Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 23 May 2016

17 ஐ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: முதல்வர் ஜெ., உத்தரவு....

சென்னை: ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து 17ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுளளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்தார்.

1.சத்திய பிரதா சாகு- போக்குவரத்து ஆணையர்.
2.டாக்டர் டி. கார்த்திகேயன்- தொல்லியல் துறை இயக்குனர்.
3.-சமயமூர்த்தி- வேலைவாய்ப்பு மற்றும பயிற்சித்துறை இயக்குனர்.
4.கணேஷ்- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்.
5.டாக்டர். கருணாகரன்- நெல்லை மாவட்ட கலெக்டர்.
6.டாக்டர். நந்தகோபால்- வேலூர் மாவட்ட கலெக்டர்.
7.டி.என்.ஹரிஹரன்.- திண்டுக்கல மாவட்ட கலெக்டர்.
8.வெங்கடாசலம்- தேனி மாவட்ட கலெக்டர்.
9.வி.சம்பத்- சேலம் மாவட்ட கலெக்டர்.
10.மதிவானண்- திருவாரூர் மாவட்ட கலெக்டர்.
11.ஞானசேகரன்- திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்.
12.பூஜா குல்கர்னி- மாநில திட்ட இயக்குனர்.
13.எஸ். நாகராஜன்- அரசு இ. சேவை மைய இயக்குனர்.
14.ராஜேந்திர ரத்தனு- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்.
15.டி.என்.வெங்கடேஷ்- துணி நூல் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர்.
16.டாக்டர் எஸ். ஸ்வர்ணா- டுபிட்கோ தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்.
17.குமரகுரபரன் -தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் கூடுதல் பொறுப்பு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு :நவோதயா பள்ளிகள் சாதனை....

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவில், தேர்ச்சி சதவீதத்தில் நவோதயா பள்ளிகள் முதலிடத்திலும், தனியார் பள்ளிகள் கடைசி இடத்தி லும் உள்ளன.சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், 10.41 லட்சம் பேர் தேர்வு எழுதி, 83.05 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

முதலிடம்:மண்டல அளவிலான தேர்ச்சியில், திருவனந்தபுரம் மண்டல பள்ளிகள் முதலிடத்திலும், சென்னை மண்டலத்திலுள்ள, மஹாராஷ்டிரா, புதுவை, சென்னை, கர்நாடகா பள்ளிகள் இரண்டாம் இடமும் பெற்றன. தேசிய அளவில் பல துறை சார்ந்த, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மத்திய அரசின் பார்லிமென்ட் சட்டப்படி உருவாக்கப்பட்டு, மத்திய மனித வள அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் நவோதயா பள்ளிகள், 95.43 சதவீதம் என, அதிக தேர்ச்சி பெற்றுள்ளன.

அனுமதியில்லைதனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 82.40 சதவீதத்துடன், தேர்ச்சியில் கடைசி இடம் பிடித்துள்ளன. கடந்த ஆண்டும், நவோதயா பள்ளிகளே முதலிடம் பெற்றன. இந்த நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவங்க, தமிழக அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

சென்னை பள்ளிகளில் அதிக தேர்ச்சி:சென்னையில் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி பொருளாதாரவியல் பிரிவு மாணவி மீராகுமார், 490 மதிப்பெண், கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி பள்ளியின் அறிவியல் பிரிவு மாணவன் கிருஷ்ண மேனன், 490 மதிப்பெண், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவன் அஷ்வின், 492 மதிப்பெண், சென்னை நங்கநல்லுார் மாடர்ன் பள்ளி மாணவன், கோபாலபுரம் டி.ஏ.வி., பெண்கள் பள்ளி மாணவி ஹரிணி 487 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேசிய அளவில் திருவனந்தபுரத்துக்கு அடுத்தபடியாக, சென்னை மண்டலத்திலுள்ள தனியார் பள்ளிகள் தான், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதமாக, 93.95 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

தினம் ஒரு புத்தகம்..மலரும் அறிவியல்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்..சொத்தை நகமும் சுத்தமாகும்

