Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 7 July 2017

டிஸைன் ஃபார் சேஞ்ச் விருது வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்!

குஜராத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த  கிரண் பிர் சேத்தி, கல்வி கற்பிக்கும் முறையில் புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க, ‘ரிவர்சைடு ஸ்கூல்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ என்ற போட்டியை இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்து நடத்துகிறார். ஆண்டுதோறும் சர்வதேச அளவில் பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் இந்தப் போட்டியில் இடம்பெறும். 

இதில் இவ்வாண்டு விழுப்புரம் சாலை அகரத்தை சேர்ந்த அரசுப்பள்ளி பரிசு பெற்றுள்ளது. இப்பள்ளியின் 8 கண்டுபிடிப்புகளை இப்போட்டிக்கு அனுப்பியதில், சிறந்த கண்டுபிடிப்புக்காக சாக்பீஸ் துகள்கள் வெளியில் சிந்தாத, ‘மாதிரி டஸ்டருக்கு’ 15 ஆயிரம் ரொக்க பரிசோடு விருதும் கிடைத்துள்ளது.

“அரசுப் பள்ளியிலும் ஆற்றல் மிக்க மாணவர்கள் உண்டு. மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவர கொஞ்சம் கூடுதலாக முயற்சி செய்தோம்; அவ்வளவுதான்” என்று கோரஸாக பதில் வருகிறது ஐந்து பேர் கொண்ட மாதிரி சாக்பீஸ் டஸ்டர் கண்டுபிடிப்பாளர்களிடமிருந்து. தொடர்ந்து ஆனந்தராஜ் என்ற மாணவர் பேசத் தொடங்கினார்.

‘‘5 ஆண்டுகளாக செய்த முயற்சியின் பலன் இந்த விருது. 2016 ஆம் ஆண்டு டிசைன் ஃபார் சேஞ்ச் (DFC)இல் TOP-20 இல் எங்கள் ‘டஸ்ட்டர்’ இடம் பிடித்து கனவை நிஜமாக்கி சாதித்துள்ளோம்” என்ற ஆனந்தராஜைத் தொடர்ந்து பேசிய மணிமாறன், ‘‘2012ல் கலந்துகொண்டவர்கள் மீண்டும் மீண்டும் கலந்துகொள்ளலாம் என்ற விதிமுறை முதலில் தெரியாததால் முன்னர் போட்டியில் கலந்துகொள்ளத் தவறி விட்டோம்! 

மீண்டும் முயற்சியைக் கைவிடாமல் 2013ஆம் ஆண்டு ‘தமிழிலும் எழுதுவோம்!தரணியைக் கலக்குவோம்!’ என்ற செயல் திட்டத்தை எடுத்துக் கொண்டு பள்ளி கணினிகளைப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் ஒன்றுசேர்ந்து NHM WRITER கொண்டு தமிழில் தட்டச்சு செய்தோம். வீடியோவின் வடிவத்தில் AVI, MP4, MPEG, MOV உள்ளிட்ட ஏதாவதொரு வடிவத்தில் கேட்டார்கள். நாங்களோ WMV வடிவத்தில் கொடுத்ததால் அது சரிவர ஓடவில்லை. 

விடுவோமா நாங்கள்? விடாக்கண்டராக 2014ஆம் ஆண்டு மூங்கில் முள்ளால் வேலி! கவலைகள் இனிமேல் காலி!! என்ற செயல்திட்டத்தை எடுத்து, ”தானே” புயலால் கீழே விழுந்துவிட்ட பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவர்களைக் கொண்டே மூங்கில் முள்ளால் வேலி அமைத்தோம்!! ஆனால் வீடியோ, பவர் பாயிண்ட் டெக்னிக் இல்லாமல் இம்முறை புகைப்பட ஸ்டோரி தயாரித்தோம். ஆனால் கருத்தை முழுமையாகச் சொல்ல முடியாமல் போய்விட்டது’’ என்றார். 

“தினம் தினம் கரும்பலகையை அழிக்கும்போது மாணவர்களுக்கு சாக்பீஸ் துகள்களால் ஏற்படும் தும்மல், இருமலுக்குத் தீர்வு வேண்டும் என நினைத்தோம். தொடக்கத்தில் கொட்டாங்குச்சியில் சாக்குப் பையை கட்டி கரும்பலகையை அழித்தோம்! ஆனால் இதில் சாக்குப்பையை அவிழ்த்து தான் சாக்பீஸ் துகள்களைக் கொட்ட வேண்டியிருந்தது. 

