Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 27 September 2017

2010 வரை பொறியியல் படித்து தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு


* 2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும்

* உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு





பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2010-ம் ஆண்டு பொறியியல் படிப்பு முடித்து தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்துள்ளவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2018-ம் ஆண்டு பிப்ரவரி, மற்றும் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள தேர்வுகளில் இவர்கள் தேர்வில் பங்கேற்லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு

தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்???

7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.



கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்களுடன் கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டது. அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுடன் கடந்த ஜூன் மாதம் கருத்து கேட்கப்பட்டது.

இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்மையில் நடத்திய வேலைநிறுத்த்தில் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கையை பிரதானப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு தாங்கள் இறுதி செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.

நிபுணர் குழுவின் இந்த அறிக்கையில் பிரதானமாக ஊதிய மாற்றங்கள், ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமலானால், அரசு ஊழியர்களின் ஊதியம் 25 சதவிகிதம் உயரும் என்பதால், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் 7 வது ஊதியக்குழு அறிக்கையை ஊதியக்குழு போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாக முன்கூட்டியே தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் 22.09.2017 அன்று ஜாக்டோ-ஜியோ வழக்கின் போது 30.09.2017 ல் ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பு நிதி நெருக்கடி காரணமாக  5 மாதங்கள் அமுல்படுத்த காலஅவகாசம் வேண்டும் என கேட்டது....

உயர்நீதிமன்றம் அதனை மறுத்து வரும் அக்டோபர் 13 ம் தேதிக்குள்  7 ஆவது ஊதியக்குழு தொடர்பான தனது இறுதி அறிக்கையை அமுல்படுத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் இதை தமிழக அரசு செய்யாவிட்டால் அக்டோபர் 23 ல் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் குறித்த உத்தரவை பிறப்பிக்கும்,  என  நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

 எனவே அரசு தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக 7ஆவது ஊதியக்குழு அமல்படுத்தும் நாள் அல்லது அதற்கு மாற்றாக இடைக்கால நிவாரணம் 20% வழங்கும் முடிவை அரசு அறிவிக்க வேண்டும் எனும் நிலையில் உள்ளது.

அதற்கு முன்னதாக அரசுக்கு ஊதியக்குழு தொடர்பான முடிவெடுக்க போதிய கால அவகாசம் அளிக்கும் விதமாக,குழு தனது அறிக்கையை 27.09.2017 அன்றே சமர்ப்பித்திருப்பது அரசு ஊழியர்,ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது...

அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை

சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, கடந்த ஜூன் முதல் வரும் டிசம்பர் வரை தமிழகம்முழுவதும் 60 கோடி ரூபாய் செலவில் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இதன் துவக்க விழா மதுரையில் நடந்தது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ல் சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த அரசு விழாக்களில், காலை முதல் மாலை வரை அரசு பள்ளி மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்துள்ளதாகக் கூறி, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன்சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுபோன்ற அரசு விழாக்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கும்படி கட்டாயப்படுத்த கூடாது என, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக டி.ஜி.பி.க்கும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார் அளித்தும், பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் விழாக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.பள்ளி வளாகத்திற்கு வெளியில் நடக்கும்அரசு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பிரச்சாரங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்யும் போது, பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும், பள்ளி நிர்வாகங்களும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஆலோசித்து பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை வகுத்து, அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலர், டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என பிரதான கோரிக்கை வைத்திருந்தார்.

விதிமுறைகளை உருவாக்கும் வரை இடைக்காலகோரிக்கையாக, செப்டம்பர் 30ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் கூட்டம் உள்ளிட்டஅரசு விழாக்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.இந்த வழக்கு நவராத்திரி விடுமுறைகால சிறப்பு அமர்வான நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் முன்னிலை விசாரணைக்கு வந்தபோது. இடைக்கால கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விதிமுறைகளை உருவாக்கக்கோரும் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், மாணவ மாணவியர்களை பள்ளி நாட்களில் எங்கும் அழைத்துச்செல்வதில்லை என்றும், பள்ளி விடுமுறை நாட்களில்தான் விழாக்கள் நடைபெறுவதாகவும், அதனால் மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதால் தடை உத்தரவை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தடையை நீக்க மறுத்துவிட்டனர். தடையை நீக்கும் கோரிக்கை குறித்து விடுமுறைக்கு பிறகு தலைமை நீதிபதி அமர்வை அணுக அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.


சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா? யார் சொன்னது?

நீட் தேர்வும் அதைத் தொடர்ந்து அரியலூர் மாணவி அனிதாவின் மரணமும் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தைப் பற்றிய விவாதங்களை கிளப்பியுள்ளன.

