Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 19 May 2017

தனியார் பள்ளிக்கு டா..டா...காட்டிய கிராமம்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், கொத்தவாசல் என்ற கிராமத்தில் தான் தனியார் பள்ளிகளுக்கு டா..டா..காட்டினர் இந்த ஊரின் மக்கள்.
 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொத்தவாசல் மாணவர் சேர்க்கை 100℅  ஆக மாறியது.அதற்காக அந்த பள்ளியின் ஆசிரியர் சி.இளவழகனின் முயற்சி சிறப்பானது. இந்த ஊருக்கு மஞ்சள் நிற வாகனம் ( தனியார் பள்ளி வாகனம் ) வந்து கொண்டிருந்தது.அந்த வாகனம் வராமல் இருக்க செய்ய வேண்டியது என்ன என்று யோசித்தார்.அனைத்து ஆசிரியர்களிடம் கலந்து பேசினார்.
அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்
சில திட்டங்களையும், தீர்மானங்களையும் நிறைவேற்ற உறுதி எடுத்தார். இக்கிராம மக்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியை விடுத்து தனியார் பள்ளிக்கு செல்வதற்கான காரணம் என்ன என்று யோசித்தார். ஆராய்ந்து பார்க்கும்போது தான் அவருக்கு சில உண்மைகள் புரிந்தது. தனியார் பள்ளியில் இருக்கும் கணினி வழிக்கல்வியும் ,ஆங்கிலமும் தான் அனைவரையும் ஈர்க்கிறது என்று புரிந்துகொண்டார். உடனே அத்தகைய கல்வியை நமது பள்ளியிலேயே ஏன் உருவாக்கக்கூடாது என நினைத்த அவர் அதற்கான வசதிகளை உருவாக்க கடுமையாக போராடினார்.
தனது சொந்த செலவில் ரூ.1,68,000 ஒன்பது கணினிகள் ,Projector போன்றவற்றை வாங்கி கணினிவழிக்கல்வியினை ஏற்படுத்தினார். பல புரவலர்களை நாடி அவர்களின் உதவியால் மேலும் பல கணினிகள் பெற்று மொத்தம் 15 கணினிகளை உருவாக்கி தினமும் குழந்தைகளுக்கு பயிற்சியளித்தார். காணொளி காட்சி மூலம் வகுப்புகள் ,ஆங்கிலத்தில்  பேச்சு பயிற்சியும் வழங்கி படிப்படியாக குழந்தைகளை மெருகூட்டினார்.
இதுவரை இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த முறையில் முதல் முறையாக கல்வித்திருவிழாவினை ஏற்படுத்தி குழந்தைகளின் அசத்தலான ஆங்கில அறிவினையும், திறமைகளையும் கிராமத்து மக்களுக்கு எடுத்துக்காட்டினார். குழந்தைகளின் திறமைகளைக் கண்ட பெற்றோர்கள் அந்த மேடையிலே புரவலர்களாக மாறி ரூ.1,59,000 பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்தனர்.கோடை வெயிலினையும் பொருட்படுத்தாமல் அனைத்து ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையில் ஈடுபடுபட்டார்கள்.
அதன் விளைவுதான் தனியார் பள்ளிக்கு ஒட்டுமொத்தமாக டா...டா...காட்டினர் ஊர்மக்கள்.
இன்று வரை தனியார் பள்ளியில் படித்த 49 குழந்தைகள் அரசுப்பள்ளியில் சேர்த்துவிட்டனர். மாணவர் சேர்க்கையில் 100% மட்டுமல்லாமல் இப்பள்ளியில் பசுமைத்தோட்டம் அமைத்து அதில் விளைகின்ற காய்கறிகளை மதிய உணவிற்கு பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு வகையான துறைகளில் சிறந்து விளங்கியவர்களை அழைத்து எழுத்துப்பயிற்சி ,கராத்தே போன்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
 ஒரு ஆசிரியரின் சீரிய சிந்தனை ,கடின உழைப்பு சிகரத்தையும் தொட முடியும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக உள்ளது.
வானம் தொட்டு விடும் தூரம்தான்......!!!
-கல்விச்சிறகுகள்

வேலூர் மாவட்ட AEEO's - இடமாறுதல் விவரம்!!

