Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 21 January 2017

ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது: அவசரச் சட்டம் பிறப்பித்தார் ஆளுநர்

தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பித்தார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

மத்திய அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அவரச் சட்டத்துக்கு, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்ட அவசரச் சட்டத்தின் மூலம், ஜல்லிக்கட்டுக்கு இதுவரை இருந்த தடை நீங்கியது.

இதையடுத்து, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் துவங்கிவிட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை மதுரை செல்கிறார்?

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை மதுரை செல்கிறார். ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திலும் நாளை ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்புள்ளது. அவர் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டை தாமே தொடங்கி வைக்க இருப்பதாகவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று முன்தினம் காலை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என்று மோடி கைவிரித்து விட்டார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக சென்னை திரும்பாமல், நேற்று முன்தினம் முழுவதும் டெல்லியில் தங்கி பல்வேறு சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன், அவசர சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் டெல்லியிலேயே தங்கி, ஜல்லிக்கட்டு நடத்த வழி செய்யும் வகையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் விவாதித்தார். அதன் அடிப்படையில், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு மாநில அரசு திருத்தம் ஒன்றை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தத்தை, ஒரு அவசர சட்டமாக பிறப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி, இந்த வரைவு அவசர சட்டம் மத்திய அரசின் உள்துறைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் பரிந்துரையுடன், இந்திய குடியரசு தலைவருக்கும் அனுப்பப்பட்டது. இதனையடுத்து ஒரு சில மணிநேரத்தில் தமிழக ஆளுநர் அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளார். அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை தேர்வு அலுவலர் நியமனம், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் சார்பான இயக்குனரின் உத்தரவு


தொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள் சேர்க்கைச் சார்பான விவரங்கள் உள்ளீடு செய்தது சார்பான ஆய்வு கூட்டம் 30.01.2017 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

பயமும் இல்லை; பணியிழந்தாலும் கவலையில்லை..! ஜல்லிக்கட்டை ஆதரித்து கலக்கிய காவலர்

சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆயுதப்படை காவலர் உணர்ச்சிகரமாகப் பேசினார். அப்போது, "பயமும் இல்லை. 
பணியிழந்தாலும் கவலையும் இல்லை' என்று அவர் பேசியது போராட்டத்தில் பங்கேற்றோருக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்தது. இதனால், அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாய அழகு, சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4 நாள்களாக கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை உணர்ச்சி வேகத்துடன் காணப்பட்ட அவர், விவேகானந்தர் இல்லம் எதிரே போராட்டம் நடைபெறும் மேடை அருகே வந்தார். அங்கு இருந்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் தனது ஆதரவைத் தெரிவித்தார். பின்னர், அவர் பேசியது:-
இந்த மண்ணில்தான் காந்தியும், நேதாஜியும் பிறந்தனர். காந்தி பிறந்த மண் என வாக்கு கேட்பவர்கள், காந்திய வழியில் போராடும் மக்களின் பிரச்னைகளை கேட்க வரமாட்டீர்களா?. காவலராக இருப்பதால் இன்னும் வெளிப்படையாக பேச முடியவில்லை. காவலர்களுக்கும் தமிழன் என்ற உணர்வு உள்ளது.
குழந்தைகள் தாய் பால் கூட குடிக்காமல் இருக்கலாம், ஆனால் பசும்பால் குடிக்காமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட பசுவை அழிய விடக் கூடாது.
விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், செயற்கை உரம் போட்டு மண்ணை சாகடித்துவிட்டோம். இனக்கலப்பு செய்து மாட்டு இனத்தை அழிக்க நினைக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து கலாசாரத்தை அழிக்க பார்க்கிறார்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம். இந்தப் போராட்டத்தில் பேசியதால், எந்தப் பயமும் இல்லை. வேலையில் இருந்து காவல்துறை நீக்கினாலும் பரவாயில்லை.
ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டம் வெற்றி அடைய வேண்டும் என்றார்.

காவலருக்கு குவிந்த வாழ்த்துகள்: சீருடையிலே காவலர் மாய அழகு பேசுவதை பார்த்த உயர் அதிகாரிகள் மேடையை நோக்கி வேகமாக வந்தனர். ஆனால், அவரது பேச்சு போராட்டத்தில் ஈடுபட்டோரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியது. மேலும், மேடையை விட்டு இறங்க முயற்சித்த அவரை, இளைஞர்கள் தங்களது தோள்களில் தூக்கி வைத்து ஆர்ப்பரித்தனர். மேலும், கரகோஷம் எழுப்பினர்.
மற்றொரு காவலரும் ஆதரவு: இதேபோல், அண்ணா சதுக்கம் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த காவலர் விஜயகுமாரும் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார்.
அதிகாரிகள் விசாரணை: இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் இரு காவலர்களிடமும் விசாரணை செய்தனர்.

