13 ஆண்டு உழைப்பின் மூலம் சாத்தியமானது. இத்தகைய வசதி, இந்தியாவை தவிர, அமெரிக்க, ரஷ்யா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது. இது முற்றிலும் உள்நாட்டு கிரையோஜெனிக் என்ஜின் தொழில் நுட்பத்துடன் துவங்கப்பட்டது.

தற்போது ஜி.எஸ்.எல்.வி., மார்க்-3 என்ற செயற்கைகோள் ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. பரிசார்த்த முறையில், வரும் அக்டோபரில் விண்ணில் ஏவப்படும். ராக்கெட் தயாரிக்க, அதன் தன்மைக்கேற்ப செலவினங்கள் ஏற்படும். செயற்கை கோள் உருவாக்க, 500 கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. விண்வெளி ஆய்வை, தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காகவும், வணிக நோக்கத்துக்காகவும், உலக நாடுகள் பயன்படுத்தி கொண்டிருக்கையில், சமுதாய நன்மைக்காக மட்டுமே விண்வெளி ஆய்வில் இந்தியா ஈடுபடுகிறது.

தொலை தொடர்பு துறையிலும், இயற்கை வளங்களை கண்டறிவதிலும், வங்கி சேவை, அரசு நிர்வாகம் ஆகியவற்றிலும், நாட்டின் செயற்கை கோள்களின் பங்கு மகத்தானது. விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில், நமது விஞ்ஞானிகள் எவ்விதத்ததிலும் இளைத்தவர்கள் அல்ல என்பதை, அவ்வப்போது ஏவப்படும் விண்கலங்களும், செயற்கை கோள்களும் நிரூபித்துள்ளன.

மாணவர் சமுதாயம், இந்தியா மேற்கொண்டுள்ள சவால்களையும், சாதனைகளையும் புரிந்து கொண்டு, நல்ல முறையில் கல்வி பயின்று, எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்த ஒரு நாடாக உருவாக வேண்டும் என்றார். பள்ளி தாளாளர் பெருமாள்சாமி, செயலாளர் சீதாலட்சுமி, முதல்வர் இளமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

நான் வாசித்த ஆசிரியர் தின வாழ்த்து

நான் வாசித்த ஆசிரியர் தின வாழ்த்து கவிதைRK

ஆயிரம் ஆண்டுகள்  ஆயிரம் பிறவிகள்
பூமியில் பிறந்திட விரும்புகின்றேன்.
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை
         ஏற்றிட விரும்புகிறேன் .

மூங்கில் காட்டில் புல்லாங்குழலை தேடும் வேலை இது
முழுதாய் பாறையில் சிற்பம் செதுக்கும் முக்கிய வேலை இது
மனிதம் வாழ அறிவைத் தந்திடும் மகத்துவ வேலை இது
புனிதர்பலரும் போற்றிச் சொன்ன புண்ணிய வேலை இது

அதனால் அடுத்த பிறவிகள் பலவும் எடுத்து வந்தாலும்
அத்தனை பிறப்பிலும் ஆசிரியராக இருந்திட விரும்புகின்றேன்.       1

சித்திரம் வரைந்து வண்ணம் தீட்டும் சீரிய பணியிதுவாம்
நித்திரை மறந்து நித்தியம் செய்ய  விரும்பும் பணியிதுவாம்
சொத்துக்கள் சேர்த்து வாழ நினைப்பவர் விரும்பாப்  பணியிதுவாம்
முத்துக்கள் தேடி ஆழ்கடல் நீரில்  மூழ்கிடும் அரிய பணியிதுவாம்

எத்தனை ஆண்டுகள் எத்தனை பிறவிகள் எடுத்து வந்தாலும்
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை ஏற்றிட விரும்புகின்றேன்.   2

ஐந்தும் மூன்றும் அடுக்காய்  இருந்தால் சமைப்பது கடினமல்ல
இருப்பதை வைத்து அறுசுவை உணவு படைப்பது சுலபமல்ல
படிப்பறிவில்லா பாமர மக்கள் கல்வியை பெற்றிடவும்
அடிப்படை கல்வி அனைவர்க்கும் என்ற நோக்கம் வென்றிடவும்

ஆசான் அதிகம் உழைத்திட வேண்டும் என்பதை உணர்கின்றேன்
அயரா உழைப்புடன் உறுதி கொண்டப்பணி தொடர்ந்திட  
                                                  விரும்புகின்றேன்

