Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 23 June 2017

30 ஸ்மார்ட் நகரங்கள் அறிவிப்பு: நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் நகரங்கள் தேர்வு.

மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலை இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார்.

‘ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதில் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே 60 நகரங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு திட்டமான ஸ்மார்ட் நகரம் திட்டத்தின் இரண்டாம் ஆண்டையொட்டி, தில்லியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு 30 புதிய நகரங்கள் பட்டியலை இன்று வெளியிட்டார்.

தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் நகங்கள் எவை?

கேரள மாநிலம் திருவனந்தபுரம், சத்தீஸ்கர் மாநிலம் நயா ராய்பூர், குஜராத் மாநிலம் ராஜ்கோட், ஆந்திர மாநிலம் அமராவதி, பிஹார் மாநிலம் பாட்னா, தெலங்கானாவில் கரீம்நகர், பிஹாரில் முசாபர் நகர், புதுச்சேரி, குஜராத் காந்திநகர், ஜம்மு - காஷ்மீர், மத்தியப் பிரதேசத்தின் சாகர், ஹரியாணாவின் கர்னால், மத்தியப்பிரதேசத்தின் சட்னா, கர்நாடகாவின் பெங்களூரு, இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, உத்தராகண்டின் டேராடூன், தமிழகத்தின் திருப்பூர், மகாராஷ்டிரா மாநிலத்தில் சின்ச்வாட், பிம்ப்ரி, சத்தீஸ்கரின் பிலாஸ்பூர், அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகட், ஜம்மு, குஜராத்தின் தாஹோத், தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி, மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால், உ.பி.யின் அலகாபாத், அலிகார் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் கேங்டோக் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி ஆகிய 4 நகரங்கள் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தேர்வு செய்யப்பட்டுள்ள 30 நகரங்களில் 26 நகரங்கள் கையடக்க விலையில் வீட்டுமனை திட்டங்கள், அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. 26 நகரங்கள் புதிய பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள்யும் 29 நகரங்கள் சாலை மேம்பாடு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளையும் முன்வைத்துள்ளதாக வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இதற்காக ரூ.57,33 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளது.

எல்லாப் பள்ளிகளிலும் கருத்துச் சுதந்திரப் பெட்டி இருக்கணும்

"உங்க பொண்ணை நம்ம ஸ்கூல் டாய்லெட்டைப் பயன்படுத்த சொல்வீங்களா சார்?" - ஆசிரியருக்கு மாணவியின் கேள்வி!

கற்றல் என்பது உரையாடல்களில் இருந்துதான் தொடங்குகிறது என்பார்கள். ஆனால், நமது கல்விச் சூழல், ஆசிரியர் கூறுவதை மாணவர்கள் கேட்கும்விதமாவே உள்ளது. இது, ஒரு வழிப்பாதை போன்றது அல்லவா. மாணவர்கள், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாகப் பள்ளிக்கூடம் இருந்தால்தான் மகிழ்ச்சியோடு கற்பார்கள். பள்ளி என்பது மாணவர்கள் கல்வி கற்கும் இடம் மட்டுமல்ல; ஆசிரியர் எனும் வழிகாட்டியை, நண்பர்கள் எனும் பெரும் உறவைப் பெறும் இடமும்கூட. ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பதோடு, தோழமையுடன் நடந்துகொண்டால், பள்ளியைவிட இனிமையான இடம் வேறு என்ன இருக்கப்போகிறது? ஆனால், ஆயிரம் ஆசிரியர்களில் தோழமையோடு பழகும் ஆசிரியர்கள் மிகச் சொற்பமானவர்களே. அவர்களில் ஒருவர்தான், மணிமாறன்.


திருவாரூர் மாவட்டம், மேல ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர். இந்தப் பள்ளியில் மாணவர்களின் கருத்துகளை அறிந்துகொள்ள ஒரு பெட்டி இருக்கிறது. அதைப் பற்றிய பேச்சுடன் ஆரம்பித்தார் மணிமாறன்.

