Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 16 October 2016

பள்ளிக்கல்வி - பாதுகாப்பான மாசற்ற தீபாவளி 2016 - மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுரைகள் வழங்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

800 சதுர அடியில் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் பிரமாண்ட ஓவியம். அரசுப் பள்ளி மாணவர்கள் வரைந்து சாதனை.

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் R.வெங்கடாபுரம், அரசு ஆ தி ந ஆரம்பப் பள்ளி, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இச் சாதனையை புரிந்தார்கள்.

ஏவுகனை நாயகன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாம் பிறந்த நாளான (15-10-2016) நேற்று  இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாட வேண்டி இப்பிரமாண்ட ஓவியம் வரைந்தனர்.

நட்புடன்
ஜானகிராமன் தேவராசன்.

இன்று 16.10.2016 ... உலக உணவு தினம்

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்...! உணவு உற்பத்தியில் வேண்டும் மாற்றம் ஊட்டி:ஐ.நா.,வின், உணவு மற்றும் விவசாய அமைப்பு, அக்., 16ம் தேதியை, உலக உணவு நாள் என அறிவித்துள்ளது. இத்தினத்தின், 
நடப்பாண்டு மையக்கருத்து, 'காலநிலை மாறுகிறது; உணவு மற்றும் விவசாயத்திலும் கட்டாயம் மாற்றம் வர வேண்டும்' என்பது தான்.ஐ.நா., சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள சில விஷயங்கள்:காலநிலை மாற்றத்தால், உணவு பாதுகாப்பு என்பது, மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மக்கள் தொகை, 2050ல், 960 கோடியாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப, விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். திட்டமிடல் அவசியம் இயற்கை வளங்களை வைத்து, விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். உணவு பதார்த்தங்களை வீணடிக்காமல், சிக்கனத்தை கையாள வேண்டும். விவசாயப் பொருட்களை அறுவடை செய்வது, அவற்றை சேமிப்பது, 'பேக்கிங்' செய்வது, வாகனம் மூலம் கொண்டு செல்வது, உட்கட்டமைப்பு மற்றும் சந்தை வசதி போன்றவற்றில் சரியான திட்டமிடலை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. நீலகிரி விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டமைப்பின் அமைப்பாளர் வேணுகோபால் கூறுகையில், ''சிறு, குறு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச தொழில் பாதுகாப்பு இருந்தாலே, அவர்கள், விவசாயத்தை விட்டு விலக மாட்டார்கள். பழமை மாறாமல் உள்ள விவசாயிகளை, அறிவியல் அறிவு நிறைந்த விவசாயிகளாக மாற்றவும், அதன் மூலம், விவசாயத்தில் இயந்திரமயமாக்கலை புகுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும்,'' என்றார். 2030ல் பசி தீருமா? வரும், 2030க்குள் பசியில்லா நிலையை (ஜீரோ ஹங்கர்) உருவாக்க, இந்தியா, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா, அர்ஜென்டினா உட்பட, 193 நாடுகள் உறுதி பூண்டுள்ளன. இந்நிலையை எட்ட, விவசாய முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்து, உலக நாடுகள் பங்கேற்கும் கருத்தரங்கு, மொராக்கோவில், நவ., 7 முதல் 18 வரை நடக்கிறது. இதில், காலநிலை மாற்றம், பசியில்லா நிலையை எய்துவது தொடர்பாக, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியக் குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம்?

சூரியக் குடும்பத்தில் பல ஆச்சரியமான விசயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில், தற்போது கண்டுபிடிக்க இருக்கும் விசயம் பெரியது. கிரகங்களின் எண்ணிக்கை ஒன்பதில் இருந்து எட்டாக குறைக்கப்பட்டது. புளூட்டோ என்ற, அளவில் மிகச் சிறியது என்ற காரணத்தினால் அதை Dwarf planet (சிறிய கிரகம்) இணைத்துவிட்டனர்.

இப்போது, புளுட்டோ கிரகத்தைத் தாண்டி பூமியைவிட அளவில் 10 மடங்கு பெரியதாக ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கிரகம்தானா? அல்லது சிறிய கிரகமா? என்ற கோணத்தில் ஆராய்ச்சியை தீவிரப்படுத்தி வருகின்றனர் விஞ்ஞானிகள். UZ224 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகத்தை Dark Energy Camera (DECam) என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதைக் கண்டுபிடித்ததுமே, இது குறித்த தகவல்கள் முறையாக விஞ்ஞானிகள் அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 13.6 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 1,100 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆராய்ச்சியின் முடிவில் கிரகம் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டால், ஒன்பதாவது கிரகமாக இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..

கண் தானத்தை ஊக்குவிக்கும் பன்முக திறன்படைத்த ஆசிரியர்!!!