ஒவ்வொருமுறையும் சாக்கு பையை அவிழ்க்காமல் இருக்க, வீணான பிளாஸ்டிக் குளிர்பான பாட்டிலை இரண்டாக வெட்டி அடிப்பகுதியை PEN STAND ஆகவும், மூடியுடன் இருக்கும் மேல் பகுதியைக் கொண்டு போர்டை அழிக்கவும் பயன்படுத்தினோம். இப்போது சாக்குப் பையை அவிழ்க்காமல், குளிர்பான பாட்டிலின் மூடியை திறந்து சுண்ணக்கட்டித் துகள்களை வெளியேற்றுவது எளிதாக இருந்தது. கரும்பலகையை இன்னும் சுத்தமாக அழிக்கும் பொருட்டு உள்ளே ஸ்பாஞ்ச் வைத்தோம். 

அது மேல்புறத்தில் இறுக்கமாக இருப்பதற்காகக் குச்சிகளை உடைத்து கூட்டல்குறி வடிவத்தில் இடையில் செருகினோம். இவை அனைத்தையும் பலமுறை மீண்டும் முயற்சித்து தற்போது நீங்கள் பார்க்கும் இறுதி வடிவம் கிடைத்தது! என  புன்னகையுடன் பேசுகிறார் மாணவர் சரவணன். 

‘‘பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் எங்களுக்கு தெரியும்!! எதையும் தைரியமாக எதிர்கொள்வதற்கான துணிச்சலை அரசுப்பள்ளி வழங்கியிருக்கிறது! எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இதுவே போதும்!!’’ என முழங்குகிறார்கள் ஐவர் மாணவர்கள்.

“மரம் வளர்த்தால் தங்க மூக்குத்தி, நாணயம்” - கிராமப் பெண்களை உற்சாகப்படுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்

“ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவங்க செஞ்ச பண உதவியாலும்தான் இன்றைக்கு எங்கள் பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையான வசதிகளோடு சிறப்பாக இயங்கி வருது. பள்ளிக்கு உதவி செய்த மக்களின் நலனில் அக்கறை செலுத்த நினைச்சப்போ, உருவானதுதான் தங்க மூக்குத்தி மற்றும் கால் பவுன் தங்கக் காசு வழங்கும் திட்டம்" என அன்பாகப் பேசுகிறார் தமிழரசன். விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், பள்ளிகுளம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கணித ஆசிரியர். தனது சமூகப் பணியில் மாணவர்களையும் இணைத்துச் சிறப்பாகச் செய்துவருகிறார். 


“மாணவர்கள் படிப்புடன், பயனுள்ள சமூக மாற்றங்களையும் ஏற்படுத்தணும் என்பது என் எண்ணம். சுகாதாரமான, ஆரோக்கியமான சூழலில் மக்கள் வசிக்கணும். அதுக்காக, மூணு வருஷங்களுக்கு முன்னாடி 'மாபெரும் மரம் வளர்ப்புப் போட்டி'யை அறிமுகப்படுத்தினேன். ஆண்டுதோறும் நானும் மாணவர்களும் கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் போய், மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுப்போம். அடிக்கடி அந்த வீடுகளுக்குப் போய் மரத்தை நல்லா வளர்க்கிறாங்களானு பார்ப்போம். பள்ளி ஆண்டு விழாவின்போது, அந்த ஆண்டில் சிறப்பாக மரம் வளர்த்த மூன்று வீட்டின் குடும்பத் தலைவிகளுக்குத் தங்க மூக்குத்தியும், 10 பெண்களுக்குச் சிறப்புப் பரிசும் வழங்குவோம். இந்தத் திட்டத்துக்கு நல்ல பலன் கிடைச்சது. இப்போ, பெரும்பாலான வீடுகளில் ஒரு மரமாவது இருக்கு" என்கிற தமிழரசன், தற்போதைய புதிய திட்டம் பற்றி கூறுகிறார். 
"எங்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லை. அதனால், பள்ளிக்கு எதிர்புறத்தில் இருக்கிற ஒன்றரை ஏக்கர் நிலத்தைக் கிராமப் பஞ்சாயத்தின் அனுமதியோடு மைதானமாகப் பயன்படுத்தி வந்தோம். ஆனால், இந்த ஊரின் 415 வீடுகளில், 80 வீடுகளில் மட்டுமே கழிப்பிட வசதி இருக்கு. மத்தவங்க இந்த மைதானத்தைத் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. இதனால், மைதானத்தைப் பயன்படுத்துறதில் பிரச்னை ஏற்பட்டுச்சு. சுகாதாரச் சீர்கேடும் உண்டாக ஆரம்பிச்சது. இதைச் சரிசெய்ய நினைச்சேன். பேரன்ட்ஸ் மீட்டிங் ஏற்பாடு செஞ்சு, திறந்தவெளி கழிப்பிடத்தால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி வீடியோக்கள் மூலமா எடுத்துச் சொன்னேன். வீடுகளில் கழிப்பிடம் கட்ட அரசு வழங்கும் மானியங்கள் பற்றியும் சொன்னேன். என் முயற்சிக்குப் பலனாக, 40 வீடுகளில் கழிப்பிடம் கட்டினாங்க. ஆனால், அவங்களில் சிலர் மழைக்காலத்தில் விறகுகள் நனையாமல் பாதுகாக்கும் ஸ்டோர் ரூமாகக் கழிப்பிடத்தைப் பயன்படுத்த ஆரம்பிச்சதைப் பார்த்து நொந்துபோனேன். 

