Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 18 October 2014

அலிஷா பூமிக்குத் திரும்புவாரா?

அலிஷா பூமிக்குத் திரும்புவாரா?
அலிஷா கார்சன்... 13 வயது அமெரிக்கச் சிறுமி. இப்போது அமெரிக்கப் பிரபலமாக இருக்கும் அலிஷா, இன்னும் சில வருடங்களில் அகில உலகப் பிரபலம் ஆகிவிடுவார். அப்போதைய தலைமுறை மாணவர்கள், 'செவ்வாய்க் கிரகத்தில் கால் பதித்த முதல் பெண், அலிஷா கார்சன்’ என நெஞ்சில் குத்திக் குத்தி மனப்பாடம் செய்யலாம். அல்லது டேப்லெட்டில் லைவ் வீடியோ பார்த்து லைக்கிட்டு 'குட் டே அலிஷா’ என கமென்ட்டலாம்.

சிலர் பிறக்கும்போதே ஐ.க்யூ லெவல் எகிறிப் பிறப்பார்களே... அப்படி ஒரு பெண் அலிஷா. 'நான் விண்வெளி வீராங்கனையாக வேண்டும்’ என அலிஷா சொன்னபோது அவளுக்கு வயது... மூன்று! பள்ளியில் இப்போது செவன்த் கிரேடு படிக்கும் அலிஷா தன் பாடத் திட்டங்களோடு சேர்ந்து விண்வெளி தொடர்பான பாடங்கள், ஸ்பானிஷ், பிரெஞ்சு, சைனீஸ்... மொழிகளையும் கற்றுக்கொண்டுவிட்டாள்.

நாசா நடத்திய உலக விண்வெளிப் பயிற்சி முகாம் ஒன்றுக்குத் தேர்வான ஒரே பெண் இவர்தான். நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றால், அதன் விதவிதமான துறைகள் அளிக்கும் பயிற்சிகளில் 'டிஸ்டிங்ஷனோடு’ தேறியிருக்க வேண்டும். அப்படி... மொத்தம் 14 துறைகள் அளித்த பயிற்சிகள் அனைத்திலும் அலிஷா 'அவுட்ஸ்டேண்டிங்’ மாணவி.

'எல்லாம் சரி... அதற்காக 13 வயது சிறுமியை செவ்வாய்க் கிரகத்துக்குத் தனியாக அனுப்ப முடியுமா என்ன?’ இப்போது நாசாவிடம் இருக்கும் அதிகபட்சத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு ரோபோவை செவ்வாயில் இறக்கிவிட்டு, இங்கிருந்து ரிமோட்டில் ஆணைகள் பிறப்பித்து இயங்கச் செய்யலாம். அதை மீண்டும் பூமிக்கு அழைத்து வர முடியாது. ஆனால், 2033-ல் மனிதனை செவ்வாயில் இறக்கும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றிருக்கும் நாசா, அப்போதுதான் அலிஷாவை செவ்வாய்க்கு அனுப்புமாம்!

மனிதனை செவ்வாய்க்கு அனுப்புவதற்கு எகிடுதகிடாக செலவுகள் எகிறும். நிலா என்றால் பரவாயில்லை. பக்கத்திலேயே இருக்கிறது. செவ்வாயோ எக்கச்சக்க தூரம். செலவு ஒரு பக்கம். அதைவிட சவால், பயணிக்கும் மனிதனின் மனநிலை. கிட்டத்தட்ட ஒரு வருடம் இருளான விண்வெளியில் தனிமையில் ஒரு கேப்சூலில் (விண்வெளி ஓடம்) பயணிக்க வேண்டும். அவருக்குத் தேவையான உணவு, தண்ணீர் அதில் இருக்க வேண்டும். தனிமை, அமைதி, சூழந்திருக்கும் பேரிருள் ஆகியவற்றால் அந்த மனிதனின் மனநிலை பாதிக்கப்படலாம். அதைச் சமாளிக்கப் பயிற்சியளிக்க வேண்டும். ரோபோ என்றால், பலூன்களின் உதவியோடு செவ்வாயின் தரையில் 'தடால்... புடால்’ என மோதி தரையிறக்கிவிடலாம். ஆனால், மனிதனை அப்படி இறக்க முடியுமா? சரி... கஷ்டப்பட்டு செவ்வாயில் இறக்கிவிடலாம் ஓ.கே. அவனை/அவளை திரும்ப எப்படி பூமிக்கு மீண்டும் அழைத்துவருவது? அங்கிருந்து கிளம்பி வர, இங்கிருந்து அனுப்பிவைத்ததைப்போல ரிட்டர்ன் ராக்கெட் வேண்டும். பூமியின் ஈர்ப்பு விசையைவிட செவ்வாயின் ஈர்ப்பு விசை அதிகம். எனவே, பூமியில் இருந்து கிளம்பியதைவிட செவ்வாயில் இருந்து அதிவேகமாகக் கிளம்ப வேண்டும். அதற்கு எரிபொருள் வேண்டும்; அதையும் பூமியில் இருந்தே எடுத்துச் செல்ல வேண்டும். நிலவின் வட்டப்பாதையில் ராக்கெட்டை நிலைநிறுத்தி, ஆம்ஸ்ட்ராங்க் திரும்ப வந்ததுபோல, செவ்வாயில் இருந்து திரும்பினாலும், மீண்டும் ஒரு வருடப் பயணம். அதற்கு தேவையான உணவு, தண்ணீர் வேண்டும். நிலா பூமியைச் சுற்றி வருகிறது. ஆனால் செவ்வாய் சூரியனைச் சுற்றி வருகிறது. காலமும், தூரமும் மாறிக் கொண்டே இருக்குமே? அதையும் கணக்கிட வேண்டும். எவ்வளவு பெரிய வேலை?

