சென்னை, வட தமிழகத்தில் ஏப்.28 -ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று வேலூரில் அதிகபட்சமாக 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் 12 இடங்களில் 100 ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது.
பகல் வேளைகளில் வெப்பத்துடன் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், பயணிகள், பாதசாரிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதாலும், கடல் காற்று தொடங்குவதற்கு தாமதாவதாலும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பத்தின் அளவு ஒன்றிரண்டு டிகிரி அதிகரிக்கக்கூடும்.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர், கோவை, தருமபுரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கக் கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது