Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 5 July 2017

2007-2008 முதல் 2015-2016 வரை தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலைப் பள்ளிகளில் கணிணி பாடப் பிரிவினை செயல் படுத்த கணினி பயிற்றுனர் பணியிடம் தோற்றுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - விரைவில் பள்ளிகளில் SMART CARD , BIO-METRIC வருகைப்பதிவு - இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக்கல்வி - விரைவில் பள்ளிகளில் SMART CARD , BIO-METRIC வருகைப்பதிவு - இயக்குனர் செயல்முறைகள்

"BIO-METRIC ATTENDANCE IN ELEMENTARY EDUCATION SOON" - DIR PROCEEDING

பள்ளிகளில் ஸ்மார்ட் கார்ட்,பயோமெட்ரிக் ஆகியவை நடைமுறையில் வர இருப்பதால் தலைமையாசிரியர்கள் 1 முதல் 8ம் வரை உள்ள மாணவ,மாணவியர்களின் எண்ணிக்கையினை சரியாக அனுப்புமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறையில் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் சிறந்த பள்ளிக்கு காமராஜர் விருது - சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. இன்பதுரை கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், சிறந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரில் விருது வழங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்

அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் உத்தரவு.

அரசு பாலிடெக்னிக்கில் காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு வெளியிட்ட ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

எம்.இ. பட்டதாரிகள் விண்ணப்பங்கள் ஏற்க மறுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. பி.இ. படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. 

" ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு மாணவரே , ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆசிரியரே "

" ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு மாணவரே , ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆசிரியரே "
      
       மேற்காண் தொடருக்கான உள்ளார்ந்த அர்த்தத்தை , ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக உணர்ந்திருப்பர், தம் அனுபவங்கள் வாயிலாக புரிந்திருப்பர் .....

         ஒரு ஆசிரியரிடம் மாணவன் கற்க வேண்டிய விஷயங்கள் எந்த அளவினுக்கு உள்ளனவோ....அதற்கு சற்றும் குறையாமல் ...மாணவனிடம் ஆசிரியர் உணர வேண்டிய , அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் மிகுதியாக உள்ளன....
      
            எங்கள்.... கட்டளை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ...பிள்ளைகளின் கல்வித் தரத்தை மென்மேலும் உயர்த்தும் நோக்கில்...."திண்ணைப்பள்ளி " என்னும் திட்டத்தை முறையாக செயல்படுத்த முனைந்தோம். அதன் முதல் படியாக எங்கள் பள்ளியின் முதல் திண்ணைப்பள்ளியானது 19.6.2017 அன்று ஒய்வு பெற்ற ஆசிரியர் திரு அ. வரதராஜுலு அவர்களைக் கொண்டு துவக்கப்பட்டது. இதன் காரணமாக திண்ணைப் பள்ளியின் அமைப்பு , செயல்பாடு , நோக்கம் ஆகியன சார்ந்த புரிதல் மாணவர்களிடம் சிறப்பாக ஏற்பட்டிருந்தது.
              அதன் தொடர்ச்சியாக மீத்திறன் மாணவர்கள் மற்றும் மாணவிகளை "திண்ணைப்பள்ளி ஆசிரியர்" ஆக கொண்டு திண்ணைப்பள்ளி அமைக்கப்பட்டது ...இதில் அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு மிக அருகாமையில் உள்ள கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு ...திண்ணைப்பள்ளி ஆசிரியர்  அக்குழுவிற்கு கற்பிக்குமாறு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக கிராமம் முழுவதும் பரவலாக இருக்கும்படியாக எட்டு திண்ணைப்பள்ளிகள்  அமைக்கப்பட்டுள்ளது.
          மேலும் இந்த திண்ணைப் பள்ளிகளுக்கென பிரத்யேகமாக தமிழ் மற்றும் ஆங்கில பயிற்சி கட்டகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த கட்டகங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் ஒரு வாரத்திற்கென மாணவர்களுக்கு படிப்பதற்காக அளிக்கப்பட்டு... பின்பு திங்கள்  கிழமை அன்று சிறு தேர்வின் மூலம் மாணவர் அடைவு சோதிக்கப்படும். சிறப்பாக செயல்படும் திண்ணைப்பள்ளி ஆசிரியருக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்படும். இதன் விளைவாக மாணவர் நடத்தையில்  கணிசமான முன்னேற்றத்தை காண முடிகிறது. இனி வரும் காலங்களில் மேலும் மாணவர்களின் கல்வித்திறன் சிறப்பாக உயருமென்று உணர முடிகிறது.
          கிராமங்களில் பரவலாக காணப்படும் பிரச்சினைகளுள் ஒன்று..கிராமங்களில் உள்ள இயல்பான நெருக்கமான சூழலின் காரணமாக ...பிள்ளைகளுக்கான நட்பு வட்டம்  என்பது பெரிது...அதன் காரணமாக பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பது...அப்படியே வீட்டிற்கு சென்றாலும் ...சிறிது நேரம் கூட வீட்டில் தங்காமல் இருப்பது போன்றன... இந்த பிரச்சினை திண்ணைப்பள்ளி முறையால் எளிமையாக , முழுவதுமாக களையப்பட்டுள்ளது...பிள்ளைகள் பள்ளி முடிந்து உடனே வீட்டிற்கு சென்று திண்ணைப்பள்ளிக்கு செல்வதை காண முடிகிறது.
              இன்று திண்ணைப்பள்ளிகளை எதேச்சையாக சென்று பார்த்த போது ...பிள்ளைகள் சுய ஆர்வம் , சுய கட்டுப்பாடு ஆகிய தன்மைகளோடு ஈடுபாட்டுடன் கற்றல் செயல்களில் ஈடுபடுவதை பார்த்து மனம் கொண்ட மகிழ்ச்சிக்கும் , நெகிழ்ச்சிக்கும் அளவே கிடையாது....
            பிள்ளைகள் மீது நம்பிக்கை கொண்டு செய்த செயல் வெற்றியின் படிகளில் நடை போடுவதை உணர முடிகிறது.
                இந்த அனைத்து செயல்களுக்கும் உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி....

