Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 18 May 2017

அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்!

அரசுப் பள்ளி என்பது ஏற்றத் தாழ்வற்று, அனைத்து மாணவர்களும் ஒன்றாக கல்வி பெறுவதற்கான அற்புதமான இடம். இன்று, மிகப் பெரிய பதவிகளில் இருக்கும் பலரும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம், தங்கள் பள்ளி வாழ்க்கையைப் பற்றி கேட்டால் மணிகணக்கில் சிலாகிப்பார்கள். அந்தப் பருவத்தில் உருவான நட்பு என்பது நெடுங்காலத்துக்கு தொடந்துவரும். அதெல்லாம் சரி. அதை ஏன் இப்போது சொல்கிறேன் என கேட்கிறீர்களா?

முடிவுக்கு வந்த பள்ளி மாணவிகளின் எட்டு நாள் உண்ணாவிரதம்... இறங்கிவந்த அரசாங்கம்!

இப்போதும் அரசுப் பள்ளியில் நெகிழ்வான தருணங்களுக்குப் பஞ்சமில்லை. அந்த அழகான தருணங்களையும், கூடுதலாக அருமையான செய்தியையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு குறும்படம் வெளியாகியுள்ளது. கூர்ப்பி - ஷார்ப்பனர் என்பதன் தமிழ்ப் பெயர்.

இந்தக் குறும்படம், நம்மை புதுக்கோட்டை மாவட்டம், ஒடப்பவிடுதி அரசு நடுநிலைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு நான்காம் வகுப்பு படிக்கும் முகிலா எனும் மாணவிக்கு மந்திரக் கூர்ப்பி ஒன்று கிடைக்கிறது. அந்தக் கூர்ப்பியில் பென்சிலைத் துருவும்போது நாம் என்ன கேட்கிறோமோ அந்த உருவத்தைத் தரும். உதாரணமாக, குடை எனக் கேட்டு பென்சிலைத் துருவினால், பென்சிலின் துருவல் குடை வடிவத்தில் கிடைக்கும். ஆனால், 24 மணிநேரத்தில் ஒரு முறையாவது இந்தக் கூர்ப்பியைப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், கூர்ப்பியின் மந்திரத் தன்மை அதை விட்டு விலகிவிடும். இந்தக் கூர்ப்பியால் முகிலாவை மாணவர்கள் எப்போதும் சூழ்ந்துகொள்கிறார்கள்.

முகிலாவும் மாணவர்கள் கேட்கும் வடிவங்களை உருவாக்கித் தருகிறாள். ஒரு நாள் இரவு, வீட்டில் முகிலா படித்துக்கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைபட்டு, ட்யூப் லைட் அணைந்து விடுகிறது. மண்ணெண்ணெய் விளக்கு எடுத்து வைக்கிறார் முகிலாவின் அம்மா. அப்போது இருட்டில் கூர்ப்பியை அம்மா உதைத்துவிடுவதால், பாத்திரத்தின் இடுக்கில் அது மாட்டுக்கொள்கிறது. எவ்வளவு தேடியும் முகிலாவால் கூர்ப்பியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மறுநாள் பள்ளிக்குச் செல்லும் முகிலாவிடம் நண்பர்கள் வழக்கம்போல உருவங்களை வரவழைக்க கேட்கிறார்கள். தான் கூர்ப்பியை வீட்டில் மறந்து வைத்துவிட்டதாக கூறுகிறாள். அடுத்த நாளும் கூர்ப்பி இல்லாமல் பள்ளிக்குச் செல்ல, முகிலாவிடம் முன்பு போல ஒட்டாமல் பழகுகிறார்கள் நண்பர்கள். அன்று மாலை வீட்டுச் செல்லும்போது, கூர்ப்பியைக் கண்டுபிடித்து அவளின் அம்மா தருகிறார். ஆனால், அது மந்திரத் தன்மையை இழந்துவிடுகிறது. ஆனால், கூர்ப்பி முகிலாவுக்கு சூப்பரான ஒரு ஐடியாவைக் கொடுக்கிறது. அது என்னவென்று நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

கூர்ப்பி குறும்படம் அதில் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கச் சொல்கிறது. மந்திரங்கள் நிரந்தமல்ல... அல்லது மந்திரத்தால் ஏதும் சாத்தியமில்லை, விருப்பமும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் படைப்பாற்றலை உருவாக்கி, வளர்த்துக்கொள்ள முடியும் என்கிறது கூர்ப்பி குறும்படம். முகிலாவாக நடித்திருக்கும் லக்‌ஷ்யா எனும் மாணவி காட்சியை உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார்.

