Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 23 May 2017

மாணவர்களுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வுகள் சரியா - ஓர் அலசல்!

பொதுத்தேர்வு என்றாலே மாணவர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் பெற்றோருக்கும் அக்னி பரீட்சைதான். 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவதற்குள் உறவினர் வீட்டு விசேஷங்கள், திருவிழா.. என எதற்கு பிள்ளைகளை அனுப்புவதில்லை. மாணவர்களும் நேரம் காலம் பார்க்காமல் அதிக நேரம் படிப்பில் மூழ்கிக் கிடப்பர். இந்த நிலையில் 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் இனி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கு சாதகமா, பாதகமா என ஆசிரியர்களிடமும் கல்வியாளர் பேரா. பிரபா கல்விமணியிடமும் கேட்டோம்.

 மு.சிவகுருநாதன், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, காட்டூர், திருவாரூர் மாவட்டம்.

10-ம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவருக்கு 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு தொடர்ந்து பொதுத்தேர்வு வைப்பது என்பது மாணவர்களுக்கு நிச்சயம் சுமையாகத்தான் இருக்கும். இதை செமஸ்டர் முறையில் என அறிவித்தால் அந்தச் சுமை குறையும். ஒருவேளை செமஸ்டர் முறை இல்லையெனில் 11 வகுப்பில் 100 மதிப்பெண்களுக்கும் 12 வகுப்பில் 100 மதிப்பெண்களுக்கும் தேர்வு வைக்கலாம். அப்படி வைத்து இரண்டையும் கூட்டி மதிப்பிடலாம்.

11 -ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் இரண்டு ஆண்டுகளுக்கு 12 வகுப்புப் பாடங்களை நடத்துகிறார்கள் என்பதால் பொதுத்தேர்வு முறை கொண்டுவந்தால் இதே சிக்கல் 9-ம் வகுப்பிலும் இருக்கத்தானே செய்கிறது. அப்படியெனில் அதற்கும் பொதுத் தேர்வு வைப்பதுதான் தீர்வாகுமா... அதைவிட, பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படுவதை கண்காணிக்கும் விதத்தை முறையாக நடைமுறைப் படுத்துவதே இதற்கு ஒரு தீர்வாக அமையும்.

து.விஜயலட்சுமி, அரசுமேல்நிலைப் பள்ளி, கண்ணமங்கலம், வேலூர்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு வைப்பதை நான் வரவேற்கிறேன். பப்ளிக் எக்ஸாம்.. பப்ளிக் எக்ஸாம் என மாணவர்களைப் பயமுறுத்தவே கூடாது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் போல இதுவும் ஒன்று என தேர்வுப் பயத்தைப் போக்கவே நான் செய்வேன். மாவட்ட அளவில் வினாத்தாள் தயாராவதற்குப் பதில் மாநில அளவில் தயாரித்து வரும் அவ்வளவுதானே. எங்கு தயாரிக்கப்பட்டாலும் 100 அல்லது 200 மதிப்பெண்களுக்குத்தானே மாணவர்கள் விடை எழுதப் போகிறார்கள். அதனால் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது பப்ளிக் எக்ஸாம் பயத்தைப் போக்க உதவும்.

மாணவர்களுக்குச் சுமை என்று சொல்வதையும் ஏற்பதற்கு இல்லை. வழக்கமாக சில தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு தொடங்கிய சில நாட்களிலேயே வினாக்கள் அடங்கிய சி.டியைத் தந்து அதற்குப் பதில் எழுதவே பயிற்சியளிக்கிறார்கள். மாணவர்கள் 11-ம் வகுப்பு பாடங்களைப் பார்க்கக்கூட முடியவில்லை. அதையெல்லாம் இந்த முறை சரிசெய்யும். உண்மையாக சொன்னால் பாடம் நடத்தாத ஆசிரியர்களுக்கும் நடத்த விரும்பாத பள்ளிகளுக்கும்தான் 11-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வைப்பது சுமையாக இருக்கும்.சுகிர்தராணி, ஆசிரியர் ராணிப்பேட்டை.
 
