Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 4 December 2014

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு
    அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள்
சார்ந்த விடுப்பு, உயர்கல்வி, முன்அனுமதி, மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, வைப்புநிதி முன்பணம் கோரல், பகுதி இறுதிப்பணம் கோரல்,சேமநலநிதி கணக்கீடு,ஊக்கஊதியம் அனுமதித்தல், பதவிஉயர்வுக்குண்டான ஊதிய நிர்ணயம்,பண்டிகை முன்பணம்,மருத்துவ விடுப்பு அனுமதித்தல்,ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல்,பொன்ற நடைமுறைகள் அந்தந்த உதவித்தொடக்கக்கல்வி அலுவலகப்பணியாளர்களால் அவர்கள் ஏற்கனவே கையாண்ட நடைமுறைகளின்படி அலுவலககுறிப்புகளும்,ஆணைகளும் வழங்கப்பட்டு வந்தன ஆனால் தமிழகம் முழுவதும் உள்ளஅனைத்து உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான வழிமுறையிணை பின்பற்ற தொடக்கக்கல்வித்துறை இயக்குனரகம் மூலம் ”மாதிரிப்படிவங்கள்,அலுவலகநடைமுறைக்கடிதம்,அலுவலகசெயல்முறை ஆணைகள் மற்றும்,பணிப்பதிவேட்டில் பதிய மாதிரி சீல்கள்” ஆகியன நிர்வாகப்பயிற்சியின் போது வழங்கப்ப்ட்டுள்ளது. .அதனை கடைபிடிக்க கோரப்பட்டு அனைத்து உதவிதொடக்கக்கல்விஅலுவலகங்களுக்கும் உரிய மாவட்டக்கல்வி அதிகரிகள் வாயிலாக அனுப்பப்படுள்ளதாக அறியப்படுகிறது.

உலக 'மெகா' தொலைநோக்கி:

உலக 'மெகா' தொலைநோக்கி:
இந்தியா ரூ.1,300 கோடி வழங்குகிறது
உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தயாரிக்கும் திட்டத்தில், அமெரிக்கா, சீனா, ஜப்பானை தொடர்ந்து நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.

டில்லியில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் மற்றும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் தூதரக பிரதிநிதிகள் முன்னிலையில், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்தின் கீழ், இந்தியா, 1,300 கோடி முதலீடு செய்ய உள்ளது. அதில், சாலைகள், கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான மொத்த செலவில், 30 சதவீதமும், உயர்தரமான சென்சார் கருவிகள், முனைப்பு சாதனங்கள் போன்றவற்றுக்கு, 70 சதவீதமும் ஒதுக்கப்படும். ஹவாய் தீவில், 4,050 மீட்டர் உயரமுள்ள மானா கி சிகரத்தில், உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கப்பட உள்ளது. இதன் முகப்பு லென்ஸ், 30 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும். இந்த தொலைநோக்கியில், 500 கி.மீ., தூரத்தில் உள்ள, சிறிய நாணயம் போன்ற பொருளைக் கூட துல்லியமாக பார்க்க முடியும். மேலும், வானியல் விஞ்ஞானிகள், 1,300 கோடி ஒளி ஆண்டுகளின் தூரத்தையும், 20 - 40 கோடி ஆண்டுகளில் உருவான பழமையான நட்சத்திரக் கூட்டங்களையும் ஆய்வு செய்யலாம். தற்போது, ஸ்பெயினில், லா பால்மாவில் தான், உலகின் மிகப் பெரிய ஜி.டி.சி., தொலைநோக்கி உள்ளது.

பிளஸ் 2க்கு இணையானது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று:

பிளஸ் 2க்கு இணையானது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று:

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 10ம்வகுப்பு தேர்ச்சிக்குப்பின்னர் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10, பிளஸ் 2 என்ற கல்விமுறை 1978-79ல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. 1986-87 வரை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு. அதன்படியே சேர்க்கை நடந்தது. 1987ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி( எண் 906) 1987-88 முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ் 2 என நிர்ணயம் செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் டிப்ளமோ, பட்டம், முதுகலைப்பட்டங்களை பெற்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கருத்துருவை ஏற்க இயலாது என பள்ளிக்கல்வித்துறையால் 2011 அக்.,25 ல் தெரிவிக்கப்பட்டது. இதனால் 2011 ,2012 ம்ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்றவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்குகளில் 10ம் வகுப்பிற்கு பின் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவ்வாறு ஆணை பிறப்பித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "10ம்வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1987 ஜூலைக்கு முன் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ்2க்கு இணையாக கருதி முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன் நகல் அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து பின்னர் துறை முடிவு செய்யும்,”என்றார்.