தேர்வுகள் குறித்து 29-இல் வானொலியில் மோடி உரை

வரும் 29-ஆம் தேதி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகவுள்ள "மனதின் குரல்' நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தேர்வுகள் தொடர்பாக உரையாற்ற உள்ளார்.
இதுதொடர்பாக, டுவிட்டர் வலைதளத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

வரும் 29-ஆம் தேதி "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி இறுதித் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் குறித்து பேச உள்ளேன்.
எனவே, மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்களின் தேர்வு கால அனுபவங்கள் உள்ளிட்ட கருத்துகளை பதிவு செய்யக் கோருகிறேன். அவை, பிறருக்கு ஊக்கமளிப்பவையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்வுக்குத் தயாராவது, தேர்வுக் காலங்களில் பெற்றோர், ஆசிரியர்களின் பங்கு உள்ளிட்டவை தொடர்பான கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு தொடர்பாக தங்களுடைய வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பகிர்ந்து கொள்ளலாம்.

இவை குறித்து பிரதமருக்குத் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதிவுகள், "மனதின் குரல்' நிகழ்ச்சியின்போது ஒலிபரப்பப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு...

ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, தேர்வுகளை ஒத்திவைப்பதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

சென்னைப் பல்கலை.யில்...: 
தமிழகத்தில் இப்போது நிலவி வரும் எதிர்பாராத விதமான சூழ்நிலை காரணமாக, சனி,
ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜனவரி 21, 22) நடத்தப்பட இருந்த தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் ஜனவரி 28, 29-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.

பிற தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் வழக்கம்போல நடைபெறும் என சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
திறந்தநிலைப் பல்கலை.யில்...: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மார்ச் 19, 25-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. தேர்வறை நுழைவுச் சீட்டுகளை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கல்வி அடைவுத்திறன் தேர்வுகள் Achievement Test எதற்காக?

மத்திய மாநில அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் நிதியின்அளவு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தேசிய இடைநிலைக்கல்வித் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் பல கோடி ரூபாயை கல்விக்காக செலவு செய்யும் அரசு அந்த நிதியினால் விளையும் பயனை அறிந்துகொள்ள விரும்புவது இயல்பான ஒரு நடைமுறை ஆகும்.
அதற்கென பல தர மதிப்பீட்டுக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றுள் ஒன்றுதான் அடைவுத்திறன் தேர்வு. இத்தேர்வு இரு நிலைகளில் நடைபெறுகிறது.

1. தேசிய அடைவுத்திறன் தேர்வு (NAS) எனப்படும் (National Achievement survey)

2. (SLAS) State Level Achievement Survey எனப்படும் மாநில அடைவுத்திறன் தேர்வு.இத்தேர்வினை (SSA) அனைவருக்கும் கல்வி இயக்கம் முன்னின்று நடத்துகிறது.

2012 ஆம் ஆண்டிலிருந்து இத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான மாநில அடைவுத்திறன் தேர்வு நடைபெற்று முடிவு வெளிவர உள்ள நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை இத்தேர்வு ஏற்படுத்தியுள்ளது.இத்தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்த ஆண்டுக்கான கல்வித்திட்டங்களும் பயிற்சிகளும் வடிவமைக்கப்படும்.முன்பு இத்தேர்வுகளைக் குறித்த தகவல்கள் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது.

இப்போது இத்தேர்வுகளுக்குத் தேசிய முக்கியத்துவம் கிடைத்துள்ளது. உலக அளவில் மாணவர்களை மதிப்பிடுவதற்கான பல தேர்வு முறைகள் உள்ளன.

அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை Programme for International Student Assessment (PISA), Progress in International Reading Literacy Study (PIRLS), Trends in International Mathematics and Science Studies (TIMSS).

இந்தத் தேர்வுகளுக்கு இணையாகச் செவ்வியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம் நாட்டு அடைவுத்திறன் தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கற்றுக்கொண்ட திறன்களைச் சோதித்து அறியும் பொருட்டு நடைபெறும் தேர்வுகள்தான் இவை. இத்தேர்வில் மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பங்குபெறுகின்றனர். மொழிப்பாடம் கணக்கு மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் பல்வேறு நிலைகளில் கற்றல் அடைவுத் திறன்களைச் சோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வினாக்களைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்படும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தேர்வு நடைபெற்றாலும் அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெறுவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.இத்தேர்வு பள்ளியில் நடைபெறும் வழக்கமான தேர்வுகளிலிருந்து மாறுபட்டது.