மாணவர்களுக்கு தேர்வு என்பதே பெரிய சுமைதான். அதும் 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்குத் தொடர்ந்து மூன்று வருடங்கள் அரசுப் பொதுத் தேர்வு எனும்போது அவர்களின் மனநிலை என்னவாகும் என்பதை யோசிக்கவே அச்சமாக இருக்கிறது! அரசுப் பள்ளிகளில் முறையாக 11-ம் வகுப்புப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், பல தனியார்ப் பள்ளிகளில் 11-ம் வகுப்புத் தொடங்குபோது 12-ம் வகுப்புப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதைத் தவிர்க்கவும் அந்தந்த வகுப்புகளில் அந்தந்த வகுப்புக்கு உரிய பாடங்களை நடத்தவும் கடுமையான நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை அரசு எடுக்க வேண்டும். அதை விடுத்து பதினொன்றிலும் பொதுத் தேர்வு என அறிவிப்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. அரசும், கல்வி அமைச்சரும்,கல்வித்துறை அதிகாரிகளும் மாணாக்கருடன் கலந்தாய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். முடிவெடுப்பது அரசு என்றாலும் தேர்வெழுதப்போவது மாணாக்கர்தாம். அவர்கள் கருத்தை அறிய கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் சுமையைக் குறைக்கும் விதத்தில் அந்த நடவடிக்கை இருந்தால் மகிழ்ச்சியே!

ஶ்ரீ.திலீப், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்.

11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பதை நான் முழு மனதாக வரவேற்கிறேன். இதனால் 11-ம் வகுப்புப் பாடங்கள் கவனம் பெறும். 11-ம் வகுப்பு பாடங்களை ஒரு சில மாதங்கள் மட்டுமே நடத்திவிட்டு 12-ம் வகுப்பு பாடங்களை நடத்தும் பல பள்ளிகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். மாணவர்களுக்கும் அந்த பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 11 மற்றும் 12 வகுப்பு பாடங்களே அடுத்தடுத்து வரும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு அடிப்படை. அதனால், அவற்றைப் படிப்பது அவசியமே. இதில் நடைமுறைச் சிக்கல் ஒன்று இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வழக்கமாக பொதுத்தேர்வு என்றாலே ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்கியதும் ஆசிரியர்களுக்கு பரபரப்பான வேலைகள் காத்திருக்கும். அதனால் மற்ற வகுப்பு பாடங்களில் கவனம் எடுத்து கற்றுக்கொடுப்பதில் சுணக்கம் ஏற்படும். அந்தப் பள்ளி தேர்வு மையம் என்றால் இன்னும் சிக்கல்தான். அதனால், மற்ற வகுப்பு மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இந்தத் தேர்வை சாத்தியப்படுத்த வேண்டும். மூன்று வருடங்கள் தொடர்ந்து கவனம் குவித்து படிப்பது மாணவர்களுக்கு சுமைதான் என்றாலும் நுழைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள இந்தச் சிரமம் தேவை எனக் கொண்டால் சுமையாக தோன்றாது.

பேராசிரியர் பிரபா கல்விமணி, கல்வியாளர்.

மாணவர்களை மதிப்பெண்கள் பெற வைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கில் பாடங்களை நடத்துகின்றனர் பல பள்ளிகள். அதில் அநேகம் தனியார் பள்ளிகள். அதனால் 12-ம் வகுப்பு பாடத்தை இரண்டாண்டுகளும் நடத்துகின்றனர். அதனால் 11-ம் வகுப்புப் பாடங்களை மாணவர்கள் படிக்க நினைத்தாலும் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயிவிடுகிறது. இதனால் அகில இந்திய தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் பெரும் சிக்கல் இருக்கிறது. அவையெல்லாம் கலைவதற்கு இந்த முறை நமக்கு உதவும் என்றே நம்புகிறேன்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு என்பது சரி... சுமை... என இரண்டு விதமான கருத்துகளை ஆசிரியர்கள் கூறினாலும் அடிப்படையில் அவர்கள் மாணவர்களின் நலனையே முன்னிறுத்துகிறார்கள். எனவே, மாணவர்களின் கல்வித்திறனை உயர்த்தும் நடவடிக்கைகளில் அவர்களுக்கு சுமை ஏற்றாமல் இருப்பதும் கடமை. அதை கல்வித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்கள் என நம்புவோம்.