"மாணவர்கள் நினைத்தவற்றை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சூழல் வேண்டும். அதற்கான தொடக்கப்புள்ளியே இந்தக் கருத்துச் சுதந்திரப் பெட்டி. 'மனித உரிமைக் கல்வி நிறுவனம்' நடத்திய பயிற்சி ஒன்றில் பங்கேற்றபோது இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். பல பள்ளிகளிலும் இருக்கும் வழக்கமான புகார் பெட்டி போன்றதல்ல. இது, தங்கள் உணர்வுகளை மாணவர்கள் பகிர்ந்துகொள்ளும் பெட்டி. பள்ளிக்குள் தனக்கு ஏற்படும் மகிழ்ச்சி, அவமானம், சோகம், பள்ளியின் குறைபாடு, ஆசிரியர் பற்றி என எதுவாக இருந்தாலும் இந்தப் பெட்டியில் எழுதிப் போடலாம். தன் அடையாளம் இல்லாமலும் கடிதங்களைப் போடலாம். இதை மனித உரிமைக் கல்வி நிறுவனத்தில் பயிற்சிபெற்றதால் நான் மட்டுமே திறக்கலாம். இதில் இடப்படும் கருத்துகளை எவ்வாறு எதிர்கொள்வது எனப் பயிற்சி பெற்றிருக்கிறேன். அதில், முக்கியமான சிலவற்றைச் சொல்கிறேன்.

பெட்டியிலிருந்து எடுக்கப்படும் கடிதத்திலுள்ள கருத்துகளை விருப்பு, வெறுப்பின்றி அணுக வேண்டும், யார் எழுதியிருப்பார் என்கிற ஆராய்ச்சி கூடாது. எழுதியவரின் அடையாளம் தெரிந்தாலும், பொதுவெளியில் காட்டிக்கொள்ளக் கூடாது. கடிதம் எழுதியவரைத் தனிமைப்படுத்தக் கூடாது. சமூக நோக்கத்துடன் அந்தக் கருத்தை அலச வேண்டும். அந்தக் கடிதத்தை சக ஆசிரியர்களிடம் காண்பிக்கக் கூடாது. தேவையெனில் எழுதியிருக்கும் கருத்துக் குறித்து விவாதிக்கலாம். எழுதப்பட்டிருக்கும் பிரச்னைக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பெட்டியில் வந்த கருத்துகள் என்னையே செதுக்கிக்கொள்ளவும் பயன்படுகிறது.

உதாரணமாக, எங்கள் பள்ளிக் கழிவறை உடைந்து சரியான பராமரிப்பின்றி இருந்தது. அது குறித்து நானும் அக்கறையின்றி இருந்தேன். ஒரு நாள் இந்தப் பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. 'சார், நம்ம ஸ்கூல் டாய்லெட் ரொம்ப மோசமாக இருக்கு. அதைப் பயன்படுத்தவே பயமாவும் அருவெறுப்பாகவும் இருக்கு. அதை நீங்க கவனிச்சு இருக்கீங்களா? உங்க பொண்ணை அந்த டாய்லெட்டைப் பயன்படுத்த விடுவீங்களா? அதனால், ஸ்கூல் டாய்லெட்டை சரி பண்ணிக்கொடுங்க ப்ளீஸ். - இப்படிக்கு கீழ்படித்த மாணவி' என்று எழுதியிருந்தது. அதைப் படிச்சதும் பெரும் அதிர்ச்சி. என் மகளைக் குறிப்பிட்டு எழுதியிருந்தது இன்னும் நெருக்கமாக உணரவைத்தது. இத்தனை நாளாக கவனிக்காமல் இருந்துவிட்டோமே என்கிற குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. உடனே, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வலியுறுத்தி, கழிவறையைப் புதுப்பித்தோம். ஒருவேளை இந்தக் கருத்துச் சுதந்திரப் பெட்டி இல்லாதிருந்தால், இந்த விஷயம் எனக்குப் புரிஞ்சே இருக்காது.