போட்டித் தேர்வுகளுக்கு வழங்கப்படுவது போல் பல விடைகளிலிருந்து ஒரு விடையைத் தேர்வு செய்யும் முறையில் (அப்ஜக்டிவ் டைப்) வினாக்கள் அமைந்திருக்கும். இதன் மூலம் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பல திறன்களையும் எவ்வாறு கற்றுள்ளனர், எந்தத் திறன்களில் பின்தங்கியுள்ளனர் என்பதை எளிதாக மதிப்பிடும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப் பட்டிருக்கும். மேலும் மாணவர்கள் கற்ற திறன்களை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தும் வகையிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

மொழிப்பாடங்களில் கேட்டல் திறன், சொற்களஞ்சியத் திறன், படித்தல் திறன் ஆகியவை மதிப்பிடப்படுகின்றன. கணக்குப் பாடத்தில் அடிப்படைத் திறன்கள் விவரங்களைக் கையாளும் திறன் போன்ற திறன்கள் சோதிக்கப்படுகின்றன.

இத்தேர்வை பள்ளி ஆசிரியர்கள் நடத்து வதில்லை. வட்டார வளமையத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நடத்துவர்.வேறு ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக ஆராய்ந்து ஒப்பிட்டு மாநிலத்திற்கு அனுப்பப்படும். இதன்மூலம் கல்வியில் மாணவர்களின் திறன்கள் ஒப்பிடப்படுகின்றன. ஆண் பெண் ஒப்பீடு, நகரங்களுக்கும் கிராமங்களுக்குமான ஒப்பீடு,மாணவர்களின் சமூக நிலைகளுக்கேற்ப ஒப்பீடு எனப் பலவகைஒப்பீடுகள் அளவிடப்படுகின்றன.

இந்தத் தேர்வு கல்விக்கான எதிர்காலத் திட்டங்களை வடிவமைக்கவும் உதவுகின்றன. எந்தப் பாடத்தில் எந்தத் திறனில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என அறிந்து கொள்வதன் மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் குறிப்பிட்ட திறன்களை வலுவூட்ட வேண்டும் எனக் கல்வித்துறை திட்டமிடுவதற்கும் இது உதவுகிறது. மேலும் தேர்வு முடிவுகள் பல்வேறு கல்வி ஆய்வுகளுக்குப் பயன்படுகின்றன.கல்வியில் காணப்படும் பாலியல் பாகுபாடுகளைக் களையவும், கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூகக்காரணிகளைக் கண்டறிந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளை வழங்கவும் இத்தேர்வுகள் கல்வியாளர்களுக்குத் துணைபுரிகின்றன.

மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் "கட்': ஜேஎன்யு நிர்வாகம் அறிவிப்பு.

புது தில்லி: ஜனவரி 17-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம், படிகள் பிடித்தம் செய்யப்படும் என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய ஒரு நாள் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம், தினப்படி அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்று ஆசிரியர்களுக்கு  பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 இது தொடர்பாக ஜேஎன்யு பதிவாளர் பிரமோத் குமார் ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு அன்றைய தினத்திற்கான ஊதியமும், படிகளும் வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று, விதிகளைப் பின்பற்றாமல் இருந்ததாக கூறி ஐந்து பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, இதுகுறித்து ஜேஎன்யு ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் அஜய் பட்னாய்க் கூறுகையில், "ஆசிரியர்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்வது என்பது மற்றொரு அச்சுறுத்தலாகும். மாணவர்கள் மத்தியில் பேசியதற்காக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது ஊதியத்தை பிடித்து மிரட்டுகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டிருப்பது போல ஆசிரியர்களுக்கான நடத்தை விதிகள் மத்திய குடிமைப் பணியின் (சிசிஎஸ்) கீழ் வராது' என்றார்.
 இதற்கிடையே, பல்கலைக்கழக நிர்வாகம் இதை மறுத்துள்ளது. "பல்கலைக்கழகத்திற்கென சொந்தமாக விதிகள் ஏதும் இல்லாத பட்சத்தில், மத்திய அரசு விதிகள் பொருந்தும்' என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
அதேபோல்,  ஜாக்டோ அமைப்பில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களும் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சென்ைன மாவட்ட தலைவர் தேவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசும் அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். மாலை 4.30 மணிக்குடிபிஐ வளாகத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவகத்தின் முன்பு கூடிய தொடக்க கல்வித்துறை பணியாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

குரூப்–2 ஏ தேர்வு: போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர் 7 ஆண்டு தேர்வு எழுத தடை

தேர்வாணைய இணையதளத்தில் இருந்து எழுத்து தேர்வு முடிவுகளை தேர்வு எழுதிய சூ.பிரேம் என்பவர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதை திருத்தி போலி மதிப்பெண் சான்றிதழை தயாரித்து அதை தேர்வாணையத்திற்கு அனுப்பி உள்ளார்.
இவ்வாறு சமர்ப்பித்த காரணத்தால் அவர் 7 ஆண்டுகள் தேர்வாணையம் நடத்தும் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளில் இருந்தும், தெரிவுகளில்இருந்தும் கலந்துகொள்வதற்கு தேர்வாணையத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அவர் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாநகர போலீஸ் ஆணையரிடத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அதிகாரிகள் 5 பேரின் ஒருங்கிணைப்பால் ஒரே நாளில் தயாரான ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்

ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட முன்வடிவைத் தயாரிக்கும் நடவடிக்கை, அதற்கு ஒரே நாளில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைத்த பணி ஆகியவற்றுக்குப் பின்புலமாக தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து உயரதிகாரிகள் தில்லியில் செயல்பட்டனர்.
விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தில் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜல்லிக்கட்டில் காளை பங்கேற்க ஏதுவாக அவசரச் சட்டத்தைத் தயாரிக்க தமிழக அரசு வியாழக்கிழமை (ஜனவரி 19) நள்ளிரவு முடிவு செய்தது.
விடிய, விடிய கூட்டம்: இதையொட்டி, தில்லியில் தமிழகக் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி, தமிழக சட்டத் துறைச் செயலர் (பொறுப்பு) எஸ்.எஸ்.பூவலிங்கம், சட்ட வல்லுநர்கள், தில்லியில் உள்ள தமிழக அரசு உயரதிகாரிகள் ஆகியோர் வியாழக்கிழமை (ஜனவரி 19) பிற்பகல் தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரையிலும் ஜல்லிக்கட்டு சட்ட முன்வடிவைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு வெள்ளிக்கிழமை காலையில் சென்னை புறப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறையின் பரிசீலனைக்கு, ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட முன்வடிவை தமிழக கால்நடைப் பராமரிப்புத் துறைச் செயலர் பொறுப்பைக் கூடுதலாக கவனிக்கும் ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி, முதல்வரின் செயலர்களில் ஒருவரும் ஐஏஎஸ் அதிகாரியுமான விஜயகுமார், எஸ்.எஸ். பூவலிங்கம், தமிழகப் பிரிவு ஐஏஎஸ் உயரதிகாரி முருகானந்தம், தமிழ்நாடு அரசு இல்லத் துணை உள்ளுறை ஆணையர் சின்னதுரை ஆகியோர் கொண்டு சென்றனர்.
தாமாக முன்வந்த அதிகாரி: இதில் முருகானந்தம், மத்திய அரசுப் பணியில் 2009-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி விட்டு கடந்த ஆண்டு அக்டோபரில் மாநில அரசுப் பணிக்குத் திரும்பியவர். தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட உள்ளுறை ஆணையராக முருகானந்தத்தை தமிழக அரசு கடந்த வாரம் நியமித்தது. அந்தப் பொறுப்பை முறைப்படி இன்னும் ஏற்காத நிலையில், தாமாக முன்வந்து ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பான நிர்வாகப் பணியில் தன்னை முருகானந்தம் இணைத்துக் கொண்டார்.
"ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட விவகாரம்' மத்திய உள்துறை, கால்நடைப் பராமரிப்பு, கலாசாரம், வனம், சட்டம் ஆகிய துறைகள் தொடர்புடையது. இந்தத் துறைகளின் ஒப்புதலைப் பெறும் நடவடிக்கையில் மேற்கண்ட ஐந்து தமிழக அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.
அமைச்சர் இல்லை: குறிப்பாக, மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, அவரது தனிச் செயலரும் ஐஏஎஸ் அதிகாரியுமான ரவிந்தர் ஆகியோர் அரசுமுறைப் பயணமாக வெளிநாட்டில் இருந்தனர். இதையடுத்து, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் தனிச் செயலராகப் பணியாற்றி வரும் உத்தர பிரதேச மாநில பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியும் தமிழருமான செந்தில் பாண்டியனை முருகானந்தம் தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக தனது ஐஏஎஸ் மாநிலப் பிரிவைச் சேர்ந்த உயரதிகாரியான ரவிந்தரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து செந்தில்பாண்டியன் விளக்கினார்.
இதையடுத்து, தமிழகத்தின் ஜல்லிக்கட்டு தொடர்பான கோப்பை உடனே கவனிக்குமாறு மத்திய கலாசாரத் துறை இணைச் செயலர் பங்கஜ் நாக் என்ற அதிகாரிக்கு கலாசாரத் துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில், தஞ்சையில் உள்ள தென் மண்டலக் கலாசார மைய இயக்குநர் பரிசீலனைக்கு சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ள கலாசாரம், பாரம்பரியம் தொடர்பான குறிப்புகள் பிற்பகலில் அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு மத்திய சட்டம், உள்துறை அமைச்சகங்கள் பின்னர் முறைப்படி ஒப்புதல் அளித்தன.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!