ச.சுகதேவ்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி
கட்டளை.
மரக்காணம் ஒன்றியம்
விழுப்புரம் மாவட்டம்
அலைபேசி: 9659990091

கிராம மக்கள் - ஆசிரியர்கள் கூட்டு முயற்சி: வேகமாக வளர்ந்து வரும் விளக்குடி அரசு தொடக்கப் பள்ளி

விளக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நுழைவாயில்.

கிராம மக்களின் ஒற்றுமையான செயல்பாடுகள்; ஆசிரியர்களின் தொடர் முயற்சிகள்; மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பித்தல்

ஆகிய அம்சங்களால் வேகமாக வளர்ந்து வருகிறது ஓர் அரசு தொடக்கப் பள்ளி.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஒன்றியம் விளக்குடி கிராமத் தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திலேயே புதிய மாணவர்கள் சேர்க்கை அதிகமாக நடைபெற்ற தொடக்கப் பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தப் பள்ளியில் மொத்தம் 207 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 52 பேர் இந்த ஆண்டு புதிதாகச் சேர்ந்தவர்கள்.

பிற அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை என்பது கடும் சவாலாக மாறியுள்ள சூழலில், விளக்குடி பள்ளியில் அதிக மாணவர்கள் சேருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ்வழி வகுப்புகள் மட்டுமே நடை பெறுகின்றன. ஒவ்வொரு பாடத்தின் மைய நோக்கத்தையும் மாணவர்களுக்கு புரிய வைத்திட வேண்டும் என்பதில் இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மிகத் தீவிரம் காட்டுகின்றனர். அதற்காக எளிதாக கற்பிக்க உதவும் ஏராள மான துணைக் கருவிகளை பயன் படுத்துகின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் துணைக் கருவிகள் வழங்கப்படுகின்றன. அது தவிர இந்தப் பள்ளி ஆசிரியர்களே சொந்த முயற்சியில் பல துணைக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிகளுக்கு ஆசிரியர் பயிற்றுநர் ந.காளிதாஸ் உறுதுணையாக உள்ளார்.