சொத்தை நகமும் சுத்தமாகும்

விரல் நுனிகளில் ஏராளமான உணர் நரம்பு கூட்டங்கள் நிறைந்துள்ளன. இந்த விரல் நுனிகளை பாதுகாக்க இயற்கையால் வழங்கப்பட்ட பாதுகாப்பு கவசம்தான் நமது நகங்கள். நகங்களை பாதுகாப்பாக வைத்தால்தான் விரல்களையும் சக்தி குறையாமல் பாதுகாக்க முடியும்.
நகங்கள் சுண்ணம்பு, பாஸ்பரஸ், இறந்த புரதச் செல்களின் கலவையாகும். நாம் அதிகமாக உட்கொள்ளும் உலோகங்களும் நச்சுப்பொருள்களும்கூட உடலால் வெளியேற்றப்பட்டு, நகத்தால் சேமித்து வைக்கப்படுகின்றன. விரல் நுனிகளை வெப்பத்திலிருந்தும், குளிர்ச்சியிலிருந்தும் பாதுகாக்கும் நகங்களை வைத்தே ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை கணித்து விடலாம். சாம்பல் படிந்த வெள்ளைநிற புள்ளிகள் உளள நகங்கள் உலோகம் மற்றும் உப்புச்சத்து பற்றாக்குறையையும், வெளுத்துப்போன நகங்கள் ரத்த சோகையையும், கறுத்த நகங்கள் மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்பட்ட கல்லீரல் மற்றும் நுரையீரல் பலஹீனத்தையும், வெடிப்புள்ள நகங்கள் வைட்டமின் குறைபாட்டையும், சொத்தையான நகங்கள் ஒவ்வாமை மற்றும் தோல் நோய்களையும் காட்டுவதாக மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. நகங்களை பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் நகத்தில் ஏற்படும் சொத்தையானது விரல்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் மற்றும் மன உறுதியை குலைத்துவிடுகின்றன. ஒவ்வாமை மற்றும் பலவித தோல் நோய்களால் தோன்றும் நக சீர்குலைவை சீர்செய்யும் அற்புத மூலிகை நீர்மேல் நெருப்பு.
அம்மானியா பேசிரொ என்ற தாவரவியல் பெயர் கொண்ட லித்ரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தச் செடிகளின் இலைகளிலுள்ள லாவ்சோன் என்னும் பொருள் நகத்தை தாக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை கொல்லும் தன்மையுடையன. நீர்மேல் நெருப்பு மற்றும் மருதாணி இலைகளை நீர் விட்டுஅரைத்து நகத்தைச் சுற்றி தினமும் தடவி வர, நகச்சொத்தை மாறும். நீர்மேல்நெருப்பு இலைகளை எரித்து சாம்பலாக்கி, அந்த சாம்பலுடன் கால்பங்கு பொரித்த வெங்காரப்பொடி அல்லது போரிக் ஆசிட் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து நகச்சொத்தையுள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வர நகச்சொத்தை மறைய ஆரம்பிக்கும்.

நன்றி தினமலர்!

தெற்கு ரயில்வேயில் வருகிறது'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு....

ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் நேரம் தவறாமையை கடைபிடிக்க, தெற்கு ரயில்வேயில், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு முறை, விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

தெற்கு ரயில்வேயின் கீழ், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டங்கள் 
செயல்படுகின்றன; இங்கு, பல்வேறு நிலைகளில், ஒரு லட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர்.

தாமதமாக...இவர்களுக்கு, ஒரு மணி நேரம் வீதம், ஒரு மாதத்தில், இரு முறை தாமதமாக பணிக்கு வர, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர், இதை தவறாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.இதைத் தவிர்க்க, நேரம் தவறாமையை அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வரும் ரயில்வே நிர்வாகம், 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவேடு முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆதார் எண்இது குறித்து, ரயில்வே உயரதிகாரி கள் கூறியதாவது:ஊழியர்கள் பலர், அலுவலகங்களுக்கு தொடர்ந்து தாமதமாக வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுபோன்ற ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் நோக்கில், 'பயோமெட்ரிக்' முறை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் ஆதார் எண் பெற்று, அதை அடிப்படையாகக் கொண்டு, 'பயோமெட்ரிக்' தொழில்நுட்பத்தில் வருகைப் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தெற்கு ரயில்வே அலுவலகத்திலும், சென்னை கோட்ட அலுவலகங்களிலும் 'பயோமெட்ரிக்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கும் விரைவில்

விஸ்தரிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

விரைவில் வருகிறது ஸ்மார்ட் கார்டு !

சிவகங்கை மாவட்டத்தில், 'ஸ்மார்ட் கார்டு' முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. கையடக்க கணினிசிவகங்கை மாவட்டத்தில், 799 ரேஷன் கடைகளில், மூன்று லட்சத்து, 20 ஆயிரத்து, 754 கார்டுதாரர்கள் உள்ளனர். அனைத்து கார்டுதாரர்களின் அலைபேசி எண், ஆதார் எண், ரேஷன் கார்டு எண் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.


