கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை தீர்த்தகிரிவலசு ஏரி உடைந்தது. 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் பெய்து வரும் கனமழையால் குளம், குட்டை, ஏரிகள் மழை நீர் நிரம்பி வருகிறது.
சிங்காரபேட்டையை ஒட்டியுள்ள ஜவ்வாதுமலைப் பகுதியில் அதிக மழை பொழிந்து வருவதால் மலையிலிருந்து சரிந்துவரும் நீரானது மலையடிவாரத்தில் உள்ள தீர்த்தகிரிவலசை பெரியஏரியை வந்து அடைந்ததால், நேற்று முதலே ஏரி நிரம்பி வழிந்து வருகிறது.
சுமார் 19 கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி சுமார் 91 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் ஓட்டி, கிருஷ்ணகிரி-பாண்டிசேரி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரி கிழக்கு, மேற்கு, தெற்கு என 3 மதகுகளை கொண்ட ஏரியாகும். இதன் பாசன பரப்பு சுமார் 235.49 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பியது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியளித்தது.
இந்நிலையில் நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை) கிழக்கு பகுதியில் சிறிது நீர் கசிவு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த பொதுப்பணித்துறையினர், வருவாய்துறையினர், தீயணைப்புதுறையினர் என மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சாந்தி தலைமையிலான குழு கசிவு ஏற்படும் இடத்தில் மணல் மூட்டைகளை போட்டு ஏரிக்கரை உடையா வண்ணம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இருப்பினும் இன்று காலை (புதன்கிழமை) சுமார் 9 மணியளவில் 95 சதவீதம் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது. இதனால், வெள்ளகுட்டை பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு, வெளியேற்றப்பட்டனர்.
நாயக்கனூர், தீர்த்தகிரிவலசை, அத்திபாடி, உள்ளிட்ட 10 கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு தாழ்வான பகுதியில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பி வருகின்றனர்.
மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகாக சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராஜேஷ், மாவட்ட கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, பொதுப்பணித்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.