கதை ஒரு புறம் சென்றாலும் ஓர் அரசுப் பள்ளியின் அழகான தருணங்கள் காட்சிப் படுத்தியிருக்கும் விதம் பார்வையாளர்களை பழைய பருவத்துக்கே அழைத்துச் செல்கிறது. ஹோம் வொர்க் ஏன் செய்யவில்லை என மாணவியிடம் கேட்கும் ஆசிரியர், பிரேக் டைமில் டயர் வைத்து விளையாடுவது என பள்ளியின் நடுவே நாம் பயணிக்க வைக்கிறது. இன்னுமொரு காட்சியில், முட்டையுடன் சத்துணவு கொடுக்கப்படுகிறது. அதை ஒரு மாணவன் எடுத்து வரும்போது தட்டிலிருந்து முட்டை மண்ணில் விழுந்துவிடுகிறது. இதைக் கவனித்த ஒரு மாணவி தன் தட்டிலிருக்கும் முட்டையின் பாதியை அந்த மாணவனின் தட்டில் வைக்கிறாள். இதுபோல படம் முழுக்க நெகிழ்வான காட்சிகள் இருக்கின்றன.

ஒடப்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சாமியப்பன் எழுதிய கதையை எம். வெங்கடேசன் சிறப்பாக இயக்கியிருக்கிறார். ச.ஹரிஹர சுதன் இயல்பான காட்சிகளாக ஒளிப்பதிவு செய்துள்ளார். பள்ளியில் மாணவர்களின் சத்தம் படம் முழுக்க வருகிறது. அது நம்மை படத்துடன் ஒன்றச் செய்கிறது. படத்தின் 18 நிமிடங்கள். இவ்வளவு நீளம் தேவையில்லை என்றே தோன்கிறது. ஏழு அல்லது எட்டு நிமிடங்களில் இந்தக் கதையை இன்னும் அழுத்தமாக பதிய வைத்துவிட முடியும்.

கதையாசிரியர் சாமியப்பனிடம் பேசியபோது, "இந்தப் படம் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளது. லக்‌ஷ்யாவின் இவ்வளவு அழகாக நடிப்பாள் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. தான் நடித்ததை காட்டச் சொல்லிப் பார்ப்பாள். சரியில்லை என்றால் அவளே இன்னொரு முறை நடித்த காட்சிகள் இருக்கின்றன." என்கிறார்.

நல்ல கதையைக் கொண்டு நல்ல முயற்சியை மேற்கொண்ட இந்தப் படக் குழுவின் பயணம் வெல்லட்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பணியில் தொடர்ந்து ஈடுபடட்டும்.

-நன்றி விகடன்

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரம் கீழ்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு


பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும்  காலிப்பணியிடங்களின் விவரங்களை 
http://www.deetn.com/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

NEET Exam | பிளஸ் 1 பாடங்களில் இருந்து நீட் தேர்வில் 51 சதவீத கேள்விகள் கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்.

நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51.25 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்தியஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரம் பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 7-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலைகல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இத்தேர்வு நாடு முழுவதும் 103 நகரங்களில் 1,921 மையங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் 80-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடந்தது. கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட நீட் தேர்வு இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம் ஆகிய 10 மொழிகளில் நடைபெற்றது. வரும் ஜூன் 8-ம் தேதி இத்தேர்வின் முடிவு வெளியாக உள்ளது. 95 சதவீத மாணவர்கள் தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 95 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்வி கள் கேட்கப்பட்டன.

ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப் பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து அடையாளப்படுத்த வேண்டும். தவறான பதில்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்டகேள்விகள் எளிதாக இருந்ததாகவும், இயற்பியல், வேதி யியல்பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். பிளஸ் 1 பாடங்களில்அதிகம் நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப் பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளஸ்1 இயற்பியல் பாடத்தில் 49 சதவீதமும், பிளஸ் 2 இயற்பியல் பாடத்தில் 51 சதவீதமும், பிளஸ் 1 வேதியியல் பாடத்தில் 42 சதவீதமும், பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 58 சதவீதமும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

 பிளஸ் 1 தாவரவியல் பாடத்தில் 47 சதவீதமும், பிளஸ் 2 தாவரவியல் பாடத்தில் 53 சதவீதமும், பிளஸ் 1 விலங்கியல் பாடத்தில்67 சதவீதமும், பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் 33 சதவீதமும் கேள்விகள் இடம்பெற்றிருந்தன. ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51.25 சதவீதகேள்விகளும், பிளஸ் 2 பாடங்களில் இருந்து 48.75 சதவீத கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

+2,SSLC- பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பிளஸ் 2, எஸ்எஸ்எஸ்சி பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில்படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார். 
சென்னை தலைமைச் செய லகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகை யில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.26,913 கோடிஒதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36,830 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டிடங் கள், வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சில பள்ளி களில் இன்னும் சிறு சிறு தேவை கள் உள்ளன. முன்னாள் மாணவர்கள், தொழி லதிபர்கள், வசதிபடைத்தவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவைப்படும் வசதிகளை செய்துகொடுக்க முன்வருமாறு அன்போடு வேண்டு கோள் விடுக்கிறேன். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படும் 14 வகையான நலத்திட்டங் களுக்கு ரூ.2,300 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. மேல்நிலைக் கல்வியில் கடந்த 12 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. தமிழக மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு களுக்கு தயார்படுத்தும் வகை யில் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.

பாடத்திட்ட மாற்றம் குறித்து ஏற்கெனவே, முன்னாள் துணை வேந்தர்கள், தலைமைச் செயலா ளர் உள்ளிட்டோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட மாற்றம் குறித்தும், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் 2 நாட்களில் கொள்கைமுடிவு எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையில் மிகப் பெரிய அளவில் சீரமைப்பு, மாற் றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல, விளையாட்டுத் துறை யிலும் மிகப்பெரிய அளவில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள் ளோம். மாநில, தேசிய அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் யோகா, சாலை பாதுகாப்பு விதிகள், தேசப்பற்று தொடர்பான பயிற்சி வகுப்புகளும் கொண்டுவரப்பட உள்ளன. பிளஸ் 2, எஸ்எஸ்எல்சிபொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இனிமேல், தமிழ்வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.உதவித்தொகை திட்டத்தில் அவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்தார்.

24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது !!

'கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகளை, கல்லுாரிகளுக்கு, இயக்குனர், மஞ்சுளா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இட ஒதுக்கீடு மற்றும் மாணவர்களின் மதிப்பெண் 
அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும்இளநிலை பட்டப்படிப்பில், மாணவர்களை சேர்க்க, 21 வயது அதிகபட்ச வயது நிர்ணயிக்கப் படுகிறது. பொது பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு, மூன்றாண்டுகள் வரை கூடுதல் சலுகை உண்டு. அதன்படி, 24 வயது வரையுள்ளோரை, கல்லுாரிகளில் நேரடி பட்டப்படிப்புக்கு சேர்க்கலாம்மாற்று திறனாளிகளுக்கு, ஐந்து ஆண்டு சலுகை வழங்கி, 26 வயது வரை, மாணவர்களை சேர்க்கலாம்.

இதில், எந்த விதி மீறலும் இருக்க கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை.

சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 'எஸ்டிவி 333' என்ற ரீசார்ஜ் திட்டத்துக்கு 3 நாட்களுக்கு அளவில்லா தகவல்களை பதிவிறக்கம் செய்யும் சலுகையை வழங்கியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் எஸ்டிவி 333, 339 349, 395 ஆகிய 4 டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதில், எஸ்டிவி 333 ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் 3 ஜிபி அளவுக்கு தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில், சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தை முன்னிட்டுமே 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு எஸ்டிவி 333 ரீசார்ஜ் திட்டத்தில் அளவில்லா தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாயப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகள் : செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு

பிளஸ் 2 தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் தனியார் தரப்பில், 6,700 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், பள்ளிக்கல்வி வளர்ச்சிக்காக, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும், பிளஸ் 2 பொது தேர்வில் குறைந்த தேர்ச்சியை பெற்றுள்ளன. மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணும் குறைவாகவே உள்ளது. நுாற்றுக்கு நுாறு என்ற, 'சென்டம்' எடுத்த மாணவர்களின், எண்ணிக்கையும் சரிந்துள்ளது. அரசின் நிதி செலவில் இயங்கும் பள்ளிகள், அவற்றை முறையாக பயன்படுத்தியதா; ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்தினரா; மதிப்பெண் குறைவு, தேர்ச்சி சரிவு ஏன்; தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என, செயல்திறன் அறிக்கை தர, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையின்படி, புதிய செயல் திட்டம் தயாரிக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், மாணவர்கள், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்ளும் வகையில், கற்பித்தலை மாற்ற பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆய்வு கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மே 26 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மே 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 
''குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.இச்சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும்,வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டும் 2017-2018-ம் கல்வியாண்டு முதல் இந்த சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன்வழி விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 20 முதல் மே 18-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 26-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரின் அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களையும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.சமுதாயத்தில் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில் தமிழ் பிழை : திருத்துவது எப்படி: பெற்றோர் குழப்பம்

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில், தமிழ் எழுத்துக்களில் பிழைகள் உள்ளன; அதை, திருத்தி தர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 12ல் வெளியானது.
இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படவில்லை. அதனால், குறிப்பிட்ட மாணவர்களை படம் பிடித்தல், வாழ்த்து தெரிவித்தல் போன்ற, சம்பிரதாய நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு, மதிப்பெண் சான்றிதழில் மாணவர் மற்றும் பள்ளியின் பெயர், தமிழில் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மே, 15ல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக சான்றிதழ் வெளியானது. அதில், அறிவித்தபடி, பெயர் விபரங்கள் தமிழில் இடம் பெற்றன. நேற்று முதல், பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழும், பள்ளி மாற்று சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், பல மாணவர்களுக்கு, தமிழ் எழுத்துக்களில் பிழைகள் இருந்தன.

இது குறித்து, பெற்றோர் கூறியதாவது:பிழைகள் கொண்ட, இந்த சான்றிதழ்களை வைத்து, உயர் கல்வியில் சேர்வதில் பிரச்னை ஏற்படும். எதிர்காலத்தில், மற்ற ஆவணங்களை பதிவு செய்வதிலும் குழப்பம் ஏற்படும். எனவே, தற்காலிக சான்றிதழில் பிழைகள் உள்ளோரிடம் மனுக்களை பெற்று, அசல் சான்றிதழ்களில், பிழைகளை திருத்த, தேர்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் : 3 ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம்

''கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுக்காக அரசு பள்ளிகளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தத்தெடுக்கும்,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.

பள்ளிக் கல்வியில் முன்னேற்றங்கள் கொண்டு வருவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரன், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், அமைச்சர் பேசியதாவது: பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், அரசின் போக்குவரத்து செலவில் வழங்கப்படும். கழிப்பறை கட்டுதல், பராமரித்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் போன்ற வசதிகளை செய்து தர, அரசு பள்ளிகளை, 17 ஆயிரம் தனியார் கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் தத்தெடுக்க உள்ளன. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிறுவனங்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கப்படும். தமிழக மாணவர்கள், 'நீட்' போன்ற தேர்வுகளில், மற்ற மாநிலத்துடன் போட்டியிட முடியவில்லை. எனவே, பிளஸ் 1க்கு பொது தேர்வு வருகிறது. அதை அமல்படுத்த, அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். மேலும், 12 ஆண்டுகளாக, பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. இதுகுறித்து, கல்வியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம்; மூன்று ஆண்டுகளில், பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.தனியார் பள்ளிகளுக்கு நிகராக, பள்ளி
நுாலகங்கள் விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு வகுப்பிலும், விளையாட்டு பிரிவுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும். சி.பி.எஸ்.இ.,க்கு மாறும் பள்ளிகளுக்கு, தடையில்லா சான்று வெளிப்படையாக வழங்கப்படுகிறது. இதில், முறைகேடு இருக்கக்கூடாது.மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தல், யோகா பயிற்சி அளித்தல், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வைக்கவும், புதிய
திட்டங்கள் வர உள்ளன. அரசு ஒதுக்கிய, 26 ஆயிரத்து, 913 கோடி ரூபாயை எப்படி செயல்படுத்த வேண்டும் என, பட்டியல் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆண்டே பிளஸ் 1 பொது தேர்வு:இதற்கான அரசாணை, இரு தினங்களில் வெளியாகிறது.