என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ, 'தங்க மூக்குத்தி' மாதிரி இன்னொரு திட்டத்தை கொண்டுவரலாம்னு முடிவுப் பண்ணினேன். 'கழிப்பறை கட்டுங்க... கால் பவுன் தங்கம் வெல்லுங்க' என்ற திட்டத்தைத் தொடங்கினேன். நானும் பள்ளிச் சுற்றுச்சூழல் மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் மாணவ, மாணவிகளும் ஒவ்வொரு வீடாகப்போய் துண்டுப் பிரசுரம் கொடுத்து, திட்டத்தைப் பற்றி விளக்கினோம். இப்போ, பலரும் கழிப்பறையை முறையாகப் பராமரிச்சுட்டிருக்காங்க. திறந்தவெளியைப் பயன்படுத்துவது ரொம்பவே குறைஞ்சு இருக்கு. இனி, ஆண்டுதோறும் கால் பவுன் தங்க நாணயமும், பத்து குடும்பத்துக்கு சிறப்புப் பரிசும் கொடுக்கப்போறோம்'' என்கிற தமிழரசன் பேச்சில் சமூக அக்கறை ஒளிர்கிறது.

 

"ஓர் ஆசிரியரின் கடமை என்பது பள்ளியோடு முடிஞ்சுடலை. சமூகத்தில் மாற்றங்களை உருவாக்குவதிலும் தூண்டுகோலாக இருக்கணும். அதனால், என் செலவில் தொடர்ந்து இந்தத் திட்டங்களையும் செயல்படுத்துவேன். வீடுதோறும் மரங்களும், கிராமத்தின் எல்லா மனிதர்களும் ஆரோக்கியமாகவும் இருக்கணும். எதிர்காலத்தில் கிராம மக்கள் எல்லோரையும் இயற்கை விவசாயம் செய்யவைக்கும் எண்ணமும் இருக்கு.'' என்று முத்தாய்ப்பாகச் சொல்லி வியக்கவைக்கிறார் தமிழரசன்.

பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் முறை: சாதக பாதகங்கள் என்னென்ன? ஓர் அலசல்!


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க 60 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். 
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் தொழில்நுட்பம் வழியாகக் கற்பிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் மாறுபட்ட கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.

தமிழகப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளின் தேவை குறித்தும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் ஆசிரியர்களிடமும் கல்வியாளர் ச.மாடசாமியிடமும் பேசினோம்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க 60 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் தொழில்நுட்பம் வழியாகக் கற்பிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் மாறுபட்ட கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.

தமிழகப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளின் தேவை குறித்தும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் ஆசிரியர்களிடமும் கல்வியாளர் ச.மாடசாமியிடமும் பேசினோம்.