ஈன்ற குழந்தை 'அம்மா" என்றால் அன்னை மகிழ்ந்திடுவாள்
சான்றோனாகி  சரித்திரம் படைத்தால் தந்தையும் மகிழ்ந்திடுவார்
சான்றோன்  ஆனதன் காரணம் எந்தன் ஆசான் என்றுரைத்தால்
ஈன்றாள், தந்தை  இருவரை விடவும் ஆசான் மகிழ்ந்திடுவார்

அந்தப் பெருமை எனக்கும் கூட கிடைத்திட விரும்புகின்றேன்.
அடுத்த பிறப்பிலும் ஆசானாக இருந்திட விரும்புகின்றேன்.       4

ஆடை அழகாய் அமைவதில்தானே தைப்போர் திறனை அறிவதுண்டு
ஓடை நீரின் நிலத்தின் தன்மை நிலத்தால்தானே திரிவதுண்டு
கூடையில் உள்ள பூவின் வாசம் கூடைக்கும் கூட வருவதுண்டு
மேடையில்  உள்ளோர் புகழில் அவரவர் குருவுக்கும் கூட பங்கு உண்டு

எனக்கும்  அதுபோல்கொஞ்சம் பங்கு இருந்திட நினைக்கின்றேன்
அதனைப்  பெறவே ஆசான் பணியை நானும் விரும்புகின்றேன்  5

பழுத்த  பழங்கள் நிறைந்த  மரத்தை பறவைகள் தேடிவரும்
இனித்த கரும்பை கடித்து சுவைக்க எறும்புகள் ஓடிவரும்
படித்த ஞானம் நிறைந்த குருவை மாணவர் சூழ்ந்திடுவார்
நிலைத்த புகழை நிச்சயம் பெற்று நித்தியம் வாழ்ந்திடுவார்

அத்தகு  புகழும் சிறிதே எனக்கு கிடைத்திட வேண்டுகின்றேன்
இத்தரை மீதில் ஆசிரியர்பணியை அதனால் விரும்புகின்றேன். 6

தீயில் சுடாத தங்கம் என்றும் அணிகலன் ஆவதில்லை
அழுத்தித் துவைக்காத் துணிகள் என்றும் வெளுப்பும் அடைவதில்லை
ஆலையில் கரும்பைப் பிழிந்தெடுக்காமல் சர்க்கரை கிடைப்பதில்லை
                                                            - கல்விச்
சாலையில் மாணவர் பயிற்சி பெறாமல் சான்றோர் ஆவதில்லை

சான்றோன் ஆக்கும் பணியில் நானும் சாதனை படைத்திடவே
ஆசான் பணியே அடுத்த பிறப்பிலும் செய்திட விரும்புகின்றேன்     7

ஆதியில்  வாழ்ந்த மனிதர்களிடத்தில் சாதிகள் இருந்ததில்லை
பாதியில் வந்து பாதகம் செய்தது இதுபோல் எதுவுமில்லை
சாதம் உண்டு சோம்பித் திரிந்தவர் செய்திட்ட பேதமன்றோ
பேதம் மறைந்திட கல்வியைத் தருவது ஆசான் திறனன்றோ

அந்தத் திறனை நானும் பெற்றிட மனதில் நினைக்கின்றேன்
அடுத்த பிறப்பிலும் ஆசான் பணியே தொடர்ந்திட விரும்புகின்றேன். 8

முன்னோர் வகுத்த நெறிமுறை அடுத்த தலைமுறை உணர்த்திடவும்
பின்னோர் அதனை மறந்துவிடாமல் போற்றிக் காத்திடவும்
வன்முறை என்பதை அறியாத் தலைமுறை உருவாக்கி வைத்திடவும்
நன்முறை மட்டும் நாடும் இளைஞர்கள் நிறைந்து பெருகிடவும்

என்னாலியன்ற பணியினைச் செய்து என்றும் உழைத்திடுவேன்.
அடுத்தபிறவி எடுத்து வந்தாவது என் பணி முடித்திடுவேன்.       9.

சேவை  செய்து குருவுடன் வசித்து கற்றது  பழைய கதையாகும்
தேவை அறிந்து கற்றலில் செயல்வழி புகுத்திடல் புதிய முறையாகும்
மாற்றம் என்பது மானிட இனத்தின் மாறா இயல்பாகும்
ஏற்றம் பெற்றிட இதனை உணர்வது ஆசான்  கடனாகும்

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட விரும்புகின்றேன்.
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியைப் போற்றிட விரும்புகின்றேன்.