ஆளில்லா விமானம் வடிவமைத்த மாணவர்: தேசிய கண்காட்சியில் பங்கேற்க தேர்வு

ஆளில்லா விமானம் வடிவமைத்த மாணவர்: தேசிய கண்காட்சியில் பங்கேற்க தேர்வு
அருப்புக்கோட்டை பள்ளி மாணவர் கண்டு பிடித்த ஆளில்லா விமான மாதிரி படைப்பு தேசிய அளவில் நடைபெறும் கண்காட்சியில், தமிழகத்தின் 4 படைப்புகளில் இதுவும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் புதிய படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வி துறை மூலம் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் கண்டு பிடித்துள்ள படைப்புகளை கண்காட்சியாக வைத்து அசத்தி வருகின்றனர். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவர் ஆசிக் இலாஹி கான், ஆளில்லா விமானத்தை (குவாட் காப்டர்) வடிவமைத்து தேசிய அளவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். 4 மோட்டார்கள் மற்றும் 4 இறக்கைகளுடன் இயங்க கூடிய அளவில் அமைத்து, இதில் கேமரா (வைபி) ஜி.பி.எஸ்., கருவி, தட்பவெப்பநிலை கண்டறியும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.பறந்து செல்லும்போது கீழே உள்ள இலக்குகள் தெளிவாக தெரியும். விமானம் "ரிமோட்' மூலம் இயக்கப்படுகிறது. எதிரிகளின் இலக்குகளை ஏவுகணை கொண்டு துல்லியமாக தாக்க இது பயன்படும்.
"சோலார்' மூலம் விமானத்தை இயக்கவும் மாணவர் முயற்சி செய்து வருகிறார். இந்த படைப்பிற்கு அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் முதல் இடம் கிடைத்துள்ளது. காரியாபட்டி சேது இன்ஜி., கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் 2 ம் இடத்தை பெற்றுள்ளார். மாநில அளவில் சென்னை தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா மேல்நிலை பள்ளியில் நடந்த "சுற்று சூழல்' என்ற தலைப்பில 3 வது இடத்தை பிடித்துள்ளார். தேசிய அளவில் சண்டிகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 4 படைப்புகளில் இந்த மாணவரின் படைப்பும் ஓன்று. மாணவருக்கு ஆசிரியர் சரவணகுமார் வழிகாட்டியாக இருந்துள்ளார். மாணவரை எஸ்.பி.கே., கல்வி குழும தலைவர் சுதாகர், அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை தலைவர் சாம்ராஜ், பள்ளி செயலர் காசிமுருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் நிர்வாக குழுவினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

முக்கியசெய்தி- மாணவர்களின் பெற்றோர் உயிரிழக்க நேரிட்டால் அரசு வழங்கும் நிதியுதவி அதிகரிப்பு

முக்கியசெய்தி- மாணவர்களின் பெற்றோர் உயிரிழக்க நேரிட்டால் அரசு வழங்கும் நிதியுதவி அதிகரிப்பு

பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிதியை ரூ.75 ஆயிரமாக அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாணவர்களின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாயின்மை காரணமாக கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் நிதி வழங்கப்படுகிறது.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் நிதியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்படுகிறது. இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கிற வட்டித் தொகை, முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும், பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திட தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய ஏதுவாக உரிய கருத்துருக்களை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
           தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல்  அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.

         தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர  வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும்  வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.  ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

ஆசிரியர்கள்–சக மாணவர்கள் மீது தாக்குதல்: திசை மாறும் இளைய சமுதாயம்.?

ஆசிரியர்கள்–சக மாணவர்கள் மீது தாக்குதல்: திசை மாறும் இளைய சமுதாயம்.?
           மாதா... பிதா... குரு... தெய்வம் என்பார்கள். நம்மை பெற்று வளர்த்த பெற்றோருக்கு முன்னதாகவே ஆசிரிய பெருமக்களை குருவாக போற்றி வந்துள்ளோம்.

          நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானதாகும். மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும்... வயதில் மூத்த பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்... நல்லது எது... தீயது எது... என பெற்றோர்களை விட ஆசிரியர்களே நமக்கு அதிகம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். முன்பெல்லாம் பள்ளிக் கூடங்களில் தங்கள் குழந்தைகளை கொண்டு விடும் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இப்படி கூறுவார்கள். சார்... நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது, எம் புள்ளைய நல்லா கொண்டு வந்திடுங்க என்பார்கள். இதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடக்கும். இப்படி தங்களது குழந்தைகளை முழுவதுமாக ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பெற்றோர், இன்னொரு விஷயத்தையும் மறக்காமல் கூறுவார்கள். பையன் படிக்கலைன்னா நல்லா அடிங்க சார்... அவன் நல்லா படிச்சா போதும், என்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட இதே நிலைதான் நீடித்தது.

             ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிப்போயிருக்கிறது. பள்ளிகளில் மாணவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் திருப்பி அடிக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அடிக்கடி அரங்கேறி வருகின்றன. சென்னை பாரிமுனையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உமாமகேஸ்வரி என்ற ஆசிரியையை மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே குத்திக் கொலை செய்த சம்பவமும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொலை செய்த சம்பவமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சென்னையில் கோடம்பாக்கம் தனியார் பள்ளியில் மாணவன் ஒருவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை கும்பலாக பள்ளியில் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. மாணவனின் தந்தையான தொழில் அதிபர் அருளானந்தம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஆட்களை அனுப்பி கொடூர தாக்குதலில் ஈடுபட்டத்தில் பலத்த காயம் அடைந்த ஆசிரியர் பாஸ்கர் ராஜ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

           இந்த பரபரப்பு அடங்கும் முன்னர், மதுரவாயலில் அரசு பள்ளிக்கூடத்தில் லட்சுமி என்ற ஆசிரியை, பிளஸ்–2 மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். இதில் லட்சுமியின் காது சவ்வு கிழிந்து விட்டது. ஆசிரியை லட்சுமியை மாணவர் கன்னத்தில் ஓங்கி அறைந்ததில் அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இப்படி ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில், சக மாணவனையே தீர்த்துக் கட்டிய மாணவர்கள் கொலையாளிகளாக மாறும் விபரீத சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. விருதுநகரில் கடந்த வாரம் ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

           ஓரினச்சேர்க்கைக்கு மறுத்து, தன்னைப் பற்றி போலீசில் புகார் செய்ததால், அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவரே அவரை தீர்த்துக் கட்டிய சம்பவம் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் எத்திலோடு என்ற கிராமத்திலும் வினோத் என்ற 11–ம் வகுப்பு மாணவர் சக மாணவராலேயே வகுப்பறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் பள்ளி வளாகத்தில் வைத்து, பலமுறை மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறியிருகின்றன. இப்படி வளரும் பருவத்திலேயே மாணவர்கள் மனதில் வன்முறை எண்ணங்கள் விதையாய் விழுவதற்கு அவர்கள் வளரும் சூழலும் இளம்வயதிலேயே போதை பழக்கங்களுக்கு அடிமையாவது ஒரு காரணம் என்கிறார்கள் சிந்தனையாளர்கள். பல இடங்களில் டாஸ்மாக் பார்களில் அமர்ந்து மாணவர்கள் மது குடிப்பதையும் காணமுடிகிறது. முன்பெல்லாம் காலை மாலை நேரங்களில் மாணவர்கள் ஓடியாடி விளையாடுவார்கள். ஆனால் இன்று கிராமப்புறங்களில் கூட அது அரிதாகிவிட்டது. வாள் சண்டை, துப்பாக்கி சூடு நடத்தி கணினி திரையில் ரத்தம் வழிந்தோடும் கம்யூட்டர் விளையாட்டுகளிலேயே இன்றைய சிறுவர்கள் மூழ்கி கிடக்கிறார்கள். இதுவும் தவறான சிந்தனைக்கு வழி வகுக்கும் என்கிறார்கள்.

          தாத்தா... பாட்டியிடம் நீதிபோதனை கதைகளை கேட்டு இன்று எந்த பேரப் பிள்ளைகளும் வளர்வதில்லை. தனிக்குடித்தனத்துக்கு ஆசைப்பட்டு தாத்தாவையும், பாட்டியையும் முதியோர் இல்லத்தில் விட்டு விடும் நிலைமையே இன்று பெரும்பாலான இடங்களிலேயே காணப்படுகிறது. இப்படி மாறிவரும் காலச்சூழலும், குழந்தைகள் வளரும் விதமுமே அவர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதே நிலை நீடித்தால் திருப்பி அடிக்கும் மாணவர்களுக்கு பயந்து ஆசிரியர்கள் இப்படியும் நினைக்கலாம். மாணவர்கள் எக்கேடு கெட்டுப்போனால் எங்களுக்கு என்ன என்று. ஆனால் அது ஆசிரியர்–மாணவர்களின் உறவில் இன்னும் விரிசலை ஏற்படுத்தி விடும். மாணவர்களே... குருவாகிய ஆசிரியர்களை போற்றுங்கள் உங்கள் வாழ்வும், வானமும் வசப்படும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!