பெரும்பாலோனோர் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்தது போலவும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரம் மிகவும் உயர்வானது போலவும் கருத்தை திணித்து வருகிறார்கள். 
கணிதம், அறிவியல், புவியியல் பாடத்திட்டங்கள் அனைத்து கல்வி முறையிலும் ஒன்றுதான், சமூக அறிவியல், வரலாறு மற்றும் மொழிப் பாடங்கள்தான் வேறுபடுகின்றன. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்தது என்று சொல்பவர்கள், முதலில் அது எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய மாநில அரசுகளில் கல்விப் பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கு உறுதுணையாகவும் தக்க ஆலோசனை வழங்கவும் மத்திய அரசால் 1961ம் ஆண்டு NCERT (The National Council of Educational Research and Training) என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை National Curriculum Framework (NCM) வெளியிடப்படும். அதாவது தேசிய பாடத்திட்ட வரைமுறை என்று சொல்லலாம்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநில மத்திய அரசின் பாடத்திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி பெற்ற பிறகே அமலுக்கு வரும். கடைசியாக 2005ம் ஆண்டு தேசிய பாடத்திட்ட வரைமுறை (NCM) வெளியானது. அதன் அடிப்படையில் தான் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டமும் ஆய்வு செய்யப்பட்டு , NCERT ஒப்புதலுடனே அமல் செய்யப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி 11வது 12வது வகுப்புக்கான அனைத்து பாடத்திட்டங்களையும் NCERT க்கு தமிழக அரசு அனுப்பியது. ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய துறை சார்ந்த வல்லுனர்களால் ஆய்வு செய்யப்பட்டு, NCERT ன் ஆய்வறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பட்டது. NCERT ன் இந்த ஆய்வறிக்கை, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் NCM 2005 வரையறைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்று கூறியுள்ளது.

அதன் பிறகே தமிழக அரசு நான்கு பாடத்திட்டத்திற்கும் பொதுவான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தியது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான NCERT ன், தற்போது நடைமுறையில் இருக்கும் 2005ம் ஆண்டு வரையறைக்கு உட்பட்டு, NCERT ஒப்புதல் அளித்துள்ள பாடத்திட்டத்தை, தரம் குறைந்தது என்று எப்படி கூறலாம். மாநில அரசு தன்னிச்சையாக முடிவு செய்யவில்லையே. ஒருவேளை தரம் குறைவு என்றால் அது மத்திய அரசின் NCERT தரத்தைத் தானே குறிப்பிடும்.
முத்துக்குமரன் குழு, தமிழ் நாடு பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தை விட சிறந்தது என்று சான்று அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு பாடத்திட்டமும் மாற்றத்திற்குரியதே. ஆகையால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு தமிழக அரசு குழுக்களை நியமித்துள்ளது. ஒவ்வொரு மாற்றமும் NCERT ஒப்புதலுக்குப் பிறகே அமலுக்கு வருகிறது. கடைசியாக தமிழக அரசின் பாடத்திட்டம் 2010ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த பாடத்திட்ட மாற்றம், பாடத்திட்டக் குழுவின் பரிசீலனையில் இருக்கிறது.

ஆக, தமிழக அரசு NCERT தேசிய ஆணையத்தின் வரையறைக்கு உட்பட்டும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உரிய மாற்றங்களும் செய்து கொண்டு தான் வருகிறது. தமிழக அரசின் பாடத்திட்ட தரம் சரியில்லை என்பவர்கள் முதலில் மத்திய அரசின் NCERT யிடம் தான் முறையிட வேண்டும்.
- கவிதா பாண்டியன்


FLASH NEWS - 7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது.



7 ஆவது ஊதியக்குழு இறுதி அறிக்கை இன்று முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது

7ஆவது ஊதியக் குழு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு




7வது ஊதியக்குழுவின் இறுதி பரிந்துரை அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. நிதித்துறை செயலாளர் சண்முகம் இறுதி அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார். மே 16ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. மே 26, 27ம் தேதிகளில் அங்கீகாரம் பெற்ற சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டது.*

1-க்கு விற்பனை:சியோமியின் அசத்தல் தீபாவளி..!!

தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகிறது. மொபைல் ரீசார்ஜ் கட்டணம் முதல்  ஸ்மார்ட்போன் கட்டணம் வரை அனைத்தும் சலுகை விலையில் வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில், முன்னணி நிறுவனமான சியோமி நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களை பல்வேறு சலுகைகளை அளிக்க இருக்கிறது.Diwali with Mi என்ற பெயரில் செப்டம்பர் 27 ஆம்தேதி காலை 10 மணி முதல் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை சலுகைகளை வாரி வழங்குகிறது இந்நிறுவனம்.தினமும் காலை 11 மணிக்கும் மாலை 5 மணிக்கும் ரெட்மி நோட் 4, Mi ரவுட்டர் 3C, ரெட்மி 4, ப்ளூடூத்மினி ஸ்பீக்கர், Miசெல்ஃபி ஸ்டிக், ரெட்மி 4A, Mi பேண்ட் HRX எடிஷன், Mi கேப்சூல் இயர்போன்,Mi வைபை ரிப்பீட்டர், Mi பேக்பேக் மற்றும் Mi VR பிளே ஆகியவற்றை ரூ.1-க்கு விற்பனை செய்யவுள்ளது.

