Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 12 March 2017

பணி நிரந்தரம் கோரி, உண்ணாவிரதம் இருந்த ஆசிரியைகளை நள்ளிரவில் விரட்டியடித்த போலீஸ்-DINAMALAR

பணி நிரந்தரம் கோரி, உண்ணாவிரதம் இருந்த ஆசிரியைகளை, போலீசார், நள்ளிரவில் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 அரசு பள்ளிகளில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களை நடத்தினர். அவர்களுக்கு, மாதம், 7,000 ரூபாய் மட்டும் சம்பளம் வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், பணி நிரந்தரம் கோரி, 5,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், சென்னையில், நேற்று முன்தினம், உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

அவர்களிடம், அரசு தரப்பில், அதிகாரபூர்வ பேச்சு நடத்தவில்லை. போராட்ட பந்தலில், சீனிவாசன் என்ற ஆசிரியர், விஷ விதையை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, ஆசிரியர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, பல முகாம்களில் தங்க வைத்தனர். 

நேற்று நள்ளிரவு, 12:30 மணிக்கு, அனைத்து முகாம்களில் இருந்தும், ஆசிரியர்களை கட்டாயமாக, போலீசார் வெளியேற்றினர். அதில், வெளி மாவட்டங்களை சேர்ந்த, 1,000 ஆசிரியைகளும் இருந்தனர். 'நள்ளிரவில் வெளியில் பாதுகாப்பு இல்லை; முகாம்களில் தங்கி விட்டு, காலையில் செல்கிறோம்' என அவர்கள், போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தனர். 
அதை, போலீசார் கண்டுகொள்ளாமல், இரக்கமின்றி அனைவரையும், நடுரோட்டில் துரத்தி விட்டனர். இதனால், ஆசிரியைகள், எங்கு செல்வது என, தெரியாமல், பிளாட்பாரங்களில் அச்சத்தில் விடியும் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: 
பெண்கள் என்றும் பாராமல், போலீசார் நள்ளிரவில் கடுமையாக நடந்து கொண்டனர்; அமைதியாக உண்ணாவிரதம் இருந்தவர்களிடம், போலீசார் நடந்து கொண்ட விதம், ஆசிரியர்கள், மாணவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அனைத்து ஆசிரியர் சங்கங்களும் போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது?

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில், முடிவுகள் தாமதமாகி உள்ளன.
அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 
தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு இடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், நேர்முக தேர்வு நடத்தப்படும்.
நேர்முக தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி ஒதுக்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்திருந்தது. ஆனால், 'எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடாமல் தேர்வு நடந்தால், பணி நியமனத்தில் முறைகேடு ஏற்படும்' எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை, நீதிபதி ஹரிபரந்தாமன் விசாரித்து, 2015 ஆக., 7ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், 'எழுத்து தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண்ணை, மொத்தமாக கணக்கிட்டு, அதன்படி, இறுதி முடிவு அறிவிக்கலாம்' என, தெரிவித்தார்.

இந்த உத்தரவு வெளியாகி, ஒன்றே முக்கால் ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆனால், இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதுகுறித்து, அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வர்கள் கூட்டமைப்பினர், பல முறை அரசுக்கு மனு அனுப்பியும், தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், தேர்வு முடிவுகள் மாயமாகி விட்டதாக, துறையில் திடீர் வதந்தி கிளம்பியது; அதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

TET No Need For Before 23.08.2010 Appointment Teachers (TRB - 04/2012 , Date - 07.03.2012)

TRB நாளிதழில் அறிவிக்கை (திருத்தம் / விளக்கம்) - 23.08.2010 க்கு முன் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி, அதன்பின் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு, Aided & Un-Aided பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை & பட்டதாரி ஆசிரியர்கள் TET தேர்வைஎழுத தேவையில்லை. - TRB அறிவிக்கை தகவல்.

TRB நாளிதழ் அறிவிக்கை எண்: 04/2012,

நாள்: 07.03.2012

திருத்தம் / விளக்க அறிவிக்கை 

(Corrigendum என்பதன் பொருள் திருத்தப்பட வேண்டிய தவறு

பிளஸ் 2 தேர்வு விடைக்குறிப்பு தயாரிப்பு தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் யோசனை

பிளஸ் 2 தேர்வில், விடைக் குறிப்புகளை பிழையின்றி தயாரிக்க, தேர்வுத்துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. 
இதில், 20 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். மொழி பாடங்களுக்கு தேர்வு முடிந்து, முக்கிய பாடங்களுக்கு தேர்வு துவங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடக்கும் போதே, முந்தைய நாளில் முடிந்த பாடங்களுக்கு, விடை திருத்தம் துவங்கி விடும். இந்த ஆண்டு, அனைத்து தேர்வுகளும் முடிந்த பிறகே, ஏப்., 1 முதல் விடை திருத்தம் துவங்குகிறது.இந்நிலையில், விடைக் குறிப்புகள் தயாரிக்கும் பணி, வரும், 15 முதல் துவங்குகிறது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:பொது தேர்வுக்கான விடை திருத்தம் துவங்கும் நாளில், விடைக் குறிப்புகள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும். அப்போது தான், விடைக் குறிப்பில் இருக்கும் தவறுகள் தெரியவரும். ஆனால், உடனடியாக தவறுகள் திருத்தப்படாது என்பதால், முதலில் திருத்தப்படும் விடைத்தாள்களில், சரியான விடை இருந்தாலும், விடைக் குறிப்பு தவறாக இருப்பதால், அந்த மாணவருக்கு மதிப்பெண் கிடைக்காது.
எனவே, தேர்வை சரியாக எழுதும் மாணவர்களும், அதற்கான மதிப்பெண்ணை பெறாமல் பாதிக்கப்படுவது உண்டு.

