Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 7 November 2015

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி: தகுதியுள்ள பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு, தகுதியுள்ள பேராசிரியர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தேர்வுக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பாரதியார் பல்கலைக்கழகத்தின் 9-வது துணை வேந்தராக கடந்த 2012ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற ஜேம்ஸ் பிச்சையின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

புதிய துணை வேந்தர் நியமிக்கப்படும் வரையிலும் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வதற்காக உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே துணை வேந்தரை தெரிவு செய்வதற்காக முனைவர் எம்.ராஜாராமை ஒருங்கிணைப்பாளராகவும் முனைவர் டி.வேலுசாமி, பேராசிரியர் என்.செந்தாமரை ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.இந்த நிலையில், தகுதியுள்ள பேராசிரியர்கள் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுக் குழு பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், குறைந்தது 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி அனுபவம் மிக்க, 67 வயது மிகாத இந்திய குடிமகன்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுய விவரக் குறிப்புடன் கூடிய விண்ணப்பங்களை நவம்பர் 27-ம் தேதிக்குள் தங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இந்த அறிவிப்பை www.b-u.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேர்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி-அனைத்துவகை பள்ளியில் பயிலும் மாணவர்கள்- ஆதார் அட்டை எடுப்பதற்கான சிறப்பு முகாம்

தொடக்கக் கல்வி-அனைத்துவகை பள்ளியில் பயிலும் மாணவர்கள்- ஆதார் அட்டை எடுப்பதற்கான சிறப்பு முகாம் அமைத்தல் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு...

கல்விக்கடன்களுக்கு ஆதார் எண் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: ரகுராம் ராஜன்

கல்விக்கடன்களுக்கு ஆதார் எண் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: ரகுராம் ராஜன்
கல்விக்கடன் வழங்குவதற்கு ஆதார் எண்ணை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.தில்லியில் நடைபெற்று வரும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், ஆன்லைன் வர்த்தகம் உலக சந்தையை உள்ளூர் சந்தையுடன் இணைப்பதாகக்கூறியுள்ளார்.

ஆன்லைன் வர்த்தகம் உள்ளூர் பொருள்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதை எளிதாக்குவதாகவும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். வவங்கிகளின் தானியங்கி வசதிகளை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.கல்விக்கடன் உள்ளிட்ட வசதிகளுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்துவது பற்றியும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாகவும் ரகுராம் ராஜன் கூறினார்.

கன மழை எச்சரிக்கை: தப்புமா தீபாவளி?

கன மழை எச்சரிக்கை: தப்புமா தீபாவளி?
'வங்க கடலில் உருவாகியுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலை அடுத்த இரு நாட்களில் மிகத் தீவிரமடையும் என எதிர்பார்ப்பதால் நவ., 8 முதல், 11 வரை, தமிழகத்தில் கன மழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவ., 10 தீபாவளி பண்டிகையின் போது கன மழை பெய்யலாம் என, கணிக்கப்பட்டு உள்ளது.டில்லியை தலைமையிடமாக கொண்டுள்ள, 'ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி தமிழக கடலோரத்தை நோக்கி, நவ., 8 முதல் நகரலாம் என, தெரிகிறது. இதனால் 8 முதல் 11 வரை நான்கு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், நாகபட்டினம் பகுதிகளில் கன மழையும், பிற மாவட்டங்களில் பரவலான மழையும் பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி நாளில், கனமழைக்கு அதிக பட்ச வாய்ப்புள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

.புயல்: அரபி கடலின் தென்மேற்குபகுதியில் உருவாகி உள்ள புயலுக்கு 'மெக்' என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பெயரை, இந்தியா தேர்வு செய்துள்ளது. 'மெக்' என்பது சமஸ்கிருத வார்த்தை; மழை மேகம் என்பது இதன் பொருள். கடந்த வாரம் அரபி கடலில் உருவான, 'சாப்லா' புயலை போலவே, 'மெக்' புயலும், வளைகுடா நாடுகளை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இந்த புயலால் நவ., 10 வரை, அப்பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, டில்லியில் உள்ள வானிலை சிறப்பு மையம் அறிவித்துள்ளது.

செல்பேசி எண், இ-மெயில் முகவரி அளிக்க வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

செல்பேசி எண், இ-மெயில் முகவரி அளிக்க வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

செல்பேசி எண், இ-மெயில் முகவரியை இணையதளம், குறுஞ்செய்தி, குரல் பதிவு வசதி மூலம் அளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன.இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் உள்ளனர்.செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்தன. ‘ஈசி’ எனப்படும் மின்னணு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டு இணையதளம், குறுஞ்செய்தி, குரல்செய்தி வசதி மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டது. பொதுமக்களும் வாக்காளர் பட்டியல்பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்தனர்.

இந்த வகையில் 22 லட்சத்து 81 ஆயிரத்து 392 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 16 லட்சத்து 94 ஆயிரத்து 98 மனுக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் தொகுதிகளுக்கிடையில் இடமாற்றம் தொடர்பாக வந்துள்ளன.மனுக்கள் அளித்தவர்களில் 7 லட்சம் பேர் தங்கள் செல்பேசி எண் மற்றும்இ-மெயில் முகவரி ஆகியவற்றை அளித்தனர். அவர்களுக்கு, விண்ணப்பத்தின் நிலை குறித்த குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.தற்போது, விண்ணப்பிக்கும்போது செல்பேசி எண், இ-மெயில் முகவரி அளிக்காதவர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே வாக்காளர் அட்டை பெற்றவர்களும், இனி வரும் காலங்களில் வாக்காளர் பட்டியல் தொடர்பான நிலவரங்களை அறிய தங்கள் செல்பேசி, இ-மெயில் முகவரியை அளிக்கலாம்.செல்பேசி எண், இ-மெயில் முகவரியை ஈசி செயலி, இணையதளம், 044-66498949 என்ற குரல் பதிவு சேவை, 1950 என்ற எண்ணிற்கு ‘RMSEpic no’ என்ற முறையில் குறுஞ்செய்தி அனுப்பியும் பதிவு செய்யலாம்.நவம்பர் 8-ம் தேதி முதல், வாக்காளர்களே முன்வந்து தங்கள் செல்பேசி எண், இ-மெயில் முகவரியை அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு முகாமை நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வாக்காளர்கள் இதன் மூலம், தங்கள் பெயர் இடம் பெற்றுள்ள பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.

மேலும், படிவம் 6,7,8,8ஏ கொடுத்தவர்கள் பெயர் விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, முறையே 9,10.11,11ஏ ஆகிய படிவங்களில், ‘http://104.211.228.47/Apptracking/EmatrixGrid.aspx.’ என்ற இணைய இணைப்பில் வழங்கப்படுகிறது.இதில் ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். மேலும், திருத்தங்கள் இருப்பின் அதற்கான ஆவணங்களை அளிக்கலாம்.வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தும் அதிகாரி தவறு இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சேவை வரியை உயர்த்தியது மத்திய அரசு: நவ.15 முதல் உயருகிறது

சேவை வரியை உயர்த்தியது மத்திய அரசு: நவ.15 முதல் உயருகிறது
நவம்பர் 15ம் தேதி முதல் 0.5 சதவிகிதம் சேவை வரி உயர்த்தப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்திற்காக உயர்த்தப்படுவதாகவும், அந்த திட்டத்திற்கு மட்டும் கூடுதலாக உயர்த்தப்படும் 0.5 நிதி பயன்படுத்தப்படும் என்றுஅறிவித்துள்ளது.