மேலும், மீ மொபைல் அப்ளிகேஷன் மூலம் தினமும் மதியம் 2 மணிக்கும் மாலை 6 மணிக்கும் Bid to Win என்ற போட்டி நடைபெறுகிறது.மேலும், ரூ.500 முதல் ரூ.3999 வரைசலுகை அளிக்கும் கூப்பன்களை வெல்ல, சியோமி இணையதளத்தில் உள்ள தி தியா ஹண்ட் என்றபோட்டியில் விளையாட வேண்டும்.


B.Ed - பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி

தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், பணிபுரியும் பள்ளிகளிலேயே பயிற்சி எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பு மட்டும் படித்துள்ளனர். 

இவர்கள், தங்களின் பதவி உயர்வுக்காக, பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படிக்கின்றனர். பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டும், பல்கலை தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்க, அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள், அவரவர் பணியாற்றும் பள்ளியிலேயே கள பயிற்சி பெற, கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.


வருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை

பெற்றோரின் வருமான சான்றிதழ் கேட்க கூடாது' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்புமற்றும் பிளஸ் 1 மாணவர் விபரத்தை, அந்த பள்ளிகள், சி.பி.எஸ்.இ., தலைமையகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கு அனுமதி வழங்கப்படும்.

இதற்காக, பல பள்ளிகள், மாணவர்களின் பெற்றோரிடம், வருமான வரி ரிட்டன் சான்றிதழ் அல்லது வருமான சான்றிதழ் கேட்பதாக, மாணவர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.இதையடுத்து, 'மாணவர் விபரங்களை பதிவு செய்ய, பெற்றோரிடம் வருமான வரித்துறை சான்றிதழோ, வருமான சான்றிதழோ கேட்கக் கூடாது. மாறாக, சுய கையெழுத்திட்ட கடிதம் பெற்றால் போதும்' என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.


நுழைவு தேர்வு பயிற்சி: அடுத்த மாதம் துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த மாதம் முதல், நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மத்திய அரசு சார்பில், 'ஜே.இ.இ., நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த தேர்வுகளில், தமிழக மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெறுவதில்லை. அதனால், மருத்துவ படிப்பிலும்,தேசிய உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., யிலும், தமிழக மாணவர் சேர்க்கை குறைகிறது. இந்த நிலையைப் போக்க, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த, போட்டி தேர்வு பயிற்சி ஆசிரியர்களை அழைத்து வர, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அவர்கள் வாயிலாக, தமிழக ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை பெறும், தமிழக ஆசிரியர்கள், பிளஸ் ௧, பிளஸ் ௨ மாணவர்களுக்கு, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ளனர். இந்த பயிற்சி திட்டம், அடுத்த மாதம் துவங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் - Regards

பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க கோருதல் - Proceeding

குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக உருவாக்க இலக்கு: தில்லி மாநாட்டில் தமிழகம் உறுதி

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தேசிய மாநாட்டில் பேசுகிறார் தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல்.

தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக உருவாக்கும் இலக்கில் செயல்பட்டு வருவதாக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மாநாட்டில் மாநில அரசு தெரிவித்தது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் பங்கேற்றுப் பேசியதாவது:
தேசிய குழந்தைத் தொழிலாளர் நலத் திட்டம் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்கும் வகையில், மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2007, நவம்பர் 11-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. உணவகங்கள், தொழிற்சாலைகள், வீட்டு வேலை ஆகியவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனரா என்பது குறித்து இக்குழு அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை அளித்து வருகிறது. 
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு அமலாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் நலத் திட்டம் செயல்படுத்தப்படும் 15 மாவட்டங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், பணியாளர்களுக்கும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கும், நீதித் துறை அலுவலர்களுக்கும், தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் மாநில அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 21, 622 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளிகளில் கல்வி பயில்வதற்கும் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. குழந்தைத் தொழிலாளர் குறைவாக உள்ள மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இந்நிலையில், குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் இலக்குடன் மாநில அரசு செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
தமிழக தொழிலாளர் நலத் துறை கூடுதல் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, தருமபுரி , திண்டுக்கல், சேலம், நாமக்கல், விருதுநகர், வேலூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், மாவட்டத் தேசிய குழந்தைத் தொழிலாளர் நலத் திட்ட அலுவலர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!