இந்த தகவல்கள் அனைத்தும், ரேஷன் கடைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள கையடக்க கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும், 'ஸ்மார்ட் கார்டை' ரேஷன் கடைகளில் கொடுத்தால் கணினியில் ஸ்கேன் செய்யப்பட்டு, வழங்கப்படும் பொருட்கள் குறித்த விவரம், பதிவு செய்யப்பட்டு ரசீது வழங்கப்படும்.

பொருட்கள் பதிவு செய்யப்பட்ட விவரம், சம்பந்தப்பட்ட கார்டு தாரர்களின் அலை

பேசிக்கு எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படும். மேலும், 'ஸ்மார்ட் கார்டு' கொண்டு வருபவர்களின் படம் கணினியில் பதிவு செய்யப்படும். இதன் காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தெரியாமல் பொருட்கள் வினியோகம் செய்வது தடுக்கப்படும். திருப்புவனம் தாலுகாவில் உள்ள, 79 ரேஷன் கடைகளுக்கும் கணினி வழங்கப்பட்டு தகவல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இத்திட்டம், வரும் ஆகஸ்டில் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:இந்த திட்டம் சரியானது தான். இதன் மூலம் கள்ளத்தனமாக பொருட்கள் விற்பது தடுக்கப்படும். பின் தங்கிய கிராமப்புறங்களில், 'நெட்ஒர்க் சிக்னல்' கிடைப்பதில் சிரமம் இருக்கும். சிக்னல் முழுமையாக கிடைத்தால் மட்டுமே பொருட்களை வினியோகம் செய்ய முடியும்.

முறைப்படுத்தப்படும்:ஒரு கடைக்கு குறைந்தபட்சம், 1,000 கார்டுதாரர்கள் உள்ளனர். ஒரே ஒரு விற்பனையாளர் மூலம் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பதிவு செய்வது, பொருட்களை எடை பார்த்து வழங்குவது முடியாத காரியம். எனவே, கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

குடோன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு, எடை குறைத்து தான் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. எனவே, இதையும் முறைப்படுத்த வேண்டும். ஸ்மார்ட் கார்டு முறையை நடைமுறைப்படுத்தும் போது, பொருட்கள் அனைத்தையும் பாக்கெட் போட்டு வழங்க வேண்டும்.

விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: அதிரடியை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா - முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள்

விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக முதல்வராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.

முதல்வர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்:

பயிர்க்கடன் தள்ளுபடி
1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன்,நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறுவிவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார். இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

மின் கட்டணச் சலுகை
2) மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

திருமண உதவித் திட்டம்
3) 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக 50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும்நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை
4) தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும், விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

டாஸ்மாக் நேரம் குறைப்பு
5) மதுவிலக்கு படிப்படியாக அமல் படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும், அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் இலட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, ஆகியவற்றுக்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

5 கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

1.பயிர்க்கடன் தள்ளுபடி

2.தொடக்கப்பள்ளி-காலை சிற்றுண்டி

3.டாஸ்மாக் நேரம் குறைப்பு(பகல் 12 முதல் இரவு 10 வரை)

4.தாலிக்கு தங்கம் 8 பவுன்

5.இலவச 100 யூனிட் மின்சாரம்.

விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் வரை மின்சாரம் இலவசம்

ஜூன் 21ல் யோகா தினம் :பள்ளிகளுக்கு உத்தரவு

அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், ஜூன், 21ல், யோகா தினம் கொண்டாட வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாரம்பரிய உடற்பயிற்சி கலையான யோகாவை, உலகம் முழுவதும் பிரபலப்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. 

இதன் பலனாக, ஜூன், 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும்என, ஐ.நா., சபை அறிவித்தது. இதன்படி, இரண்டு ஆண்டு களாக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், ஜூன், 21ம் தேதி, யோகா பயிற்சி வகுப்புகள் மற்றும் யோகா கண்காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்த, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., ஆகியவை சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.

பொது நுழைவுத்தேர்வு அவசியமா? நிபுணர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை.

இந்தாண்டு, ஸ்டேட் போர்டு எனப்படும், மாநிலக் கல்வி முறையில் படித்து, பிளஸ் 2 தேர்வானவர்களுக்கு, மருத்துவ கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வகை செய்யும், மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டுள்ளார்.