அடுத்து, ஒரு மாணவன் வீட்டுப் பாடம் எழுதலை. அவன் வகுப்பு ஆசிரியர் தண்டனை கொடுத்திருக்கார். இது நடந்து சில நாள்கள் கழித்து, ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதைப் படிக்கும்போதே நடுங்கிட்டேன். 'சார், நான் அன்னிக்கு வீட்டுப் பாடம் எழுதாது தப்புதான். ஆனா, அன்னிக்கு முதல் நாள் இரவு எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயங்கரச் சண்டை. அம்மாவை அப்பா கடுமையா அடிச்சுட்டு வெளியே போயிட்டாரு. அம்மா அழுதுட்டே இருந்தாங்க. பக்கத்து வீட்டிலே இருந்தவங்க 'ஏதாச்சும் பண்ணிக்காதே'னு அம்மாகிட்ட சொன்னதைக் கேட்டேன். விடியற வரைக்கும் தூங்கவே இல்லை. அதனாலத்தான் வீட்டுப் பாடம் செய்யலை'னு எழுதியிருந்தான். அந்த மாணவனிடம் பேசித் தைரியம் சொன்னேன். அவன் பெற்றோரிடமும் பேசினேன்.

இப்படிப் பல கடிதங்கள், 'என் அப்பா வெளியூரில் இருக்கார். ரெண்டு நாளுக்கு ஒரு தடவை பேசுவார். நேத்துப் பேசும்போது, அம்மா போன்ல பேலன்ஸ் தீர்ந்துட்டதால நான் அப்பாவோடு பேசவே முடியல' என ஒரு மாணவி எழுந்திருந்தாள். உடனே என் போனிலிருந்து அவள் அப்பாவை அழைச்சுப் பேசவெச்சேன்.

சுவாரஸ்யமான இன்னொரு கடிதம் இருக்கு. 'சார், நம்ம ஸ்கூல்ல இருக்கிற பீரோ ரொம்ப பழசாயிட்டு. நாங்க பக்கத்துல போகும்போது எங்க மேல விழுந்துட்டா என்ன ஆகுறது? நீங்கதான் அநாவசியமா போலீஸ் ஸ்டேசன் போகணும்' என எழுதியிருந்தது. படிச்சு சிரிச்சாலும், உடனடியா அந்த பீரோவை மாற்றவும் முயற்சி எடுத்தேன். 'நான் இப்போ எட்டாவது படிக்கிறேன் சார். ஆறாவது படிக்கும்போது சில பொருள்களைத் திருடியிருக்கேன். இப்போ அப்படி செய்யறதில்லை. ஆனால், இப்பவும் நான் திருடுறதா என் ஃப்ரெண்ட்ஸ் சொல்றப்ப கஷ்டமா இருக்கு'னு ஒரு கடிதம். மாணவிகள் தங்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் எழுதியிருக்காங்க. என் மனைவியும் இதே பள்ளியில்தான் வேலை செய்யறாங்க. ஒரு கடிதம் தனி கவரில் இருந்தது. கவர் மீது 'இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க வேண்டாம். டீச்சரிடம் கொடுக்கவும்' என்று இருந்தது. என் மனைவியிடம் கொடுத்தேன். ஒரு மாணவி, மாதவிலக்கு பற்றிய சந்தேகத்தை எழுதியிருந்ததாக என் மனைவி கூறினார்.


ஒவ்வொரு மாணவருக்குள்ளும் சொல்வதற்கு எவ்வளவோ செய்திகள் இருக்கு. என் மீது புகார் சொல்லியும் கடிதங்கள் வந்திருக்கு. அந்த விஷயங்களில் என்னைச் சரிசெய்துகிட்டேன். மாணவர்களை இன்னும் நெருக்கமாக நேசிக்க, இந்தப் பெட்டி உதவுகிறது. எல்லாப் பள்ளிகளிலும் இதுபோன்ற கருத்துச் சுதந்திரப் பெட்டி இருக்கணும்" என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் ஆசிரியர் மணிமாறன்.

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரம் தொடக்கம்.

மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு வரும் ஜூலை 3ஆம் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பின்னரே தமிழகத்தில் மாநில மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்படும், ஒரு வாரத்தில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகள் - ஆசிரியர்கள் குழப்பம்

தொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) இடையே ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.தொடக்க கல்வித் துறை சார்பில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆண்டு செயல்திட்டம் வெளியிடப்பட்டது.
இதில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பணி நாள்கள் 210 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஆக., 5, செப்., 16, அக்., 7 ஆகிய 3 சனிக்கிழமைகளும், ஆண்டுத் தேர்வு முடிந்து ஏப்., 20, ஏப்., 23 முதல் ஏப்., 27, ஏப்., 30 ஆகிய 7 சனிக்கிழமைகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால் கடந்த காலங்களில் பயிற்சிக்காக அளிக்கப்பட்டு வந்த ஈடுசெய் விடுப்பும் ஆசிரியர்களுக்கு ரத்து செய்யப்பட்டது.

தொடக்க கல்வித்துறையின் இந்த அறிவிப்பை அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்கவில்லை. தேர்வுக்கு முன்பே பயிற்சிகளை முடிக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஜூன் 24ல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும், ஜூலை 1ல் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.

இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறியதாவது: தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இதனால் சிரமப்படுகிறோம் என்றனர்.

CBSE – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST NEET (UG) - 2017  RESULTS

CBSE – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST
NEET (UG) - 2017  RESULTS

Check Your Result Direct Link

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதிலளித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள், 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.

அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை. தமிழகம் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தினாலும், இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.

இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு, 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை; மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான்,' என ஆணையம் பதிலளித்துள்ளது.

இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை; இதனை செயல்படுத்த வேண்டுமென, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஓய்வு நேரத்திலும் மாணவர்களை கற்றலில் ஈடுபடுத்தும் வெள்ளிமேடு தொடக்கப்பள்ளி.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது,வெள்ளிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
       இப்பள்ளியில் 50 மாணவர்கள் பயில்கின்றனர். தலைமை ஆசிரியை திருமதி.M.சாந்தி, உதவி ஆசிரியர் திரு.G.மூர்த்தி. இப்பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்பட்ட phonetic method எனப்படும் ஆங்கில ஒலி உச்சரிப்பு முறை குறுந்தகட்டினை பயன்படுத்தி ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது.இப்பள்ளி மாணவர்கள் 30 நாட்களில் ஆங்கில ஒலிகளை சரியாக உச்சரித்து, சரளமாக வாசிக்கவும் கற்றுக்கொண்டார்கள்.மேலும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கூட நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுகின்றன.
          மிககுறுகிய காலத்திலேயே மாணவர்கள் மிகச்சிறந்த முறையில் ஆங்கிலம் கற்பதை கண்டுவியந்து,கிராம பொதுமக்கள் ரூபாய் 1 லட்சம் செலவில் பள்ளிக்கு வண்ணம் தீட்டி, கலையரங்கம் அமைத்து கொடுத்தனர்.இதன் விளைவாக 2014-2015 ஆம் ஆண்டின் மாவட்டத்தின் சிறந்த பள்ளி விருது இப்பள்ளிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது.
     இப்பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள  projector மற்றும் பெருந்திரையை பயன்படுத்தி அனைத்து பாடங்களும் சிறப்பாக கற்பிக்கப்படுகிறது.  "தாயெனப்படுவது தமிழ் " என்ற காணொலி குறுந்தகட்டினை பயன்படுத்தி ஆடிபாடி தாய்மொழியை கற்கிறார்கள். ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழும் பிழையின்றி சரளமாக வாசித்து எழுதுகின்றனர். கல்வி துறை அதிகாரிகள்,phonetic Director,தாயெனப்படுவது தமிழ் குறுந்தகடு Director ஆகியோர் இப்பள்ளியை பார்வையிட்டு, இப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள்.
         இப்பள்ளி மாணவர்களின் ஆங்கில வாசிப்பு திறன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதின் விளைவாக சமூக ஆர்வலர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து பள்ளிக்கு ஒலிப்பான் ,ஒலிபெருக்கி வழங்கினர். மேலும் மாணவர்கள் அமர்ந்து படிக்க 6 வட்ட மேசைகள் 50 நாற்காலிகளும் வாங்கி கொடுத்தனர்.
      இப்பள்ளி வளர்ச்சி நிலையை அறிந்த " திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்கம் " இப்பள்ளிக்கு ருபாய் 1 லட்சம் மதிப்பில் பள்ளி சுவர் முழுவதும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள கற்றல் திறன்களை ஓவியங்களாகவும், கருத்துகளாகவும் வரைந்து கொடுத்தனர். அவை ஒவ்வொன்றும் மாணவர் ஒவ்வொருவருக்கும் சேதி சொல்லும் போதி மரமாக காட்சியளிக்கின்றனர்.
          ஓய்வு நேரத்திலும் மாணவர்களை கற்றலில் ஈடுபடுத்தும் நோக்கில் "Joyful learning" ( மகிழ்ச்சியான கற்றல்) சூழலை உருவாக்கயுள்ளது.இவ்வரங்கத்தை 09.06.2017 அன்று திண்டிவனம் சார் ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