இது தொடர்பாக காளிதாஸ் கூறிய தாவது: 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துகள், எண்களை அறிமுகம் செய்வது முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித, அறிவியல் பாடங்களின் சூத்திரங்களை கற்பிப்பது வரை அனைத்து பாடங்களையும் துணைக் கருவிகள் உதவியுடன் ஆசிரியர்கள் எளிதாகப் புரிய வைக்கின்றனர். ஆங்கிலத்தில் வாசிப்பை எளிதாக்கவும், வாக்கிய அமைப்பு முறைகளை புரிய வைக்கவும் துணைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு பாடத்தை நடத்துவதற்கு முன்பும், அந்தப் பாடத்தை எவ்வாறு கற்பித்தால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பதை திட்டமிடுவதில் ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர்.

புதிய புதிய கற்பித்தல் உத்திகளைக் கூறும்போது, நம்மால் முடியாது என்று தட்டிக்கழிக்காமல், வகுப்பறையில் செய்து பார்க்கலாமே என்பதில் இந்தப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆசிரியர்களின் இந்த ஆர்வமும், முனைப்பும்தான் இந்தப் பள்ளியை இன்று முன்மாதிரிப் பள்ளியாக மாற்றியுள்ளது. இவ்வாறு காளிதாஸ் கூறினார்.

புதிய மாணவர்களை மேள, தாளத்துடன் பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லும் ஊர் மக்கள்.

“எங்கள் பள்ளியில் பயிலும் மாண வர்கள்தான் பொதுமக்களிடத்தில் பள்ளி யின் பெருமையை பரப்பும் விளம்பர தூதர்கள்” என்று பெருமிதமாகக் கூறு கிறார் பள்ளியின் தலைமையாசிரியர் பா.கமலா.

“வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனோடு எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை ஊர் மக்களே ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். தமிழ் வழிப் பள்ளியாக இருந்த போதிலும், ஆங்கில மொழி அறிவிலும் எங்கள் மாணவர்களின் கற்றல் திறன் அதிகமாகவே உள்ளது. இதனை உணர்ந்து கொண்டதால் அதிக மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்கின்றனர்” என நெகிழ்கிறார் அவர்.

ஆங்கில மொழி அறிவை வளர்க்க காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர் பயிற்றுநர் காளிதாஸ் எல்லா விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு ஆங்கில உரையாடல் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்.

“இந்தப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள், 5-ம் வகுப்பு முடிக்கும்போது மிகச் சரளமாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் வேண்டும். அதனை நோக்கமாகக் கொண்டு நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம்” என்கிறார் காளிதாஸ்.

தமிழ், கணிதம், அறிவியல் பாடங் களில் இந்தப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அதிகமாக இருப்பதை பலரும் அறிந்திருக்கிறார்கள். இப்போது ஆங்கில மொழி அறிவை வளர்க்கவும் கூடுதல் கவனம் செலுத்துவது பெற்றோரை கவர்ந்துள்ளது. இதுவும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க பிரதான காரணம் என்கின்றனர் கிராம மக்கள்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் கே.என்.சீராளன் கூறியதாவது:

பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதில் ஊர் மக்கள் அனைவரும் ஒரே சிந்தனையுடன் செயல்படுகிறோம். ஊர் மக்களையும், ஆசிரியர்களையும் உள்ளடக்கிய கிராமக் கல்விக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகிய அமைப்புகள் நன்றாகச் செயல்படுகின்றன. ஆசிரியர்களும், ஊர் மக்களும் அடிக்கடி கூடி பள்ளியின் வளர்ச்சி பற்றி விவாதிக்கிறோம். அர்ப்பணிப்புடன் கூடிய ஆசிரியர்கள் கிடைத்திருப்பது எங்கள் கிராம பள்ளி வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக உள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்தே மாணவர் சேர்க்கைக்கான பணிகளைத் தொடங்கி விட்டோம். ஊர் மக்களுடன் சேர்ந்து பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று மாணவர்களை எங்கள் கிராமத்து பள்ளியிலேயே சேர்க்குமாறு வலியுறுத்தினர். இதற்கு முந்தைய ஆண்டுகளைவிட பெற்றோரிடத்தில் அதிக வரவேற்பு இருப்பதை உணர முடிகிறது.