சரி... செவ்வாய்க்குச் சென்ற ஆளைத் திரும்ப அழைத்தால்தானே இவ்வளவு அக்கப்போர். 'ஒன் வே ட்ரிப்’ போல இறக்கி மட்டும் விட்டுவிட்டு ஆராய்ச்சி செய்தால்? 1998-ல் இந்த ஐடியாவையும் யோசித்தார்கள் விஞ்ஞானிகள். அதன்படி பூமியில் இருந்து கிளம்பும் ஆளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிடுவார்கள். அவருடைய குடும்பத்துக்கு பெருந்தொகை செட்டில் செய்யப்படும். உலக வரலாற்றில் 'முதல் செவ்வாய் மனிதன்’ என்ற புகழ் கிடைக்கும். ஆனால் அதை அனுபவிக்க முடியாது. செவ்வாயில் இறங்கி ஆராய்ச்சி செய்ய வேண்டும். திரும்பி பூமிக்கு வர முடியாது. கேப்சூலில் இருக்கும் உணவும் தண்ணீரும் தீரும் வரை உயிர் வாழ்ந்துகொள்ளலாம். பின் மாஸ்க்கைக் கழற்றி செவ்வாயில் இருந்து சொர்க்கமோ, நரகமோ போய்ச் சேரலாம். புவியின் முதல் மனிதன் மாதிரி அவர் செவ்வாயின் முதல் ஆதாம் அல்லது ஏவாள் ஆகலாம். ஆனால், 'முடிந்த அளவு ஆளை திரும்பக் கூட்டிவரும் வேலையைப் பார்ப்போம்’ எனக் குரல் வர, திட்டத்தை அப்படியே பெண்டிங்கில் வைத்துவிட்டார்கள்.

'செவ்வாயில் மனிதன்’ திட்டத்துக்கு இத்தனை பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்க, நாசாவின் தேர்வுகளை அநாயசமாக எழுதி, செல்லப் பிள்ளை ஆகிவிட்டாள் அலிஷா. அளப்பறிய ஐ.க்யூ-வாலும் ஆர்வத்தாலும், நாசா அவளைக் கிட்டத்தட்ட தத்தெடுத்துக்கொண்டுவிட்டது. 'பங்கி ஜம்பிங், ஸ்கை டைவிங், ஸ்கூபா டைவிங்... எல்லாம் கத்துகிட்டு வா’ என நாசா விஞ்ஞானிகள் அசைன்மென்ட் கொடுக்கும் அளவுக்கு இப்போது அலிஷா அங்கே டார்லிங். இன்னும் 20 வருடங்கள் கழித்து, அலியாவுக்கு 33 வயது ஆகியிருக்கும். கிட்டத்தட்ட நாசாவின் 'மிக அனுபவசாலி’ விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆகியிருப்பார். அதனால், அப்போது அலிஷாவை செவ்வாய்க்கு அனுப்ப, இப்போதே பரிந்துரைக்கிறார்கள் பல விஞ்ஞானிகள். அது தொடர்பான பரபரப்பைக் கண்டுகொள்ளாமல், விண்வெளி தொடர்பான பயிற்சிகள், ரோபோட்டிக்ஸ் பாடங்கள் என செம பிஸியாக வலம்வருகிறார் அலிஷா!