பள்ளிக்கல்விக்கான வல்லுநர் குழு குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்து என்ன?
 ஶ்ரீ.திலீப், அரசினர் மேல்நிலைப் பள்ளி, சத்தியங்கம், விழுப்புரம்:

ஸ்மார்ட் வகுப்புகள் மூலம், கல்வி மீதான ஆர்வம் மாணவர்களுக்கு இன்னும் அதிகமாகும். முதலாம் வகுப்பிலிருந்தே இதன் மூலம் கற்பிக்கலாம். படங்களைக் காட்டி, அவற்றின் பெயர்களைக் கூறச் செய்தல், மனப்பாடப் பகுதிகளை ராகத்துடன் பாடும் வீடியோக்களைப் பார்க்கச் செய்தல் எனப் பல்வேறு வகைகளில் ஸ்மார்ட் வகுப்பறை பயன்படும். வழக்கமான முறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது வகுப்பறையிலுள்ள அனைத்து மாணவர்களையும் ஈர்க்க முடியாமல் போய்விடக்கூடும். ஆனால், திரை வழியே கற்பிக்கும்போது அது சாத்தியமாகும். அதே நேரத்தில், திரையில் படங்கள் காட்டப்படுவதற்கு, இருட்டான சூழல் வேண்டும் என்பதால் மூடப்பட்ட வகுப்பறைகளாக மாறும் நிலை உருவாகும். நாள் முழுவதும் அப்படி இருந்தால் ஆரோக்கியமானதல்ல. அதனால், நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் ஸ்மார்ட் வகுப்பு நடந்தால் போதுமானது.

செ.மணிமாறன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேல ராதா நல்லூர், திருவாரூர்.

ஸ்மார்ட் வகுப்பறைகளின் தேவை ஆறாம் வகுப்பிலிருந்துதான் தொடங்குகிறது. ஏனெனில், தொடக்கப் பள்ளியின் வகுப்புகளுக்கான  பாடங்களில் பெரும்பாலும் நாம் நேரில் பார்த்துவிடுகிற பொருள்களைக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கும். அதனால், அவற்றை நேரில் காட்டியே பாடம் நடத்தலாம். உதாரணமாக... பந்து, பட்டம், குடிசை வீடு. தேவைப்பட்டால் உச்சரிப்புக்கென 'ஆடியோ சிஸ்டம் மட்டும் இருந்தால் போதும். ஆறாம் வகுப்புக்கு மேல்தான் கோள்கள், ஒளிச்சேர்க்கை போன்று, மாணவர்களுக்கு நேரில் அழைத்துச் சென்று காட்டமுடியாதவை பாடங்கள் வரும். அவற்றைப் பற்றிய பாடங்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நல்லதே. ஸ்மார்ட் வகுப்புகள் நடைமுறைப்படுத்தும்போது மாணவர்களின் உடல்நலப் பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பா. ப்ரீத்தி, ஊ.ஒ.ந.நி.பள்ளி, சீர்ப்பனந்தல், சங்கராபுரம், விழுப்புரம் மாவட்டம்

ஒரு வகுப்பறையில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்குக் கற்பிக்க ஸ்மார்ட் வகுப்பு முறை எளிமையானதாக இருக்கும். ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளுக்கு மிகவும் உதவும். ஓர் எழுத்தை எழுத எங்கிருந்து ஆரம்பித்து, எங்கு முடிக்க வேண்டும் என்பதை திரை வழியே சுலபமாகக் கற்றுகொடுக்கலாம்.

கரும்பலகையைச் சரியாகக் கையாளத் தெரியாத ஆசிரியர் எனில், எழுதிகொண்டிருக்கும்போது அவரின் உருவம் வகுப்பின் சில மாணவர்களுக்குக் கரும்பலகையை மறைத்துகொண்டிருப்பதை உணர மாட்டார். இதுபோன்ற சிக்கல்களுக்குத் திரை வழியே பயிற்றுவிப்பது நல்ல மாற்றாக அமையும்.

ச.மாடசாமி, கல்வியாளர்.

ஸ்மார்ட் கிளாஸ் முறை நிச்சயம் வகுப்பறையையில் ஒரு மலர்ச்சியைக் கொண்டுவரும். வழக்கமான கற்பித்தல் முறையை இது புதுப்பிக்கிறது. ஆசிரியர்களுக்கு இந்த முறை கூடுதலான சக்தியை அளிக்கிறது. தனியார் பள்ளிகளில் இந்த உத்தி வணிக நோக்கத்தில் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் அவ்விதமாக இருக்காது. ஊட்டி மலர்க் கண்காட்சி பற்றிய பாடத்துக்கு ஆசிரியர் ஒருவர் அந்தக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட வீடியோவைத் திரையிட்டுக் காட்டியுள்ளார். வார்த்தைகளால் விளக்குவதை விட, மேலான புரிதலை இது நிச்சயம் அளித்திருக்கும். வெறும் பிரமிப்புக்காக இந்த முறையைப் பிரயோகிக்காமல்,  மாணவர்களால் காணவே முடியாத எரிமலை, சுனாமி, அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை விளக்குவதற்கும் பயன்படுத்தினால் நல்ல பலனைத் தரும்.