750pp - தனி ஊதியம் 1.1.2011க்குபிறகு நிர்ணயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பதிலளிக்க மதுரை , திருச்சி மண்டல தணிக்கை அலுவலர்களுக்கு தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம் ) அவர்களின் உத்தரவு!!

TNOU - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு TNOU பல்கலைக்கழகம் வழங்கிய தெளிவுரை

பள்ளிக்கல்வி பாடத்திட்ட குழுவுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாற்றி அமைக்கவும், பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அந்த பணியை செய்ய இருக்கிறது. அதில் கலைதிட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் தயாரித்து  வடிவமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. 

இந்த பணியை அனுபவம் மிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள், ஆசிரியர்களை கொண்டு செயல்படுத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது. இதற்காக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இணைய தளம் மூலம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த கால அவகாசம் ஜூலை 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்

தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,645 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பத்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முறைப்படி நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை அல்லது நான்கு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள். இதற்காக அரசுக்கு 10 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவாகும், என கூறப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை அரசு செயலர் உதயசந்திரன் இதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.

நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்சிலிங்

''இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்கும் தேதி, 'நீட்' தேர்வு முடிவுக்கு பின் இறுதி செய்யப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இன்ஜி., மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் நேற்று வெளியிட்டார்.

பின் அவர் அளித்த பேட்டி: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை ஜூன் 27ல் துவங்க திட்டமிட்டுள்ளோம். ஆனால், நீட் தேர்வு முடிவு தாமதமானால், கவுன்சிலிங் தேதி தள்ளிப்போகும். தற்போதைய நிலையில் 200க்கு 200, 'கட் ஆப்' பெற்றவர்கள் 59 பேர் உள்ளனர். இவர்களில் 36 பேர் மருத்துவப் படிப்பில் இடம் பெற வாய்ப்புள்ளது. 199 கட் ஆப் பட்டியலில் உள்ள 811 பேரில் 645 பேரும்; 198 கட் ஆப் பட்டியலில் உள்ள 2,097 பேரில் 1,681 பேரும்; 197 கட் ஆப் பட்டியலில் உள்ள 3,766 பேரில் 3,014 பேரும் மருத்துவப் படிப்பு இடம் பெற தகுதியுடன் உள்ளனர்.

இவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்தால், அவர்கள் இன்ஜி., படிப்புக்கு வர மாட்டார்கள். எனவே இன்ஜி., கவுன்சிலிங்கை முன்கூட்டியே நடத்தினால் மருத்துவம் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் இன்ஜி., இடங்கள் காலியாகி, அதை மீண்டும் நிரப்ப முடியாத சிக்கல் ஏற்படும்.எனவே, மருத்துவ கவுன்சிலிங்குக்கு பின்பே இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை 31க்குள் இன்ஜி., கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும்.தற்போது நீட் தேர்வால், இன்ஜி., கவுன்சிலிங் தள்ளிப்போகும் என்பதால் ஜூலை 31க்கு பிறகும் கவுன்சிலிங் நடத்த, சட்டரீதியாக அனுமதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 11 கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன. 67 படிப்புகள், கல்லுாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 527 கல்லுாரிகளில், இரண்டு லட்சத்து, 85 ஆயிரத்து 844 இடங்களுக்கு, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இடங்களின் எண்ணிக்கை, இறுதி நேரத்தில் மாறும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!