பிளஸ் 1க்கு கட்டாய பொதுத் தேர்வு, இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இதற்கான
அரசாணை, இரு தினங்களில் வெளியாகிறது. பிளஸ் 1 பெயிலானாலும், பிளஸ் 2 படிக்க, இந்த பொது தேர்வு வழி செய்கிறது.

'பிளஸ் 1க்கு கட்டாயம் பொது தேர்வு நடத்த வேண்டும்' என, அண்ணா பல்கலையின் கல்வி கவுன்சில் கூடி, பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது. இது குறித்து, நிபுணர்களிடம் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, பிளஸ் 1க்கு, இந்த ஆண்டே பொது தேர்வு நடத்த, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை, இரண்டு நாட்களில் வெளியாகிறது.

நடைமுறை என்ன?

* அனைத்து பள்ளிகளும், பிளஸ் 1 வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும். ஆண்டு இறுதியில், அரசு தேர்வுத் துறை மூலம், மாநிலம் முழுமைக்கும் பொதுவாக, பிளஸ் 1 பொது தேர்வு நடத்தப்படும்
* அந்த மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வு முடித்த பின், இரண்டு தேர்வுக்கும் சேர்த்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்
* இரண்டு ஆண்டு படிப்பிலும், ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், உயர்கல்விக்கு செல்ல முடியாது
* இரண்டு ஆண்டு மதிப்பெண்களுக்கும், சமமான, 'வெயிட்டேஜ்' வழங்கப்பட்டு, இன்ஜி., மற்றும் மருத்துவத்தில், 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ள இந்த நடைமுறை, ஆந்திரா மற்றும் கேரளாவிலும் அமலில் உள்ளது.

தனித்தேர்வர்களுக்கும் பிளஸ் 1 தேர்வு உண்டு

பள்ளிக்கு வராத தனித்தேர்வர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2வில், பொது தேர்வு எழுத அனுமதிக்கப் படுகின்றனர். இவ்வாறு பிளஸ் 2 தேர்வு எழுதுவோர், பிளஸ் 1 பாடம் படித்து, தேர்வு எழுதுவதில்லை. ஆனால், அரசு கொண்டு வரும் புதிய உத்தரவில், பிளஸ் 1க்கும் பொது தேர்வு வருகிறது. எனவே, தனித்தேர்வர்களும், பிளஸ் 1 பொதுத் தேர்வை எழுத வேண்டும் என, புதிய விதிகள் சேர்க்கப்பட உள்ளன.

பெயிலானாலும் பிளஸ் 2 படிக்கலாம்

பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சிக்காக, பிளஸ் 1 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், தனியார் பள்ளிகளால் வெளியேற்றப் படுகின்றனர். பிளஸ் 1க்கு பொது தேர்வு வந்தால், அதில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், பிளஸ் 2 படிக்க முடியாத நிலை ஏற்படும்.

இதை கருத்தில் கொண்டு, பிளஸ் 1 பொது தேர்வு முடித்து, மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்தி விடாமல் தடுக்க, புதிய அரசாணையில் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி, பிளஸ் 1ல், மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2வுக்கு செல்லலாம். அவர், பிளஸ் 2 சேர்ந்தவுடன், சிறப்பு துணை தேர்விலோ அல்லது டிசம்பரில் நடக்கும் துணை தேர்விலோ, தோல்வி அடைந்த, பிளஸ் 1 பாடத்துக்கு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6000 நிதி உதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தொகை பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்று தவணையாக வழங்கப்படும் இந்த தொகை மகப்பேறு பதிவு செய்தவுடன் 1000 ரூபாயும் இரண்டாவது தவணையாக 6வது மாதத்தில் 2 ஆயிரம் ரூபாயும், குழந்தை பிறந்ததும் மூன்றாவது தவணைத் தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள பெண்களுக்கும் இந்த உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்கு  2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2020 வரை மாநில அரசின் பங்கு  உடபட மொத்தம் 12,661 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதே காலகட்டத்தில்  மத்திய அரசின் பங்களிப்பு ரூ. 7932 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!