அரசு பள்ளிகளில் படிக்கும் 92 லட்சம் மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் தயார் !!

92 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலை இல்லா பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. பள்ளிக்கூடம் திறந்த அன்றே புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறை முடிந்து வருகிற 1-ந்தேதி அரசு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. வெயிலின்தன்மை அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக புதிய புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு தயாராக வைத்து உள்ளது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு என மொத்தம் 4 கோடியே 30 லட்சம் விலை இல்லா பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.

இதில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கு உரிய பாடப்புத்தகங்கள் ஆகும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பருவம் அல்லாத வகையில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 92 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இந்த விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதுநாள் வரை பாடப்புத்தகங்கள் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மூலம் வேன்கள் வைத்து பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு வரப்பட்டன.

ஆனால் இந்த வருடத்தில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு நேரடியாக பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. ஓரிரு தினங்களில் இந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விடும் என்று தெரிகிறது. பள்ளிக்கூடம் திறந்த அன்றே புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

சிபிஎஸ்இ +2 ரிசல்ட் : மே 24 !

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  மே 24-ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
http://cbse.nic.in/newsite/index.html ,   http://cbseresult.nic.in/ என்ற இணையத்தளத்தில்  தேர்வு முடிவுகளை அறியலாம்.

விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்!

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில், `ஊதியக் குழு ஊதிய மாற்றம் - ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்துத் துறைகளில் இருந்தும் விபரம் கோரியுள்ளது.

அதாவது, "அரசுத் துறைகளில் 01.05.2017 அன்று பணியாற்றுவோர் விபரம், அவர்களின் ஊதிய விபரம், காலிபணியிட விபரம், 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை ஓய்வுபெறுவோர் விபரம், தர ஊதிய அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டு வாடகை படிபெறுவோர் விபரம்" ஆகியவற்றையும் 30.6.2017-க்குள் கோரியுள்ளது.
இந்தத் தகவல் கிடைத்த பிறகு, மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழுவுக்கு இணையான சம்பளம் தமிழக அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் அலவன்ஸ் அறிவிப்பு வெளியாகிறது!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுப்படி சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதில் 196 விதமான அலவன்ஸ் (படிகள்)களை சம்பள கமி‌ஷன் மாற்றி அமைத்து சிபாரிசு செய்து இருந்தது.
இதை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்க நிதித்துறை செயலாளர் அசோக் லவசா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த குழுவானது ஊழியர்களுக்கான அலவன்ஸ்களை மாற்றி அமைத்தது. இதை அமல்படுத்துவது குறித்து பொருளாதார வல்லுனர்களுடன் மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.திருத்தி அமைக்கப்பட்ட அலவன்ஸ்கள் விவரம் அறிவிப்பதாக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். ஊழியர் சங்கங்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

இந்த நிலையில் இந்த வாரம் அலவன்ஸ்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கநிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு இருப்பதாகவும் கூறினார்.இது தொடர்பான பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் ஆலோசனை கூட்டம் மந்திரி சபை செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் நடந்தது.

இதில் உள்துறை, நிதித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், ரெயில்வே உள்ளிட்ட துறைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.மத்திய அரசு ஊழியர்களின் நலனில் பிரதமர் மோடி அக்கறைசெலுத்தி வருவதாகவும் திருத்தி அமைக்கப்பட்ட அலவன்ஸ் வழங்குவதற்காக மத்திய அரசு ரூ.29,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலாவதியாகும் ஆசிரியர் பணியிடங்கள்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதியாகின்றன.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கை 60 வரை இருந்தால் 2 இடைநிலை ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். மேலும் 61 முதல் 90 வரை 3 பேர், 91 முதல் 120 வரை 4 பேர், 121 முதல் 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்களை நியமிக்கலாம்.