வகுப்பறையில் ஆசிரியர், மாணவர் எனும் இருவருக்கும் இடையே 'ஸ்மார்ட்' திரை நுழைந்திருக்கிறது. அதன் சாதகங்களைக் கொண்டு கற்பித்தலை எளிமையாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

சம்பளப்பட்டியல் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வின்பொழுது கவனிக்கப்பட வேண்டியது HRA SLAB

TRB மூலம் விரைவில் தேர்வு - தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு அனுமதி: விரைவில் போட்டித் தேர்வு

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 765 அரசுப் பள்ளிகளில் புதிதாக கணினி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வித் துறையில் 2007-08 கல்வியாண்டு முதல் 2015-16 கல்வியாண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 525 பள்ளிகளில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பாடப்பிரிவு தொடங்கப்பட்டன. தற்காலிக ஏற்பாடாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு அவை செயல்படுகின்றன. எஞ்சிய 240 பள்ளிகளில் கணினி அறிவியல்பாடப்பிரிவு இல்லை.அப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர போதிய மாணவர்கள் முன்வரும் நிலையில், நிதி ஆதாரம் இல்லாததால் பாடப்பிரிவு தொடங்க இயலவில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் அரசிடம் தெரிவித்துள்ளார்.

 மேற்கண்ட 765 பள்ளிகளிலும் கணினி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தலாம் என்றும், அதற்கு வசதியாக, காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கணினி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றி ஒப்புதல் அளிக்குமாறும் அரசிடம் கோரியுள்ளார்.பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் விரிவாக பரிசீலிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக் கல்வியை சீரிய முறையில் செயல்படுத்த வசதியாக, 765 பள்ளிகளுக்கும் பட்டதாரி ஆசிரியர் ஊதியத்தில் கணினி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டிஆர்பி மூலம் விரைவில் தேர்வு

பி.எட். முடித்த பி.இ. (கணினி அறிவியல்), பிஎஸ்சி (கணினி அறிவியல்), பிசிஏ, பிஎஸ்சி (தகவல் தொழில்நுட்பம்) பட்டதாரிகள் கணினி அறிவியல் ஆசிரியர் பணியில் சேர தகுதியுடையவர்.கடைசியாக, கடந்த 2014-ம் ஆண்டு மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எழுத்துத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. எனவே, புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள 765 கணினி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் திட்டம் ரத்து!

அடுத்த கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆல் பாஸ் திட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் முறையிட்டதை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கல்வி உரிமைச்சட்டம் - 2009 படி 8 ஆம் வகுப்பு வரை எந்த மாணவ, மாணவியை பெயில் ஆக்கக்கூடாது. இதனால் நாடு முழுவதும் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகள் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசின் கட்டாய தேர்ச்சி திட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருவதாக அவர் கூறினார்.

இதனை முன்னிட்ட கல்வி உரிமை சட்டத்தில் இருந்து, அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆல் பாஸ் திட்டத்தை வாபஸ் பெறுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் இந்த முடிவால் அடுத்த ஆண்டு முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுகிறது.

ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து போராட்டம் : ஆசிரியர் சங்கங்களுக்கு நீதிபதி எச்சரிக்கை

சென்னை ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படித்த 42 பேர் பெயில்ஆக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

நீதிபதியின் கருத்தை எதிர்த்து அரசு பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று(ஜூலை 7) வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தனக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர், ஐகோர்ட்டிற்கு எதிராக போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? 365 நாட்களில் பள்ளிகள் செயல்படும் 160 நாட்கள் கூட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பணிக்கு செல்வதில்லை. ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆண்டின் பாதி நாட்கள் கூட பணிக்கு வருவதில்லை. அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? பணிக்கு செல்லாமல் முறைகேடு செய்வோர் ஆசிரியர் சங்கத்தை பயன்படுத்துகிறார்கள்.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முறையாக பணிக்கு வருவது இல்லை என பிற ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நான் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. இது தொடர்பாக பலரும் எனக்கு கடிதம் எழுதி உள்ளனர். பெயில் ஆக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் வருவோர் தங்களது குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்

அரசு தொடக்க பள்ளிகளில் ஆங்கிலம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

''அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கிலம் கற்பிப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - கார்த்திகேயன்: வேலுார் தொகுதி, அல்லாபுரத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, அரசு முன்வருமா?