சில மாணவர்கள் தேர்வு முடிவு வந்ததும், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தால் மட்டுமே, அவர்களுக்கு முறையே சேர வேண்டிய மதிப்பெண் கிடைக்கும்.
எனவே, விடைக்குறிப்பை தயாரித்து, அதை விடைத்தாள் திருத்தம் துவங்கும் முன்னரே சரிபார்த்தால், எந்த மாணவரும் பாதிக்கப்பட மாட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின்வாரிய பணியிடம் - இடைத்தரகர்களை நம்பாதீங்க: மின் வாரியம் வேண்டுகோள்

நேர்காணல் நடத்தும் அதிகாரிகள் குழுவை, தேர்வர்களே தேர்வு செய்ய உள்ளதால், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என, மின் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், 375 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, நாளை முதல், 18ம் தேதி வரை, நேர்காணல் நடத்துகிறது. சிலர், வேலை வாங்கி தருவதாக கூறி, தேர்வர்களிடம் இருந்து, பல லட்சம் ரூபாய் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரியம் விடுத்த அறிக்கை:நேர்காணலுக்கு, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு நாளும் நேர்காணல் குழுக்களில் இடம்பெற உள்ள நபர்கள் குலுக்கல் முறையில் மாற்றப்படுவர்.
அதேபோல, நேர்காணலுக்கு வரும் நபர்களும், நேர்காணல் குழுவை, குலுக்கல் முறையில், தாங்களே, அரங்கில் தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேர்காணல் முற்றிலும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடக்கும். இடைத்தரகர்கள் கூறுவதை யாரும் நம்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அடுத்த ஆண்டும் 'டவுட்' தான்

பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது தொடர்பாக, நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் நிலையில் கூட, பள்ளிக்கல்வித் துறை தரப்பில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை; அடுத்த கல்வியாண்டிலும், பழைய பாடத்திட்டமே தொடரும் நிலை உள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), ஒவ்வொரு ஆண்டும் பாடங்களை புதுப்பித்து, மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில், 10 ஆண்டுகளாக, பிளஸ் 2 பாடத்திட்டம் புதுப்பிக்கப்படவில்லை.
கடந்த, 2014ல் அமைக்கப்பட்ட பாடத்திட்ட கமிட்டி, இதற்கானப் பணிகளை துவங்கியது; அப்போதைய முதல்வர் ஜெ., பார்வைக்கு, புதிய பாடத்திட்டம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், துறைச் செயலர் மற்றும் உயரதிகாரிகளின் ஆர்வமின்மையால், முடிவெடுப்பது தள்ளிப்போனது.

கல்வி அமைச்சராக, பாண்டியராஜன் பொறுப்பேற்றதும், இதற்கான பணிகளை துவக்கினார். அடுத்தடுத்து வந்த அரசியல் குழப்பத்தால், கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்று, ''அடுத்த கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்,'' என்றார்.
ஆனால், 'குறுகிய காலத்தில், புதிய பாட திட்டங்களை கொண்டு வருவது சாத்தியமற்றது' என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:
புதிய பாடத்திட்டத்தில், தமிழக அரசு தரப்பில் முடிவெடுக்க, தயக்கம் காட்டப்படுகிறது.

பாடத்திட்டம் தயாரிப்புக்கு, விரிவான ஆலோசனை தேவை. அதன்பின்னரே, புதிய புத்தகங்களை அச்சிட முடியும்.
பொதுத்தேர்வுக்கு பின், ஒரு மாதம் மட்டுமே அவகாசம் இருக்கும். வினாத்தாள் திருத்தவே, சரியாக இருக்கும். குறுகிய காலத்தில், புதிய பாடத் திட்டத்தை, தயாரிப்பதற்கு வாய்ப்புக் குறைவு.
இவ்வாறு அவர் கூறினார்.

'செல்லாத நோட்டுகளை இனி மாற்ற முடியாது'

செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், மார்ச், 31 வரை பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடும்போது, 2017, மார்ச், 31 வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என, பிரதமர் மோடி உறுதி அளித்தார். ஆனால், வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. பிரதமர் தனது வாக்குறுதியை மீறியுள்ளார்.
பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியதாவது:
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, 2016, டிச., 30 வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது.

அந்த தேதிக்கு பிறகு, பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பது சட்டவிரோதம் என, சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மார்ச், 31 வரை அவகாசம் அளிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!