மேலும் தொடக்கப் பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு தலைமை ஆசிரியர் நியமித்து கொள்ளலாம். 2016 ஆக., 1 கணக்கெடுப்பின்படி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக கணக்கிடப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை (மே 24) பணி நிரவல் செய்யப்பட உள்ளனர்.கடந்த காலங்களில் 5 மாணவர்கள் குறைந்தால் கூட உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டனர். 

இந்த ஆண்டு 'ஆன்லைன்' மூலம் கலந்தாய்வு நடப்பதால் ஒரு மாணவர் குறைந்தால் கூட, உபரி ஆசிரியரை பணிநிரவல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதால், அப்பணியிடங்கள் அனைத்தும் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரே சமயத்தில் ஆயிரம் பணியிடங்கள் காலாவதியாவதால், புதிய பணி வாய்ப்பு குறையும். இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,' என்றார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது

வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி துறையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது, பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான, 'ரேங்க்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டு முதல், மூன்று நிறங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்பட உள்ளன. அதேபோல, பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத்தேர்வும் அமலாக உள்ளது.

புதிய மதிப்பெண் முறை

இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில்,

வினாத்தாள் முறை மற்றும் மதிப்பெண்ணில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முதலில், பிளஸ் 1க்கும், அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 2க்கும் புதிய மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 

இதன்படி, தற்போது பிளஸ் 1, பிளஸ் 2வகுப்புகளுக்கு, தலா, 1,200 ஆக இருக்கும் மொத்த மதிப்பெண், 600 ஆக குறைக்கப்படும். 

மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலத்திற்கு, தலா, 100 மதிப்பெண்களும், முக்கிய பாடங்களுக்கு தலா, 100 மதிப்பெண்களும் வழங்கப்படலாம் என, ஆலோசிக்கப்படுகிறது.

அரசாணையாக

இதில், செய்முறை தேர்வு இருக்கும் பாடங்களில் அகமதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வுக்கு, தலா, 10 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வுக்கு, 80 மதிப்பெண்களும் இருக்கும் என, தெரிகிறது.

மேலும், நான்கு முக்கிய பாடங்களில், ஒரு பாடம் மட்டும், விருப்பப் பாடமாக வழங்கப்பட உள்ளது. 

அதேபோல், தேர்வு எழுதும் நேரத்தையும், மதிப்பெண்ணுக்குஏற்ப குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.'இதற்கான கோப்பு, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின், அரசாணையாக வெளியிடப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


வினாத்தாளும் மாறுகிறது!

பொதுத்தேர்வுகளில் மாற்றம் வரும் போது, வினாத்தாள் தயாரிப்பு முறையும் மாற்றப்பட உள்ளது. மாணவர்கள், புத்தகத்தில் உள்ள வரிகளை மனப்பாடம் செய்து, கட்டுரை வடிவில் எழுதும் தேர்வு முறை, தற்போது உள்ளது.

இதில், அதிக மதிப்பெண் பெற்றாலும், போட்டி தேர்வுகளிலும், உயர் கல்வியிலும், மாணவர்களால் ஜொலிக்க முடிவதில்லை. எனவே, வினாத்தாளில், சி.பி.எஸ்.இ., போல் மாற்றம் செய்யப்பட உள்ளது. 

அதில், சரியான விடையை தேர்வு செய்யும், 'அப்ஜெக்டிவ்' முறை வினாக்கள் அதிகமாக இருக்கும். மேலும், பாடத்தில் உள்ள அடிப்படை சூத்திரங்களை பயன்படுத்தி, சிந்தித்து விடை எழுதும் வகையிலான, புதிய வினாக்களும் இடம்பெற உள்ளன. 

CPS வல்லுநர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்வது எப்போது ???