உ.பி., பள்ளிகளில் 2000 போலி ஆசிரியர்கள்

உ.பி., பள்ளிகளில் 2000 போலி ஆசிரியர்கள்
உத்திர பிரதேசத்தில் ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் 2000 ஆசிரியர்கள், போலி ஆசிரியர் சான்றிதழ் (பி.எட்.,) வைத்திருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் போலி சான்றிதழ் அளித்து ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரா பல்கலை.,க்கு உட்பட்ட ஆக்ரா, மதுரா, மணிப்பூரி, பிரோசாபாத்உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில், கல்லூரிக்கே வராத ஏராளமான மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.இந்த முறைகேட்டில் பல்கலை.,யின் மூத்த அதிகாரிகள் பலர் ஈடுபட்டிருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட 5 மூத்த அதிகாரிகள் மீது சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் எப்.ஐ.ஆர்.,பதிவு செய்யப்பட்டுள்ளது.பல்கலை.,அதிகாரிகள் பலருக்கும் பணம் கொடுத்து போலி சான்றிதழ் பெற்ற 400க்கும் மேற்பட்ட பல்கலை., மாணவர்களின் பெயர்களும் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த போலி சான்றிதழ்களை கொண்டு ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் 400 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது. மதிப்பெண் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 2000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணையின் முடிவில் பல்கலை., அதிகாரிகள், மாணவர்கள் என ஏராளமானோர் கைது செய்யப்படுவார்கள் என சிறப்பு புலனாய்வுக் குழுதெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டு சுனில்குமார் என்ற மாணவருக்கு, பல்கலை.,யால் இரு வேறுபட்ட தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின் பேரில் தொடரப்பட்ட விசாரணையிலேயே, இந்த சான்றிதழ் முறைகேடு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!

           தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

         சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம். 

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.

எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்லெக்சியா' மாணவர்கள்: ஆசிரியர்களுக்கு பயிற்சி

டிஸ்லெக்சியா' மாணவர்கள்: ஆசிரியர்களுக்கு பயிற்சி
கற்றல் குறைபாடுள்ள, 'டிஸ்லெக்சியா' மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.தமிழகத்தில், தமிழ் வழியில் படிக்கும், 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், 10 முதல், 15 சதவீதம்பேருக்கு, 'டிஸ்லெக்சியா' என்ற கற்றல் குறைபாடு உள்ளது.

இந்த மாணவர்கள் அறிவிலும், உடல் நலனிலும் மற்ற மாணவர்களை விட, நல்ல முறையில் இருந்தாலும், பாடங்களை புரிந்து படித்தல், மனப்பாடம் செய்தல் போன்றவற்றில் திணறுகின்றனர்.

அவர்களுக்கு, சரியான முறையில் பாடம் கற்பித்தால், எந்த குறைபாடும்இன்றி, மற்ற மாணவர்களை விட, ஒரு படி மேலே படிக்க முடியும். எனவே, இத்தகைய மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதம் குறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சென்னை 'டிஸ்லெக்சியா' சங்கம் சார்பில், இன்று சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, தி.நகர்., வாணி மகாலில் இந்த பயிற்சிவகுப்பு நடக்கிறது. சென்னை, ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள், சிறப்புக் கல்வியாளர் ஹரிணி மோகன் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.

நாகை மாவட்டபள்ளிகளில் ஆதார் அட்டைக்குப் புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடக்கம்

நாகை மாவட்டபள்ளிகளில் ஆதார் அட்டைக்குப் புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடக்கம்
ஆதார் அட்டைக்குப் புகைப்படம் எடுக்கும் பணி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சனிக்கிழமை (நவ.7) தொடங்க உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய அடையாள அட்டைக்காக ஆதார் அடையாள அட்டையைக் கணக்கெடுக்கும் திட்டத்தின் கீழ், இப்பணி நடைபெறுகிறது. இதுவரை ஆதார் அட்டை பெறாத பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும் பள்ளி, பணி நடைபெறும் நாள் (வட்டம் வாரியாக):

