Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 13 February 2017

உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் அறிவை வளர்க்கணும்

'மாணவர்களுக்கு, உயர்நிலைப் பள்ளி மட்டத்தில் இருந்தே தேர்தல் அறிவை புகட்ட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது
. கடந்த ஆண்டு ஜூலையில், தலைமை தேர்தல் கமிஷனர், நசிம் ஜைதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், பள்ளிப் பாடத்தில் தேர்தல் அறிவை புகட்டும் வகையிலான பாடங்கள் சேர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.உயர்நிலைப் பள்ளி மட்டத்திலும், அதற்கு மேற்பட்ட படிப்புகளின் போதும், தேர்தல் அறிவை வளர்க்கும் பாடங்கள் சேர்க்கப்படுவதால் சிறந்த பயன் கிடைக்கும்
 என, அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்டில், அந்த கடிதத்திற்கு பதில் அளித்திருந்த அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 'நாட்டின் தேசிய பள்ளி பாடத் திட்டங்களை வடிவமைக்கும், என்.சி.இ.ஆர்.டி.,யுடன், தேர்தல் கமிஷன் கூறிய யோசனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்த பாடத்திட்ட ஆய்வின் போது தேர்தல் கமிஷனின் யோசனைகளை கருத்தில் கொள்ளலாம் என, முடிவு செய்யப்பட்டது' என்றார்.இதற்கிடையே, பள்ளிகள் உதவியுடன் தேர்தல் அறிவை மாணவர்களுக்கு புகட்டும் வகையிலான சிறப்பு திட்டத்தை, தேர்தல் நிபுணர் குழு ஜனவரியில் துவக்கியது. இத்திட்டப்படி, 5,000 தேர்தல் பதிவு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி கள், தலைமை தேர்தல் அதிகாரிகள், உயர்நிலைப் பள்ளிகளில், ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில், 15 - 17 வயதுடைய மாணவர்களுடன் கலந்துரையாடினர். தேர்தல் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. நாடு முழுவதும், 15 - 17 வயதினராக, 6.2 கோடி பேர் உள்ளனர். இவர்களை, வருங்கால வாக்காளர்களாக, தேர்தல் கமிஷன் வர்ணித்துள்ளது. இவர்களில் ஒவ்வொரு ஆண்டும், இரண்டு கோடி பேர், 18 வயது நிரம்பி, முதல் முறை ஓட்டளிக்க தகுதி பெறுபவராக உருவெடுக்கின்றனர். இதுகுறித்து, தேசிய வாக்காளர் தினமான, ஜன., 25ல், நடந்த நிகழ்ச்சியின் போது, தலைமை தேர்தல் ஆணையர், நசிம் ஜைதி கூறுகையில், 'தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், முதல் முறை ஓட்டளிக்கும் தகுதி பெறுவோர், தேர்தலில் கட்டாயம் பங்கு பெறுவதை ஊக்குவிக்கும்' என்றார்.
இதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு உயர்நிலைப் பள்ளி மட்டத்தில் இருந்தே தேர்தல் அறிவை புகட்ட வேண்டும் என, தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது.

அரசு இ - சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்?

அரசு, 'இ - சேவை' மையங்களில், இணையதளம் மூலம், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சேவையை, உணவு துறை துவக்க உள்ளது. தமிழகத்தில், ரேஷன் கடைகளில், குறைந்த விலையில் உணவு பொருட்கள் வாங்குவது உட்பட, அரசின் பல சலுகைகளைப் பெற, ரேஷன் கார்டு அவசியம். 

ரேஷன் கார்டு பெற வேண்டும் எனில், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் கார்டு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால், குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை. இதற்கு தீர்வாக, புதிய நடைமுறை வர உள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் துறையின், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் சேவைக்கான பணி முடிந்துள்ளது. இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

தற்போது, முகவரி மாற்றம்; பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளை இணையதளத்தில் செய்யலாம். தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், எல்காட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, 10 ஆயிரம், 'இ - சேவை' மையங்கள் உள்ளன. அவற்றின் மூலமும், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் துவங்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

மாணவர்களை தேடிச்சென்று பாடம் தன்னம்பிக்கை தரும் ஆய்வாளர்

மதுரை பைகாரா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 70. ஓய்வுபெற்ற மீன்வளத்துறை ஆய்வாளர். சீர்காழியில் பணிபுரிந்த போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பாராட்டை நேரில் பெற்றார். கலாமின் கொள்கை யில் அதிக பற்று கொண்டார். அதனால் அப்துல்கலாமின் அறிவுரைகள் மற்றும் தன்னம்பிக்கை வாசகங்களை கணினியில் டைப் செய்து கலர் அட்டையில் ஒட்டுகிறார். 

தினமும் கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு சென்று அட்டைகளை கரும்பலகையில் ஒட்டி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பாடம் நடத்தி வருகிறார். பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களையும் வாங்கி கொடுக்கிறார். பலன் தரும் மரக்கன்றுகளையும் நட்டு வருகிறார்.
 

தவிர, படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் சிறை கைதியாக இருந்து விடுதலை பெறுவோர் அரசு மானியத்துடன் மீன் வளர்ப்பு பண்ணை அமைக்கவும் வழிகாட்டு கிறார். பாடம் நடத்த செல்லும் பள்ளிகளில் மருத்துவ குணம் நிறைந்த மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.

தினமலர் நாளிதழில் சட்டம் சார்ந்து வரக்கூடிய செய்திகளை சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

மேலும் அரசு மானியத்துடன் பண்ணை குட்டை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார். ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் முடங்காமல் மாணவர்களை தேடி சென்று தன்னம்பிக்கை வளர்த்து வரும் இவரை பாராட்ட 

98656 22602.