தானத்தில் சிறந்தது எது' என பட்டிமன்றம் நடத்தினாலும் விடை காண முடியாது.
ஒரு மனிதன் வாழும் போது பொருளையும், மறைந்த பின் உடல் உறுப்புகளையும் தானம் செய்த 
வண்ணம் உள்ளனர். ஆனால் தானம் செய்பவர்களுக்கு பின்னால் யாரோ ஒருவர் துாண்டுதலாக இருக்கிறார் என்பது தான் முக்கியம்.

அந்த வகையில் பரமக்குடி கருப்பணசாமி கோயில் தெருவில் வசிக்கும் சவுராஷ்ட்ர
மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஜெயப்பிரகாஷ், 46 என்பவரை குறிப்பிடலாம். கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறார். 1998ல் ஆசிரியராக பணியில் சேர்ந்த பின் இதுவரை 30 முறை இரத்ததானம் செய்துள்ளார். அவசரத்தேவைகளுக்கு மற்றவர்களை ரத்ததானம் செய்ய ஊக்குவித்து வருகிறார்.

இவைதவிர கோயில்களில் நேர்முகவர்ணனை, அரசு சார்பில் நடக்கும் குடியரசு, சுதந்திர தின நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மார்கழியில் கோயில்களுக்கு சென்று திருப்பாவை தொடர் சொற்பொழிவு நடத்திவருகிறார். இவ்வாறு பன்முக திறனுடன் இடைவிடாத கல்வி, ஆன்மீகம், சேவை என, ஆசிரியரின் பட்டியல் நீள்கிறது.

சேவை பணிகள் குறித்து ஆசிரியர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:

கல்லுாரியில் படிக்கும் போதே என்.எஸ்.எஸ்., மூலம் சேவை செய்யும் எண்ணம் வந்தது. 10 வருடங்களாக கண் தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து 80 பேரிடம் கண்களை தானமாக பெற்று மற்றவர்களுக்கு உதவியுள்ளேன்.

ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலராக ராதாகிருஷ்ணன் இருந்த போது, அறிவியல் பயிற்சி கட்டகம் தாயாரித்து கொடுத்துள்ளேன். 2011ல் சமச்சீர் கல்வி ஆரம்பித்த நாளில் 10 ம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து சக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். இத்துடன் முதலமைச்சரின் நிகழ்ச்சி தொகுப்பாளராக செல்ல, தமிழக வளர்ச்சித்துறையால் நடத்தப்பட்ட நேர்முக தேர்வில் பங்கேற்றுள்ளேன், என்றார்

டிப்ளமோ நர்சிங் 18ல் கலந்தாய்வு!

சென்னை: இரண்டு ஆண்டு, டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு, வரும், 18ல், துவங்குகிறது.

தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு, டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன;இதற்கு, 6,535 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 18முதல், 20 வரை, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது. சுயநிதி கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,100 பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு, வரும், 21 முதல், 27 வரை நடக்கிறது.

இது தொடர்பான விரிவான விபரங்களை,www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புதுச்சேரி-அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி: நீட் தேர்வில் வெற்றி பெற சிறப்பு ஏற்பாடு

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கான, நீட் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்புகள் 6 மையங்களில் நேற்று துவங்கியது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர நீட் எனப்படும் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பு படிக்க முடியும்.

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட் தேர்வு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.

அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு, நீட் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான தகுதி தேர்வு 26ம் தேதி நடத்தப்பட்டது.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற புதுச்சேரியை சேர்ந்த 200 மாணவ, மாணவிகளும், காரைக்காலில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான நீட் சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. புதுச்சேரி நகர பகுதியில் மாணவிகளுக்கு, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், மாணவர்களுக்கு வீரமாமுனிவர் பள்ளியிலும் பயிற்சி துவங்கியது.

கிராம புறத்தில் மாணவிகளுக்கான பயிற்சி வகுப்புகள், கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், மாணவர்களுக்கு வில்லியனுார் விவேகானந்தா அரசு பள்ளியிலும் வகுப்பு துவங்கியது.

இதேபோல், காரைக்காலில் கோவில்பத்து தந்தை பெரியார் பள்ளி, அன்னை தெரேசா பள்ளியிலும் வகுப்புகள் துவங்கியது.

இந்த வகுப்புகள் சனிக்கிழமை தோறும் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, தொடர்ந்து 20 வாரங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் அரசு பெண்கள் பள்ளியில் நடந்த நீட் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்க விழாவில், பள்ளி முதல்வர் வாசுகி வரவேற்றார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் குமார் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசுகையில்,'மாணவர்களுக்கு உயர்வான எண்ணம் வேண்டும். தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி, படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண்களை பெற வேண்டும். நீட் தேர்வுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் பயிற்சியை பயன்படுத்தி கொண்டு முன்னேற வேண்டும். ஆசிரியர்களிடம் பாடம் தொடர்பாக, சந்தேகம் கேட்க தயங்க கூடாது' என்றார்.

நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் தோத்தாரி, ஆசிரியர்கள் குப்புசாமி, சீனிவாசன், முல்லைவாணன், பிரேம்குமார் ஜூலியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!