வேதாரண்யம்: நெய்விளக்கு ஊராட்சி ஒன்றிய அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நவம்பர் 7, 8 தேதிகளிலும், கோடியக்கரை ஊராட்சி ஒன்றிய உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் 9, 11 தேதிகளிலும், தாணிக்கோட்டகம் ஆர்.சி. உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் 12-ஆம் தேதியும், தாணிக்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 13-ஆம் தேதியும், வெள்ளிக்கிடங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 14-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

திருக்குவளை: ஆய்மூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நவம்பர் 7-ஆம் தேதி, திருவாய்மூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 8-ஆம் தேதி, கீரம்பேர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 9-ஆம் தேதி, கொளப்பாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 11, 12, 13 தேதிகளிலும், திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் மேல்நிலைப் பள்ளியில் 14-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

கீழ்வேளூர்: ஒக்கூர், பொலன்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நவம்பர் 7-ஆம் தேதி, காரப்பிடாகை, எட்டுக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நவம்பர் 8, பிரதாபராமபுரம், எட்டுக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நவம்பர் 9, விலாம்பாக்கம், கடம்பங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நவம்பர் 11, கோகூர், பாலக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நவம்பர் 12, அகரகடம்பனூர், வடக்குவெளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நவம்பர் 13, ஒதியத்தூர், காருதாக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 14-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

நாகப்பட்டினம்: நாகை ஜி.எஸ். பிள்ளை நடுநிலைப் பள்ளியில் நவம்பர்7, நாகூர் கெளதியா தொடக்கப் பள்ளி, நாகை ஏஜெசி பப்ளிக் பள்ளி, ஆதர்ஷ் வித்யாலயாவில் நவம்பர் 7, 8, வெளிப்பாளையம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நவம்பர் 8, 9, நாகூர் தேசிய தொடக்கப் பள்ளி, காடம்பாடி நகராட்சி தொடக்கப் பள்ளி, ஆதர்ஷ் வித்யாலயாவில் 9-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.நாகூர் இஸ்லாமிய நடுநிலைப் பள்ளி, நாகை கலைமகள் நர்சரி பள்ளி, நடராஜன் தமயந்தி உயர்நிலைப் பள்ளி, சி.எஸ்.ஐ. நர்சரி பள்ளிகளில் நவம்பர் 12, நாகூர் மாணிக்க செட்டியார் தொடக்கப் பள்ளி, பனங்குடி அரசு தொடக்கப் பள்ளி, நாகை ஏ.ஜெ.சி. நர்சரி பள்ளி, முட்டம் அரசு தொடக்கப் பள்ளிகளில் 14-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஏ.ஜி.ஆர்.ஏ. மெட்ரிக்குலேஷன் பள்ளி, அறிவாலயம் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளி, ஆத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நவம்பர் 7, 8, மயிலாடுதுறை சங்கர வித்யாலயா பள்ளி, பாலசரஸ்வதி மெட்ரிக். பள்ளிகளில் 11, 12, 13-ஆம் தேதிகளிலும் முகாம்கள் நடைபெறும்.

சீர்காழி: சீர்காழி விவேகானந்தா மெட்ரிக். உயர்நிலைப் பள்ளி, மடவாமேடு புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொடியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஸ்ரீராமகிருஷ்ணாஉயர்நிலைப் பள்ளிகளில் நவம்பர் 7, 8, புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நவம்பர் 9, புதுப்பட்டினம் சக்தி மழலையர் தொடக்கப் பள்ளியில் நவம்பர் 11, புத்தூர் பாரத் மெட்ரிக். பள்ளியில் 12, 13, 14-ஆம் தேதிகளிலும் முகாம்கள் நடைபெறும்.