அடுத்துவரும் 20 வருடங்கள் எந்தப் பஞ்சாயத்தும் இல்லாமல், மூன்றாம் உலகப் போர் எதுவும் மூளாமல், எல்லாம் சுபமாக நடந்து, அலிஷாவை செவ்வாய்க்கு அனுப்ப நாசா முடிவு எடுக்கும்பட்சத்தில், மில்லியன் டாலர் கேள்வி ஒன்று தொக்கி நிற்கும். அது, அலிஷாவை பூமிக்குத் திரும்ப அழைத்துக்கொள்வதா... இல்லை செவ்வாய்க் கிரகத்திலேயே இறக்கிவிட்டுவிடுவதா?!’

விகடன்...

டி.இ.டி., 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' :


18/10/2014

டி.இ.டி., 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' : 'தினமலர்' செய்தியால் ஆசிரியர்கள் நிம்மதி
         'தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மீண்டும்
        இயக்குனர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. 'கடந்த 2010 ஆக., 23க்கு முன் ஆசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால் 2013 ஆக., 23க்கு பிறகும் பணி நியமனம் செய்யப்பட்ட அந்த ஆசிரியர்களுக்கு தகுதி (டி.இ.டி.,) தேர்வில் விலக்கு அளிக்கப்படும்' என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்தது.
இதன் அடிப்படையில், 2010 முதல் 2013 வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்கள் தகுதி காண் பருவத்திற்கு விண்ணப்பித்தனர். அதை கல்வி அதிகாரிகள் ஏற்காமல், 'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான் தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்' என விண்ணப்பங்களை திருப்பி அனுப்பினர். இதனால், ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், பண்டிகை கால
முன்பணம், வங்கி கடன் வாய்ப்பு உட்பட எவ்வித பலனும் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'தினமலர்' நாளிதழில் அக்.,11ல் செய்தி
வெளியானது. இதன் எதிரொலியாக, கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் 'இமெயில்' தகவல் அனுப்பப்பட்டது.
இதில் '2010 ஆக., க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. இதனால், தகுதிகாண் பருவம் உட்பட அனைத்து பலன்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில், 'டி.ஆர்.பி.,யின் டி.இ.டி., தேர்ச்சி விலக்கை கல்வி அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் தகுதி காண் பருவத்தை அவர்கள் முடிக்கமுடியவில்லை. இதை 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதன்பின் இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட தெளிவான அறிவிப்பால் குழப்பத்திற்கு விளக்கம் கிடைத்துள்ளது' என்றனர்.

அன்புக்கு ஏங்கும் டீன் ஏஜ் பருவம்

அன்புக்கு ஏங்கும் டீன் ஏஜ் பருவம்
         பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கும் பெற்றோருக்கு அவர்களைக் கண்டிக்கிற, கட்டுப்படுத்துகிற உரிமை நிச்சயம் உண்டு. ஆனால், அதற்கு ஒரு எல்லையும் உண்டு. குழந்தைகளோ, பெரியவர்களோ ஒவ்வொருவருக்குமே ஒரு தனிமை உண்டு.

         பெற்ற பிள்ளைகள் என்பதாலேயே அவர்களது ரகசியங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்தரங்கத்தில் தலையிடுவது தவறானது. டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கிற பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளையும் தருவதில் தவறில்லை.