DEE - தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிக்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு!!

அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு

முறைகேடு நடந்திருக்கலாம் எனப் புகார் தெரிவிக்கப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அஞ்சல் வட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணிக்கான தேர்வு 2016 டிசம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்டது. மெட்ரிக் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த எழுத்துத் தேர்வில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் என நான்கு பிரிவுகளிலும் தலா 25 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன.

தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களின் பதிவு எண்ணைக் கொடுத்து மதிப்பெண் விவரங்களைப் பெறும் வகையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரையில் தேர்வு எழுதிய இளைஞர்கள் சிலர் தங்களது பதிவு எண்ணுக்கு முன்பு, பின்பு உள்ள எண்கள் என உத்தேசமாக சில எண்களைப் பதிவு செய்து தேர்வு முடிவைப் பார்த்தபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஹரியாணா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலரும் தமிழில் 25-க்கு 24 மதிப்பெண்கள், சிலர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். தமிழ் முழுமையான அறிமுகம் இல்லாத மாநிலத்தைச் சேர்ந்த பலரும், தமிழ் இலக்கணத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து மதுரை மாநகராட்சி சூழல் பூங்கா மற்றும் காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, தபால் துறை நடத்திய தேர்வில் சந்தேகம் இருப்பதாகவும், உண்மையாகத் தேர்வுக்குத் தயாராகி வரும் இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோவதாகவும் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இத் தேர்வு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், 2016 டிசம்பர் 11-இல் நடத்திய தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் (www.dopchennai.in) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரான மதுரையைச் சேர்ந்த ஆர்.கருப்பசாமி கூறியதாவது:

போட்டித் தேர்வுகளின் மூலம் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாகப் பயிற்சி எடுத்து வருகிறோம். தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தாலும், முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் எங்களது கனவுகளைத் தகர்த்து விடுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் இனி வரும காலங்களில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றார்

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2 செல்ல முடியும்!

பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல முடியும் என தமிழக பள்ளிக் கல்வி சீரமைப்புக் குழு வல்லுநர்கள் தெரிவித்தனர். புதிய சலுகை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வைப் போன்று, பிளஸ் 1 வகுப்புக்கும் நிகழாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை (மே 17) அறிவித்தார்.

எனினும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்கூட, பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லலாம் என்ற முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக கல்வி சீரமைப்புக் குழுவைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர் மேலும் கூறியது: தமிழகத்தில் ஆண்டுதோறும் பிளஸ் 1 தேர்வை எழுதும் சுமார் 9 லட்சம் மாணவர்களில், 50,000 முதல் 55,000 மாணவர்கள் வரையில் தேர்ச்சி பெறாத நிலை உள்ளது.

அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். கல்லூரியைப் போன்று... பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் அனுமதிக்கப்பட்டாலும்கூட, கல்லூரிகளைப் போன்று தேர்ச்சி அடையாத பாடங்களுக்கு ஜூன், செப்டம்பர் மாதங்களில் தேர்வு எழுதுவது அவசியமாகும்.

அக மதிப்பீட்டு மதிப்பெண்: தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வில் வேதியியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்து பிரதான பாடங்களுக்கும் 10 சதவீத அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளன. 

இந்த மதிப்பெண்கள் செய்முறைப் பயிற்சி உள்ள பாடங்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் மாணவர்கள் பாடங்கள் குறித்த கூடுதல் திறனறிவைப் பெறுவதுடன், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறையும்.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள... ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எழுதும் நிலையில், பிளஸ் 1 பாடத் திட்டங்களின் அடிப்படையில்தான் அவற்றில் பெரும்பாலான கேள்விகள் அமைவதை கடந்த சில ஆண்டுகளாக கல்வியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில் மாணவர்களைத் தயார்படுத்தவும், பி.இ. படிப்புகளில் சேரும் நிலையில் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் இருப்பதைத் தவிர்க்கவுமே பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது - தொடக்கக் கல்வித்துறை

தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.

ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-கல்விச்சிறகுகள்

"NEET" தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்ற கிளை மறுப்பு!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்து விட்டது.

இனி நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையானது 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில்தான் நடைபெறுமென்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.ஆனால் மாநில அரசின் பலகட்ட முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் இம்மாதம் 8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் 'நீட்' தேர்வு நடைபெற்றது.

ஆனால் இந்த தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்கள் பயன்படுத்தப்படவில்லை என்று சர்ச்சை எழுந்தது. எனவே இந்த தேர்வின் அடிப்படையில்  மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க கோரியும்,  இனி நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்களை பயன்படுத்தி நீட் தேர்வு நடத்தப்பட வேண்டுமென்று உத்தர விடக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 9 பேர் அடங்கிய குழு ஒன்று வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்து விட்டது.

மேலும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்களை பயன்படுத்தி நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய பள்ளிக் கல்வி வாரியம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகிய இரு அமைப்புகளும் ஒரு வாரத்தில் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பவும் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் ஆசிரியர்களுக்கு அழைப்பு

தொடக்க கல்வி மாணவருக்கான நோட்டு, புத்தகம் பெற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர் சாக்கு பைகளுடன் 'நோடல்' அலுவலகம் வரவேண்டும்,' என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டு முதல் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்குவதில் ஆசிரியர்களை அலைக்கழிக்காமல் நேரடியாக பள்ளிகளுக்கே வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன்படி தற்போது சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் கல்வித்துறை சார்பில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மதுரையில் 15 ஒன்றியங்களுக்கு உட்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோட்டுக்களும் வந்து இறங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வைக்க போதிய இடவசதி இல்லாததால் பல உதவி பெறும் பள்ளிகளில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது 'நோடல்' மையங்களில் இருந்து சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்கள் கையிலும் புத்தகம், நோட்டு இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், 'புத்தகங்கள் எடுத்து செல்ல தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட ஏ.இ.ஓ., அலுவலக 'நோடல்' மையங்களுக்கு மறக்காமல் சாக்கு பைகளுடன் வர வேண்டும்,' என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தொடக்க கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் 15 ஏ.இ.ஓ., அலுவலகங்களுக்கும் தனித்தனியே 'நோடல்' மையங்கள் உள்ளன. ஏ.இ.ஓ.,க்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்கள் இங்கு தான் உள்ளன. ஓரிரு நாங்களில் இவை பள்ளிகளுக்கே கொண்டு செல்லப்படும். ஒரு பள்ளிக்கு எத்தனை நோட்டு, புத்தகம் தேவை குறித்து அலுவலகம் வந்து தலைமையாசிரியர் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வரும்போது சாக்கு பைகளுடன் வந்து தேவையான புத்தகம், நோட்டுக்களை பெற்று பள்ளி முகவரியை எழுதி வைத்தால் அந்தந்த பள்ளிகளுக்கே கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

ப்ளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை

அரசாணையை மீறி ப்ளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பொதுத்தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரப் பட்டியல் வெளியிடும் முறை கைவிடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும் தேர்ச்சி தொடர்பாக பள்ளிகள் சாதனைப் பட்டியலை வெளியிடக்கூடாது என்றும் கூறப்பட்டது. ஆனால் ஏராளமான தனியார் பள்ளிகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் கொடுத்து வருகின்றன.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன்தனியார் தொலைக்காட்சியிடம் பேசும்போது,''அரசாணையை மீறி ப்ளஸ் 2 தேர்ச்சி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதற்கட்டமாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.அரசாணையை மீறியது ஏன் என்று 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். விளம்பரங்கள் அளித்த அனைத்து பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

தொடக்கக் கல்வி துறை நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டிருந்த தடையை நீங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

தொடக்கக் கல்வி துறையின் சார்பில்நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் தடையை நீக்கியது.
அனைத்து சங்கங்களும் தடையை நீக்கக்கோரி வைத்த கோரிக்கையினைதொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில்தடையை நீக்கக்கோரி வழக்கு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டுதடையை விலக்கியது.

1. மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் ஒன்றியம் தவிர மற்றஇடங்களில் கலந்தாய்வுக்கு நடைபெற தடையில்லை.

2. திருப்பரங்குன்ற ஆசிரியர் தொடத்துள்ள இந்த வழக்குதனிவழக்காக தொடர்ந்து நடக்கும்.

3. பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணி நிலை பற்றி தொடக்ககல்வித்துறையின் பணிவிதிகளில்  திருத்தத்தினைசெய்யஅரசுக்கு உத்தரவு.

தமிழகத்தில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடல்: 44 கல்லூரிகளில் 50 சதவீதம் வரை இடங்கள் குறைப்பு.

இந்தக் கல்வியாண்டில் (2017-18) தமிழகத்தில் முதல் கட்டமாக 11 பொறியியல் மூடப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், ஒரே ஒரு பொறியியல் கல்லூரி புதிதாக வருவதும் உறுதியாகியிருக்கிறது.

இதற்கிடையே, 44 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50 சதவீதம் வரை குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக நிகழாண்டும், பி.இ. இடங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்கின்றனர் பேராசிரியர்கள். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐடி), பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) போன்ற பிரிவுகளின் மீது மாணவர் ஆர்வம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

இந்தப் பாதிப்பு காரணமாக பொறியியல் கல்லூரிகளில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து, கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேருவது அதிகரித்து வருகிறது. இதனால், பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடுவதும், மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) புள்ளி விவரங்களின்படி 2015-16 கல்வியாண்டில் தமிழகத்தில் 533-ஆக இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 2016-17 கல்வியாண்டில் 527 ஆகக் குறைந்தது. மொத்த பி.இ. இடங்களின் எண்ணிக்கை 2.79 லட்சம் என்ற அளவில் இருந்தது.

11 கல்லூரிகள் மூடல்:

 நிகழாண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. 2017-18 கல்வியாண்டுக்கான அனுமதி நீட்டிப்பு நடைமுறைகளை ஏஐசிடிஇ இப்போது நிறைவு செய்துள்ளது.
இதில் நாடு முழுவதும் இருந்து 400 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ-யிடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்திலிருந்து மட்டும் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பித்திருக்கின்றன.
இதில் 11 கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக அனுமதி நீட்டிப்புக்கே விண்ணப்பிக்காததால், முதல் கட்டமாக இந்த 11 கல்லூரிகளும் மூடப்படுவது உறுதியாகியிருக்கிறது. இதனால் கல்லூரிகளின் எண்ணிக்கை 527 இல் இருந்து 510 ஆகக் குறைய வாய்ப்பு உள்ளது என்கின்றனர் பேராசிரியர்கள்.
44 கல்லூரிகளில் இடங்கள் குறைப்பு: அண்ணா பல்கலைக்கழகக் குழு, பொறியியல் கல்லூரிகளில் மேற்கொண்ட ஆய்வில், 44 கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த பேராசிரியர்கள், முதல்வர், ஆய்வகம், நூலகம், வகுப்பறை, ஆகிய 5 காரணிகளின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் 44 கல்லூரிகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அக்கல்லூரிகளில் 25 முதல் 50 சதவீதம் வரை இடங்களைக் குறைத்து அதிரடி நடவடிக்கையை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
இதன் காரணமாக மொத்த இடங்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது என அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய கல்லூரி
தமிழகத்தில் புதிதாக ஒரு பொறியியல் கல்லூரியும் 3 கட்டுமானப் பொறியியல் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பம் பெறப்பட்டு, பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிக்கு ஏஐசிடிஇ-யிடம் இருந்தும் அனுமதி கிடைத்துள்ளது. எனவே, புதிதாக ஒரு பொறியியல் கல்லூரி தொடங்கவது உறுதியாகியிருக்கிறது.
3 கட்டடவியல் பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை இந்திய கட்டுமானக் கவுன்சிலிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அந்த அனுமதி கிடைத்ததும், 3 கட்டடவியல் பொறியியல் கல்லூரிகள் புதிதாகத் தொடங்குவதும் உறுதியாவிடும் என்று அண்ணா பொறியியல் கல்லூரி உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!