என்னிடம் கற்றவர் என்னை மதித்திட மறந்து போனாலும்
ஏற்றிய ஏணியை எட்டி உதைத்து தள்ளிட நினைத்தாலும்
ஏழை ஆசான் என்றனை எண்ணி ஏளனம் செய்தாலும்
பேழையில் செல்வம் சேர்த்திட அறியா பேதை என்றாலும்

ஆவல்  கொண்டே ஆசான் பணியை அகத்தில் துதித்திடுவேன்.
அந்தப்  பணியே ஆயுள் முழுதும் செய்ய முனைந்திடுவேன்  11

சில  பேர்மட்டும் ஆசான் திறனை அறிந்து போற்றிடுவார்
சிலபேர்  சேர்ந்து ஆசான்களையே பலமாய் தூற்றிடுவார்
தூற்றல் போற்றல் இரண்டையும் சமமாய் தூர வைத்திடுவோம்
ஆற்றும் பணியில் ஆர்வம் கொண்டே அயராதுழைத்திடுவோம்

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட விரும்புகிறேன்
அத்தனை பிறப்பிலும் ஆசான்பணியை செய்திட விரும்புகின்றேன்.-  
                                  புகழ் எய்திட விரும்புகிறேன்.RK

ஆசிரியர் தின விழா பெயரில் மாற்றம் இல்லை

ஆசிரியர் தின விழா பெயரில் மாற்றம் இல்லை : கல்வித்துறை திட்டவட்டம் - தினமலர்
'தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும் கிடையாது; வழக்கம்போல், இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி, சிறப்பாக கொண்டாடப்படும்' என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, தேசிய அளவில், ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணிபுரியும் ஆசிரியருக்கு, மத்திய, மாநில அரசுகள், விருதுகளை வழங்குகின்றன. இந்நிலையில், ஆசிரியர் தின விழா பெயரை, சமீபத்தில், 'குரு உத்சவ்' என, மாற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டதாக, தகவல் வெளியானது. மாநில அரசுகளும், புதிய பெயரில், விழாவை கொண்டாட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. வரும், 5ம் தேதி மாநில அரசுகளும், மத்திய அரசும், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்க உள்ளது. தமிழகத்திலும், விழாவுக்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், 'பெயர் மாற்றம், தமிழகத்தில் அமலுக்கு வருமா?' என்பது குறித்து, கல்வித்துறை வட்டாரம், நேற்று தெரிவித்ததாவது: பெயர் மாற்றம் குறித்து, தமிழக அரசு, கல்வித்துறைக்கு, எவ்வித உத்தரவை யும் பிறப்பிக்கவில்லை. எனவே, வழக்கம் போல் தான், விழா நடக்கும்.

வரும், 5ம் தேதி சென்னை, சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விழாவில், 377 ஆசிரியர்களுக்கு, 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட உள்ளது. பள்ளிகல்வி அமைச்சர், வீரமணி, விருதுகளை வழங்குகிறார். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

கல்விக்கொள்கையில் மாற்றம் செய்ய அரசு முடிவு -

கல்விக்கொள்கையில் மாற்றம் செய்ய அரசு முடிவு - தினமலர்
தேசிய கல்விக்கொள்கையில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தொழில்நுட்பம் மற்றும் கணிதத்துறையில் எதிர்காலத்தில் திறமையான மாணவர்கள் உருவாகும் வகையில் திட்டங்கள் தீட்டுவது தொடர்பாக ஐ.ஐ.டி., நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய கொள்கையில், மாணவர்களின் வருகைப்பதிவேடு மற்றும் ஆசிரியர்கள் வருகை குறித்து அறிய முடியும் எனவும், மாணவர்களின் வீட்டுப்பாடம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2,000 உதவி பேராசிரியர் பட்டியல்

2,000 உதவி பேராசிரியர் பட்டியல் மூன்று மாதங்களுக்குள் வெளியீடு - தினமலர்
'அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.
முதலில், 1,060 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தது. இதற்கு, 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தகுதியானவர்களுக்கு, சமீபத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அதன்பின், நேர்முகத் தேர்வையும், நடத்தியது. இந்நிலையில், மொத்த காலி பணிஇடங்கள் எண்ணிக்கை, 2,000 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், '2,000 உதவி பேராசிரியர் பணிக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்' என, தெரிவித்தார்.

10ம் வகுப்பு தனித் தேர்வு 'ஹால் டிக்கெட்'

10ம் வகுப்பு தனித் தேர்வு 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு - தினமலர்
பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர், தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து, இன்று, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்வுத் துறை இணை இயக்குனர், ராமராஜன் அறிவிப்பு:பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, விரைவில் துவங்க உள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். 'தத்கல்' திட்டம், விரைவில் றிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!