அமைச்சர் செங்கோட்டையன்: விதிமுறைகள் பூர்த்தியானால், அரசு பரிசீலனை செய்யும்.

கார்த்திகேயன்: வேலுார் மாநகராட்சி, 51வது வார்டில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். தொடக்கப் பள்ளிகள் சிலவற்றில், ஒன்றிரண்டு மாணவர்கள் உள்ளனர்; ஆசிரியர்கள், இருவர் உள்ளனர்.

அமைச்சர் செங்கோட்டையன்: ஒன்றிரண்டு இடங்களில், அது போன்ற நிலை உள்ளது. பெற்றோர், தங்கள் குழந்தைகள், ஆங்கில வழிக் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, தனியார் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். எனவே, அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கிலம் கற்பிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

அ.தி.மு.க., - ஆர்.நடராஜ்: சென் னை, நந்தனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பின்பக்க சுவர், வெள்ளத்தில் சேதமடைந்தது. எனவே, அங்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - பி.கே.சேகர்பாபு: அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும், சேர்க்கை விகிதம் குறைகிறது. அரசு பள்ளிகளில், கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன. அவற்றை, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் சரி செய்ய, அனுமதி அளிக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: தனியார் பள்ளிகளுக்கு செல்வோர், அரசு பள்ளிகளை நாடி வரும் நிலை, விரைவில் ஏற்படும். இன்றைய, 'தினமலர்' நாளிதழில் கூட, 'அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கும் தனியார் பள்ளி மாணவர்கள்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது.

பள்ளி கட்டடங்களை சரி செய்ய, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை, பள்ளி கட்டடங்களை பழுது பார்க்க ஒதுக்குவது குறித்து, முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.

தி.மு.க., - ராதாமணி: விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 950 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. அந்த பள்ளியில், தேர்வு மையம் அமைக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: இந்த ஆண்டு, புதிதாக, 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விக்கிரவாண்டியிலும் அமைக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க 5 இடங்களில் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையம்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையம் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 


தமிழ்நாடு மாணவர்களுக்கு உலகளவில் சிறந்த நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்கும் வகையில் முன்னோடித் திட்டமாக தமிழ்நாடு அரசும் மற்றும் தனியார்துறை கூட்டமைப்பு திட்டத்தின்கீழ் திறன் மையம் மற்றும் அதனுடன் ஐந்து தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் ₹548 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, அண்ணா பல்கலைக்கழகம், சீமென்ஸ் மற்றும் டிசைன்டெக் லிமிடெட் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இத்திறன் மையமானது அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி வளாகத்தில் ஏற்படுத்தப்படும். தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் சென்னை, தரமணியில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கல்லூரி, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரத்திலுள்ள அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள், ஆவடியில் உள்ள முருகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் வேலூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்படும். இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ,மாணவியர் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், பயிற்சி பெறவும், சிறந்த வேலைவாய்ப்பு பெற்றிடவும் இத்திட்டம் வழி வகுக்கும்.

இத்திட்டத்தில், முதல் மூன்று வருடங்களுக்கான செயல்முறை செலவை சீமென்ஸ் மற்றும் டிசைன்டெக் நிறுவனங்கள் ஏற்பதோடு, இம்மையங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க பயிற்றுநர்களையும் ஏற்பாடு செய்யும். மூன்று வருடங்களில் ஏற்படுத்தப்படும் வசதிகள் அக்கல்வி நிலையங்களுக்கு மூன்றாவது வருட முடிவில் ஒப்படைக்கப்படும். 

மூன்றாம் ஆண்டு இறுதியில் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இம்மையங்களை ஏற்று இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும். அதற்கு சீமென்ஸ் மற்றும் டிசைன்டெக் நிறுவனங்கள் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!