தரங்கம்பாடி: பொறையாறு சர்மிளா காடஸ் மெட்ரிக். பள்ளியில் நவம்பர் 7 முதல் 12-ஆம் தேதி வரையும் (நவ.10 நீங்கலாக), திருக்களாச்சேரி அய்யாஷ் மெட்ரிக். பள்ளி, குருஞானசம்பந்தர் மெட்ரிக். உயர்நிலைப் பள்ளி, ஹமீதியா உதவிபெறும் பள்ளி, வடகரை காஜாசாரா அம்மாள் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளிகளில் 13, 14-ஆம் தேதிகளிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.குத்தாலம்: பெரம்பூர் செயின்ட் மேரி மெட்ரிக். பள்ளியில் நவம்பர்7 முதல் 14-ஆம் தேதி வரை (நவ. 10 நீங்கலாக) முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு:அமைச்சர் கே.சி. வீரமணி

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு:அமைச்சர் கே.சி. வீரமணி
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் 293 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிஅவர் மேலும் பேசியதாவது:

மாணவர்கள் வறுமை காரணமாக தங்களுடைய படிப்பை இடையில் நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் 14 விதமான விலையில்லாப்பொருள்களை வழங்கி மாணவர்கள் கல்வியைத் தொடர வழிவகுத்துள்ளார். கல்வி வளர்ச்சி அடைந்தால் தான் சுகாதாரம் வளரும். அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும் என்ற அடிப்படையில் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் 25 சதவீத நிதியை கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.தமிழகத்தில் கடந்த 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 1,163 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 150 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுள்ளன. வருகிற காலங்களிலும் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் சிறந்த நிலையில் இருக்கும் என்றார் அமைச்சர் கே.சி.வீரமணி.

நிகழ்ச்சிக்கு இந்து கல்விச் சங்கத் தலைவர் சி. ராமமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நந்தகுமார் வரவேற்றார். எம்எல்ஏஅ.அஸ்லம் பாஷா, நகர்மன்றத் தலைவர் சங்கீதா, அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர். பாலசுப்பிரமணி, பேர்ணாம்பட்டு ஒன்றியக்குழுத் தலைவர் டி.பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கராத்தே மணி, அமீன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். உதவித் தலைமை ஆசிரியர் சி. குணசேகரன் நன்றி கூறினார்.அமைச்சரிடம் மனு அளித்த மாணவிகள் : இந்து கல்விச் சங்க நிர்வாகத்தின் கீழ் சுயநிதி அடிப்படையில் இயங்கி வரும் இந்து மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்க வேண்டுமெனக் கோரி அமைச்சர் கே.சி. வீரமணியிடம் மாணவிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் நவம்பர் 24 முதல் செல்லாது:

கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் நவம்பர் 24 முதல் செல்லாது: மண்டல அலுவலகம் அறிவிப்பு
கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்கள்) நவம்பர் 24-ஆம் தேதி முதல் செல்லாது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:"கையால் எழுதப்பட்ட கடவுச் சீட்டுகளை நவம்பர் 24-ஆம் தேதிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதன்பின்பு அவை பயன்பாட்டில் இருக்காது' என்று சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 24-ஆம் தேதிக்குப் பிறகும், கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர், புதிதாக விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படலாம். மேலும், பயணத்தின்போது வேறுஏதேனும் பிரச்னையை எதிர்கொள்ளவும் நேரிடலாம்.2001-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளில் உள்ளவிவரங்கள் கணினி மூலமே அச்சிடப்படுகிறது. சர்வதேச பயணங்கள் மேற்கொள்ளும்போது இவையே அனுமதிக்கப்படுகிறது.குறிப்பாக, 1990-களின் மத்தியில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள் செல்லுபடியாகும் காலம் 20 ஆண்டுகளாகும். அவற்றின் காலம் இப்போது முடிந்திருக்கும்.

எனவே, கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர், வரும் 24-ஆம் தேதிக்கு முன்பாக புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களைwww.passportindia.gov.in என்ற இணையதளத்திலும், 1800-258-1800 என்ற இலவச சேவை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!