நாடு முழுவதும்,மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கு,தேசிய பொது நுழைவுத் தேர்வு அவசியம் என்றும்,இந்தாண்டும்,கட்டாயம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும்,சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதற்கு,தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து,மாநிலக் கல்வி முறையில் படித்து தேர்வான,பிளஸ்2மாணவர்களுக்கு,இந்தாண்டு மட்டும் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான,அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இந்த அவசரச் சட்டம்,ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில்,அவசர சட்டம் தொடர்பாக,சட்ட நிபுணர்களின் கருத்தை,ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டுள்ளார். சட்ட நிபுணர்களின் விளக்கத்துக்கு பின்,அவசர சட்டத்துக்கு,ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்தால்,இந்தாண்டு,மருத்துவக் கல்லுாரிகளில் சேர,மாநிலக் கல்வி முறையில்,பிளஸ்2தேர்வான மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

நாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'

தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்ரல், 13ல் முடிந்தது.10.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் வெளியாக உள்ளன. இரு தினங்கள் கழித்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கானஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது.இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வு வினாத்தாள்கள் எளிமையாக இருந்தன. 

ஆனால், பாடங்களின் உள்பகுதியிலிருந்து பல கேள்விகள்இடம் பெற்றதால், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்றபாடங்களில், 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை குறையலாம். மொழி பாடங்களில் சென்டம் வழங்க, மேலதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என, விடைத்தாள் திருத்தத்தின் போது, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. எனவே, மொழி பாடங்களிலும் சென்டம் பெறுவோர் எண்ணிக்கை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வெயில் "ஓவர்"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்றோர்கள் கோரிக்கை!

சென்னை பள்ளிகளை திறப்பதை தள்ளி வைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து அரசுதான் அறிவிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்,கோடை விடுமுறை முடிந்து ஜுன் 1-ந் தேதி முதல் பள்ளிக்கள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை முடிய ஒரு வார காலமே உள்ள நிலையில் இன்றும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.பல மாவட்டங்களில் தொடர் சதம் அடித்து வருகிறது வெயில். இந்நிலையில், வெயிலும் தாக்கத்தை குறைப்பது போல கடந்த வாரம் 2 நாட்கள் பெய்த மழை ஓரளவிற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. ஆனாலும், அடுத்த நாள் முதலே வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளது.கடுமையான வெயிலின் காரணமாக, குழந்தைகளுக்கு சரும நோய்கள் ஏற்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பொதுவான கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச்சங்க மாநில தலைவர் அருமைநாயகம் கூறுகையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயில் அதிகமாக உள்ளது.

 ஜுன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை 10 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ஜுன் 1-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதை தள்ளி வைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இது தெடர்பாக அரசுதான் அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

எந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்?'அண்ணா பல்கலை பட்டியல் வெளியீடு

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜி., கல்லுாரிகளில் சேர்வதற்கான குழப்பத்தை தீர்க்க, கடந்த ஆண்டு, 'கட் ஆப்' மதிப்பெண்பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பெரும்பாலானோர், மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்புகளில் சேர விரும்புகின்றனர்.

தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு சார்பில், ஒற்றைச் சாளர முறையில் அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

வெளிப்படையாக...

இந்த கவுன்சிலிங்கில், கணினி வழியில் மதிப்பெண்கள் தர வரிசை படுத்தப்பட்டு, வெளிப்படையாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தர வரிசையில், மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் படி முன்னுரிமை வழங்கப்படும்; முன்னணியில் உள்ளோருக்கு, அவர்களது விருப்ப பாடமும் விருப்பமான கல்லுாரியும் ஒதுக்கப்படும்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் தங்களது கட் ஆப் மதிப்பெண்ணுக்கு, எந்த பாடம் கிடைக்கும்; எந்த கல்லுாரியில் இடம் கிடைக்கும் என்ற குழப்பத்தில் உள்ளனர். இதற்குமுற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த ஆண்டு, 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியலை, அண்ணா பல்கலை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.இன்ஜி., கவுன்சிலிங்கில், எந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எந்த பாடம், எந்த கல்லுாரியில் இடம் ஒதுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

 இதை ஆய்வு செய்து, அதனடிப்படையில் இந்த ஆண்டில், எந்த பாடத்திற்கு எந்த கல்லுாரியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை மாணவர்களும், பெற்றோரும் ஓரளவு முடிவு செய்து, குழப்பமின்றி கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.ஆலோசனை:இந்த கல்வி ஆண்டில், இன்ஜி.,க்கான கட் ஆப், முந்தைய ஆண்டை விட, 0.25 முதல், 1 வரை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப மாணவர்கள் தங்களுக்கான பாடப் பிரிவுகளை திட்டமிடலாம் என, கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!