          அதே நேரத்தில் அவர்களது நண்பர்கள் யார், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டியதும் அவசியம். பருவ வயதில் இருக்கிற தன் மகளோ, மகனோ, அதே வயதுள்ள எதிர்பாலினத்தாரிடம் சாதாரணமாகப் பேசுவதையோ, சிரிப்பதையோ பார்த்தால் கூட பலவித பயங்கரக் கற்பனைக் கோட்டைகளைக் கட்டி, பிள்ளைகளைப் பற்றிய தவறான கணிப்புகளை வளர்த்து விடுவார்கள்.
சில பெற்றோர் பார்க்கிற, கேள்விப்படுகிற எல்லாவற்றையும் சந்தேகப்படுவார்கள். தம் பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனதால் உண்டான குற்ற உணர்வை மழுங்கடிக்கிற வகையில், பல பரிசுப் பொருட்களை அள்ளி வழங்கி, தம் தவறை எளிதாக மறக்கடிக்கச் செய்வார்கள்.
குழந்தைகள், அதிலும் டீன்ஏஜ் பிள்ளைகள் ஏங்குவது உயிரற்ற பொருட்களுக்காக அல்ல. அதிக விலையுள்ள செல்போனோ, கேட்கும்போதெல்லாம் மறுக்காமல் கொடுக்கிற பாக்கெட் மணியோ அவர்களது ஏக்கம் தீர்ப்பதில்லை.
அவர்கள் ஏங்குவதெல்லாம் அன்புக்கு. டீன் ஏஜில் பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவழிக்க வேண்டியது மிக முக்கியம். அவர்களது உலகத்தில் தங்களையும் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். ‘முளைச்சு மூணு இலை விடலை.. அதுக்குள்ள காதல் கேட்குதா?’ என மகளிடம் கொந்தளிக்காமல், அவள் போக்கிலேயே பேச்சைத் தொடர வேண்டும்.
‘அப்படியா... இந்த வயசுல அப்படித்தான் இருக்கும். அதை சீரியஸா எடுத்துக்கக் கூடாது. உன் வாழ்க்கையில இன்னும் நிறைய பேரை சந்திக்க வேண்டியிருக்கும். இவனைவிட பெட்டரான எத்தனையோ பேரை நீ கிராஸ் பண்ணுவே... இன்னும் உனக்கு வாலிப வயசு நிறைய இருக்கு’ எனப் புரிய வைத்து, ஆண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அறிவியல் கலந்து விளக்கலாம்.
பெற்றோர் செய்யவே கூடாத விஷயம் என்ன தெரியுமா? பிள்ளைகளை சந்தேகிப்பது. அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அவர்களது மொபைலை சோதிப்பதைப் போன்ற அத்துமீறல் வேறு எதுவும் இருக்காது. ‘நம்ம குழந்தை தப்பு பண்ணாது’ என நம்பித்தான் ஆக வேண்டும். ஒருவேளை பெற்றோரின் சந்தேகம் தவறாக இருந்தால், அது அந்தக் குழந்தையைப் பெரிதும் பாதிக்கும்.
பல பெற்றோர் கண்டிப்பு, கறார் என்கிற பெயரில் குழந்தைகளின் உடம்பை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்களே தவிர, அவர்களது மனதைப் பாதுகாக்கத் தவறி விடுகிறார்கள்.
வீட்டுக்குள் எந்த அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கித் தவிக்கிறதோ, அது கிடைக்காத பட்சத்தில், கிடைக்கிற இடத்தை நோக்கிக் கூடு பாயும். பிள்ளைகளின் உடலைப் பூட்டி வைப்பதன் மூலம் அவர்களைப் பாதுகாக்க முடியாது. மனதை உங்களுக்குப் பக்கத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டால், உங்கள் மகள் இப்போதில்லை, எப்போதுமே உங்கள் கைகளைவிட்டுப் போக மாட்டாள்.

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
           ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.
SOURCE : DINAKARAN WEB DT:22.08.2014

கணித ஒலிம்பியாட் போட்டி!

டிசம்பர் 7ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்தும் கணித ஒலிம்பியாட் போட்டி!
      நாட்டின் பல்வேறு பகுதிகளில், குழு கணித ஒலிம்பியாட் நிகழ்ச்சியை, வரும் டிசம்பர் 7ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்தவுள்ளது. தற்போது, 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்த கணிதப் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்கள். ஆனால், கேள்வித்தாள் அனைவருக்கும் ஒன்றுதான்.

        இப்போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள பள்ளிகள், ஸ்கிரீனிங் டெஸ்ட் மேற்கொள்ள, 5 மாணவர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். மாணவர்களின் கணிதத் திறன் மற்றும் கணித அறிவை வளர்க்கும் பொருட்டு இப்போட்டி நடத்தப்படுகிறது.

         இப்போட்டியில் கலந்துகொள்ள, பள்ளிகளின் சார்பில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், நுழைவுக் கட்டணமாக ரூ.100ஐ, டிடி வடிவில் செலுத்த வேண்டும். இத்தேர்வில் கலந்துகொள்வதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்தேதி நவம்பர் 5.

மாணவர்களின் வசதிக்கேற்ப, இப்போட்டி, ஒரு மாநிலத்தில், ஒன்று அல்லது இரண்டு இடங்களில் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வு ஆங்கில மொழியில் மட்டுமே நடைபெறும்.

இத்தேர்வுக்கான நேரம் 3 மணிகள் மற்றும் தேர்வு நடைபெறும் இடங்கள் சர்குலர் மூலம் அறிவிக்கப்படும்.

கணித ஒலிம்பியாட் போட்டியானது, CBSE அமைப்பால், பிராந்திய, மாநில மற்றும் சர்வதேச அளவில், கணிதப் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களின் திறன்களை சிறப்பாக்கும் பொருட்டு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் மூலம், பங்கேற்பாளர்களின் அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, நம்பர் தியரி, காம்பினேட்டரிஸ் ஆகியவை தொடர்பான அறிவும், திறனும் சோதித்தறியப்படும். இப்போட்டியின் முடிவில், 30 மாணவர்கள், இந்திய அளவில், பிராந்திய வாரியாக தேர்வு செய்யப்பட்டு, NBHM நடத்தும் இந்திய தேசிய கணித ஒலிம்பியாட் போட்டிக்கு அனுப்பப்படுவார்கள்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள்

சொந்த தொழில்நுட்பத்தில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!
         கடல்சார் ஆராய்ச்சிக்கு உதவும், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி26 ராக்கெட் மூலம், நேற்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


       இந்தியாவின் சொந்த, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்திற்காக செலுத்தப்படும் மூன்றாவது செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

     இந்தியாவின் சாலை போக்குவரத்து, கடல்வழிப் பாதை போன்றவற்றை கண்காணிக்கவும், பேரிடர் மேலாண்மையில் பெரிதும் பயன்படும், குளோபல் பொசிசனிங் சிஸ்டம் எனப்படும் ஜி.பி.எஸ்., சேவைக்காக, செயற்கைக்கோள்களை ஏவும் பணியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

        இதற்காக, ஏழு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1ஏ மற்றும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1பி செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் 1,425 கிலோ எடை கொண்ட, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., சி26 ராக்கெட் மூலம், நேற்று அதிகாலை 1:32 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் செலுத்தப்பட்ட 20வது நிமிடத்தில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள், பூமியின் துருவ சுற்று வட்டப் பாதையில், பூமிக்கு அருகில், 282 கிலோமீட்டர் அருகிலும், பூமியில் இருந்து தொலைவில் 20,670 கி.மீ., தூரத்திலும் நிலைநிறுத்தப்பட்டது.
இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்; கர்நாடகாவில் உள்ள ஹசன் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல்களை அனுப்பும்.

இந்நிகழ்ச்சியை பார்வையிட்ட மத்திய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா நிருபர்களிடம் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் 27வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் நாம், சொந்த ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தை பெற்றுள்ளோம். அடுத்து, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1டி செயற்கைக்கோள் டிசம்பரில் விண்ணில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மீண்டும் சாதனை படைத்துள்ளது. தற்போது அனுப்பப்பட்ட ராக்கெட், 60 நாட்களுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களில், ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணியில், ஆயிரம் பேர் ஈடுபட்டனர்.

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் மிகப்பெரிய திட்டமான, ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட், இன்னும் 45 நாட்களுக்குள் விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்படும். இதேபோல், ஜி சாட் 16 செயற்கைக்கோள், பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் 48 டிரான்ஸ்பான்டர்களை சுமந்து செல்ல உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., செயற்கைக்கோள் : ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., செயற்கைக்கோள்கள் கடல்சார் ஆராய்ச்சி மற்றும் தரைவழிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தப்படுகின்றன. மொத்தம், ஏழு செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட உள்ளன.

இந்தியாவிற்கான சொந்த, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தைப் பெற இந்த செயற்கைக்கோள்கள் உதவும். தரை வழி, வான் வழி, கடல் வழி போக்குவரத்துக்கு உதவுவதற்காக இந்திய நேவிகேஷன் அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டால், பேரிடர் மீட்புப் பணிகளுக்கும், வரைபட தயாரிப்பு போன்றவற்றுக்கும் உதவும். வாகன ஓட்டுனர்களுக்கு ஒலி வடிவிலும் தகவல்களை வழங்க முடியும்.

போக்குவரத்துக்கான தகவல்களை வழங்குவதோடு, ராணுவம், விமானப்படை, கடற்படைக்கும் துல்லியமான தகவல்களை இந்த அமைப்பின் மூலம் வழங்க முடியும். இந்தச் செயற்கைக்கோளில் லேசர் அலைக்கற்றை மூலம் தொலைவை துல்லியமாக கணக்கிட, கார்னர் க்யூப் ரெட்ரோ ரிப்ளக்டர் என்ற கருவியும், சி -பேண்ட் டிரான்ஸ்பான்டர், ருபிடியம் எனப்படும் அணு கடிகாரம் உள்ளிட்ட கருவிகள் உள்ளன.

இந்தியா தனக்கான சொந்த, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தைப் பெற, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., வரிசையில், நான்கு செயற்கைக்கோள்களை ஏவினாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த எடை: 1,425.4 கிலோ ஆயுள் காலம்: 10 ஆண்டுகள் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும் தூரம்: பூமியில் இருந்து குறைந்தபட்ச தூரம் 282.5 கி.மீ; அதிகபட்ச தூரம் 20,670 கி.மீ; மின்சாரம்: செயற்கைக்கோளில் உள்ள 2 சோலார் பேனல்கள் மூலம் 1660 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!