TET தேர்வு விடைக்குறிப்பு : ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால், தகுந்த ஆதாரத்துடன், வரும், 27ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்' என, ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து, வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் - 1ல், 2 லட்சத்து, 41 ஆயிரத்து, 555 பேரும், தாள் - 2ல், 5 லட்சத்து, 12 ஆயிரத்து, 260 பேரும் தேர்வுகளை எழுதி உள்ளனர். இத்தேர்வின், கேள்வித்தாளுக்கு உரிய தற்காலிக விடைக்குறிப்புகள், http://trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

இவற்றின் மீது, தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால், ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ, வரும், 27க்குள், ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். ஒவ்வொரு விடைக்கும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, பிரத்யேக படிவத்தில், ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்களின் ஆதாரத்தை மட்டும் அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதுாரக் கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்கப்படாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்

நீட் தேர்வு முடிவை வெளியிடத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ  மற்றும் மத்திய அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையைச் சேர்ந்த அபிஷேக் முகமது சார்பில் அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் கடந்த 7ம் தேதி நடந்த நீட் தேர்வு எழுதியுள்ளான். நீட் தேர்வில் கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ  பாடத்திட்டத்தின்கீழ் கேட்கப்பட்டுள்ளது.

முக்கிய மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டாலும் ஆங்கில மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் முற்றிலும் சிபிஎஸ்இ பாடத்தின்கீழ்தான் கேட்கப்பட்டன. அதே நேரத்தில் தமிழில் கேட்கப்பட்ட பல கேள்விகள் மாநில பாடத்திட்டத்தின்கீழ் கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டதில் முரண்பாடுகள் இருந்துள்ளன. 

எனது மகன் தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் பிளஸ் 2 படித்துள்ளான். தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுதியுள்ளான். மாநில பாடத்திட்டங்கள் சிபிஎஸ்இ  பாடத்திட்டத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்படாதவரை மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் நீட் தேர்வை சரியாக எழுத முடியாது. இதுபோன்ற குறைபாடுகளும், முரண்பாடுகளும் இருக்கும் நிலையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாகும். 

ஒரே சீரான பாடத்திட்டம்வரும் வரை நீட் தேர்வை நடத்துவதால் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே, கடந்த 7ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், ஒரே சீரான பாடத்திட்டத்தின்கீழ் நீட் தேர்வை நடத்துமாறு சிபிஎஸ்இக்கு உத்தரவிட வேண்டும். கடந்த 7ம் தேதி நடந்த நீட் தேர்வின் முடிவை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதில் தருமாறு சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை (நாைள) 24ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். 

உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும், இன்று நடக்கவிருந்த, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணிக்கான, பதவி உயர்வு கவுன்சிலிங், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கவுன்சிலிங், கடந்த 19ல் துவங்கியது. 

உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு, இன்று நடக்கவிருந்த கவுன்சிலிங், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தற்காலிகமாக ஒத்தி வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், 'சென்னை ஐகோர்ட்டில், வழக்கு குறித்த தீர்ப்பு வெளியாகும் வரை, பதவி உயர்வு கலந்தாய்வு, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், இப்பதவிக்கான, கவுன்சிலிங் நடக்கவிருக்கும் தேதி, பின் அறிவிக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:பட்டதாரி ஆசிரியர்கள், பணி மூப்பு அடையும் முன், தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால், 2008ல், சிலர் உயர் நீதிமன்றத்தை நாடினர். பள்ளிக்கல்வித் துறை சார்பில், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து, வழக்குகளை 

விரைந்து முடிக்க வேண்டும். ஜூன் இறுதிக்குள், காலியாக உள்ள, 250 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும், பதவி உயர்வால் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்!!

நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்!!
இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், "நீங்கள் இந்திவழியில் கற்றவர்" என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், "ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன்.

பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்." என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.

தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம் பேசினோம்.

''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?''
''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.''

''எப்படிச் சொல்கிறீர்கள்...?'' 

''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''

''சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?''

''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் 'நீட்' தேர்வு.''
''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''
''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''

''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?''

இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புபுரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''

''தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?''

''தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா...? 

ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது...
'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்...? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''

''சரி, இதற்கு என்னதான் தீர்வு...?''

"கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.''

''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?'' 

''ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!