பள்ளியில் புதிதாகச் சேர்ந்த மாணவர் களுக்கு வரவேற்பு அளிக்கும் விழா கடந்த ஜூன் 23-ம் தேதி நடத்தினோம். ஊரின் மையப் பகுதியிலிருந்து நாதஸ் வரம், மேள, தாளம் முழங்க புதிய மாணவர்களை ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தோம். ஊர் மக்கள் அனை வரும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற னர். பள்ளிக்கு தேவையான சில முக்கிய மான பொருட்களை சீர் வரிசையாகக் கொண்டு வந்து கிராம மக்கள் கொடுத் தனர். இவ்வாறு சீராளன் கூறினார்.

ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை

மரங்கள் நிறைந்து பள்ளியின் சூழல் பசுமையாக உள்ளது. குழந்தைகள் விரும்பும் வகையில் வகுப்பறைகள் அழகாக உள்ளன. மதிய உணவு இடைவேளை நேரத்தில் எந்த வகுப்பை எட்டிப் பார்த்தாலும் உணவுக்குப் பிறகு பல்லாங்குழி, தாயம் என பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் மும்முரமாக உள்ளனர்.

வண்ணமயமான பள்ளியின் கழிப்பறை. உள்படம்: தலைமை ஆசிரியர் கமலா

சுருக்கமாகக் கூற வேண்டுமானால், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் மக்கள் அனைவரும் விரும்பக் கூடிய வளாகமாக இந்தப் பள்ளிக்கூடம் விளங்குகிறது. இத்தகைய ஆரோக்கியமான சூழலால் பள்ளி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

“பள்ளிக்கூடத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக நன்கொடையாளர்களின் உதவியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளை உருவாக்க வேண்டும். இதுவே எங்கள் உடனடி இலக்கு” என்கிறார் தலைமை ஆசிரியர் கமலா.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 97878 22318.

பாடத்திட்டம் மாற்றம் உயர்மட்ட குழு அமைப்பு

தமிழக பாடத்திட்டம் மாற்றம் தொடர்பாக, 'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் இடம் பெறும், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டம்,மாற்றம்,உயர்மட்ட,குழு,அமைப்பு

தமிழகத்தில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 13 ஆண்டு பழமையானது. 10ம் வகுப்பு பாடத்திட்டம், ஆறு ஆண்டுகள் பழமை யானது. அவற்றை, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என, கல்வி யாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து, பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக, புதிய உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார். 

மற்ற உறுப்பினர்கள் விபரம்:

பள்ளி கல்வி செயலர் உதயசந்திரன், அண்ணா 

பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, இஸ்ரோ என்ற, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன இயக்குனர், விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை. மேலும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.பி. விஜயகுமார், தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுப்பிரமணியன்.

திருவள்ளுவர் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜோதி முருகன், கல்வியாளர் ஆனந்தலட்சுமி, மத்திய இடைநிலை கல்வி வாரிய முன்னாள் இயக்குனர் ஜி.பாலசுப்பிரமணியன், பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன், தொடக்க கல்வி இயக்கு னர் கார்மேகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செயலர், இயக்குனர்களில், யார் பதவியில் இருக்கின்றனரோ, அவர்கள் குழுவில் இடம்பெறுவர்.

கலைத்திட்ட குழு

பாடத்திட்டம் மாற்றுவது தொடர்பாக, கலை திட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில், உறுப்பினர்களாக, கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ராமானுஜம், தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள்

துணை வேந்தர் சுந்தரமூர்த்தி, கோவை வேளாண் பல்கலை துணை வேந்தர் கு.ராமசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், பெங்களூரை சேர்ந்த சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன், சென்னை புதுக்கல்லுாரி, உயிரி தொழில்நுட்பவியல் துறை முன்னாள் தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், முனைவர் பாலசுப்பிரமணியன். 

மேலும், கல்வியாளர் கலா விஜயகுமார், ஓவியர் டிராட்ஸ்கி மருது மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் 5 சதவீதம் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கீடு

மருத்துவ படிப்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்தி, அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. 

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். 50 முதல், 70 சதவீத மாற்றுத்திறனாளிகள் கிடைக்காத பட்சத்தில், 40 முதல், 50 சதவீத மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு, இதற்கு முன், 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. 

மேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!