Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 18 October 2017

2016 ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தின் அனைத்து வகை பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் விவரம்!!

பள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு

வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அடுத்த சில நாட்களில், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இந்த காலத்தில், பெரும்பாலும், மின் கசிவால் உயிரிழப்புகள் ஏற்படும். 

இது போன்ற பாதிப்புகளை தடுக்க, பள்ளிகளில் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அதன் விபரம்:

● அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கட்டட மின் இணைப்பை சரிபார்க்க வேண்டும். புவி ஈர்ப்பு கம்பிகள், செயல்பாட்டில் உள்ளதா என, சோதனை செய்ய வேண்டும்

● சுவிட்சுகள், மின் விசிறி, கணினி, ஆய்வக மின் கருவிகள் போன்றவற்றில், மின் இணைப்பு சரியாக உள்ளதாக என, சோதிக்க வேண்டும். பள்ளி கட்டடத்துக்குள் செல்லும், மின் கேபிள்களில் சேதம் ஏற்பட்டு, மின் கசிவு ஏற்படுகிறதா என, ஆய்வு செய்ய வேண்டும்

● மின் கம்பத்திலிருந்து, பள்ளி கட்டடத்துக்கு, மின் வினியோகம் செய்யப்படும் குறைந்த மின்னழுத்த கம்பிகளில் சேதம் உள்ளதா, அவற்றில் மரங்கள் உரசுகிறதா என்பதை, மின் வாரிய ஊழியர்கள் வாயிலாக ஆய்வு செய்து, முன்கூட்டியே சரி செய்ய வேண்டும்.

10ம் வகுப்பு சான்றிதழ்கள் அழிக்க அரசு முடிவு

அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறையின், சென்னை மண்டல துணை இயக்குனர், ராஜலட்சுமி அறிவிப்பு:


பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 2008 முதல், 2012 அக்., வரை எழுதியவர்களில் பலர், தங்கள் சான்றிதழ்களை கோராமல் உள்ளனர். அவற்றை அழிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

அதனால், அக்., 31 வரை, அந்த சான்றிதழை பெற, அவகாசம் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெற விரும்புவோர், பெயர், பதிவெண், தேர்வு மையம், ஆண்டு, மாதம் போன்ற விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள் அழிக்கப்படும். இனி வரும் காலங்களில், இரண்டு ஆண்டு முடிந்த பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள், முன்னறிவிப்பு இன்றி அழிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல்  துறை நடத்துகிறது. வடிவமைக்கும் அஞ்சல் தலை மாதிரிகளை  அனுப்ப அக்.20ம் தேதி கடைசி நாள். 


இதுகுறித்து, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  ‘கூடு’ (NEST) என்ற பெயரில் அகில இந்திய அளவில் அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி நடக்க உள்ளது.   இந்தப் போட்டி 5 வகுப்பு மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 5 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இன்னொரு பிரிவாகவும்  பிரிக்கப்பட்டுள்ளனர்.

 போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு ஏற்ப அஞ்சல் தலையின்  மாதிரியை ஏ4 தாளில்  வரைந்து  உதவி தலைமை இயக்குநர் (ஏடிஜி-அஞ்சல்தலை சேகரிப்பு), அறை எண்:108,  டாக் பவன், புதுடெல்லி - 110001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாதிரிகள் அஞ்சல் தலைகளாகவும், சிறப்பு அஞ்சல் உறைகளும் வெளியிட பயன்படுத்திக் கொள்ளப்படும். அஞ்சல்தலை மாதிரிகளை அக்.20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகை : அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

'21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தியுளளது.

மதுரையில் சங்க மாநில தலைவர் உ.மா.செல்வராஜ் கூறியதாவது:

சம்பளக்குழு முடிவுகள் 12 லட்சம் அரசு பணியாளர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றம் தருகிறது. மூன்று மாத போராட்டங்களுக்கு பின் அரசு, ஜாக்டோ ஜியோ கிராப் கூட்டமைப்பிடம் பேசி ஒப்புக் கொண்டபடி சம்பளக்குழு அறிக்கையை பெற்று அமல்படுத்தியது வரவேற்கத்தக்கது.

மத்திய அரசு, ஏழாவது சம்பளக்குழுவில் குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அமல்படுத்தியது. மாநில அரசு 15 ஆயிரத்து 700 ரூபாய் என நிர்ணயம் செய்தது ஏமாற்றமளிக்கிறது. 

குறைந்த பட்சம் சம்பளம் 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க, வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் இளநிலை உதவியாளர்கள் சம்பளம் வழங்காதது ஏமாற்றத்தை தருகிறது.

தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு 30 சதவீத சம்பள உயர்வும் ஏமாற்றம் தருகிறது. அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையில் பணிபுரியும் மூன்று லட்சம் பேரில் ஐந்தாண்டுகள் பணி முடித்தவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 

ஊராட்சி செயலர், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர், கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதியத்தை ஐயாயிரம் ரூபாயாக உயர்த்த முதல்வர் பழனிசாமி முன்வர வேண்டும். தமிழகத்தில் ஒரு கோடி பேர் படித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்து, காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் அரசு துறையில் நிரந்தர பணியிடங்களை குறைக்க, பணியாளர் சீராய்வுக்குழுவை அரசு அமைத்துள்ளது. இது நிரந்தர பணியிடங்களை ஒழித்து ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேவையின்படி தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளில் பணி நியமனம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. எனவே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு பணியாளர்கள் 1.1.2016 முதல் சம்பள மாற்றப்பயனை அனுபவித்து வரும் நிலையில் தமிழக அரசு 21 மாத நிலுவை தொகையை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல. 

அதை உடனடியாக வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும். இதுகுறித்து சென்னையில் அக்., 21ல் அரசு பணியாளர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வர், என்றார்.

போராட்டத்துக்கு ஆயத்தமாகும் அரசு ஊழியர்கள்!!!

தமிழக அரசு ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செய்வதற்கு

மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள்.

தமிழக அரசு ஊழியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, எட்டாவது ஊதியக் குழு மாற்றத்தை அமல்படுத்துவது என 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 7 முதல், 15 வரையில் தொடர் போராட்டம் செய்தார்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். நீதிமன்றத்தின் கண்டிப்பால் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பியவர்கள், உயர் நீதிமன்றத்தை (மதுரைக் கிளை) நாடினார்கள். நீதிபதிகள் சுதாகரன், சாமிநாதன் இருவர் கொண்டபெஞ்சு, மதுரை நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதி மன்றத்துக்கு வழக்கை மாற்றியது. அக்டோபர் 23ஆம் தேதி, தலைமைச் செயலாளர் ஆஜராகி ஜிபிஎஃப் சம்பந்தமான அறிவிப்புகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளார்கள்.

இந்நிலையில், மத்திய அரசு பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியம் ரூ18 ஆயிரம் வழங்காமல் ரூ15,700 என்றும், பென்ஷன் ரூ 9 ஆயிரத்திற்கு பதில் ரூ. 7500 எனவும் அறிவித்து ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது தமிழக அரசு என்கிறார் அரசு ஊழியர் சங்கத்தின் பிரதிநிதி பாலு.

அக்டோபர் 23ஆம் தேதி வழக்கு இருப்பதால், அன்று தலைமைச் செயலாளர் சரியாக அறிவிப்புகள் தாக்கல் செய்யவில்லையென்றால், அக்டோபர் 24ஆம் தேதி, அரசுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க ஜாக்டோ ஜியோவினர் அவசரமாகக் கூடுகிறார்கள்.

“தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 13 லட்சம்பேர் இருக்கிறார்கள், 2006 ஜனவரி 1ஆம் தேதி ஊதிய குழுவில் உள்ள முரண்பாடுகளைச் சரிசெய்ய வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை. இந்த முரண்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு சண்முகம், உமாநாத் இருவர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்தக் குழுவின் பரிந்துரைகளை அரசு கண்டுகொள்ளவில்லை. முதலில் அதைச் சரிசெய்ய வேண்டும். இந்த மாதம் 23ஆம் தேதி வழக்கிருப்பதால், தற்போது அறிவித்துள்ள ஏமாற்று ஊதியக் குழுவைப் பற்றி அரசு ஊழியர்களுக்கு விளக்குவதற்கு வரும் 20ஆம் தேதி மாநிலம் முழுவதும், மாவட்ட தலை நகரில் ஜாக்ட்டோ ஜியோவினர் விளக்ககூட்டம் நடத்துவோம்” என்றார் பாலு.

23ஆம் தேதி, நீதிமன்றத்தில் அவகாசம் கேட்பதற்கு அரசு சார்ப்பில் ஆலோசனையில்

இருப்பதாகச் சொல்கிறார்கள் தலைமைச் செயலகம் வட்டாரத்தில். எந்த முடிவாக இருந்தாலும் 24ஆம் தேதி ஜாக்ட்டோ ஜியோவினர் கூடுவதற்கு, முன்னதாகவே அழைப்பு கொடுத்துள்ளார்கள்.

இயற்கைப் பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டினால், தமிழக அரசு அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் இப்போது பெரிய கேள்விக்குறி.


கல்வி உதவித்தொகை

தொழிலாளர் வாரிசுகள், கல்வி உதவித் தொகை பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர் வாரிசுகளுக்கு, தொழிலாளர் நல வாரியம் வழியாக, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, பிளஸ் 1 முதல், கல்லுாரி படிப்பு வரை, புத்தகங்கள் வாங்க நிதி; தொழிற்கல்வி, பட்ட மேற்படிப்பிற்கு கல்வி உதவித்தொகை; பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்தோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை, 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை, சென்னை - 6' என்ற முகவரிக்கு, சுயவிலாசமிட்ட, தபால்தலை ஒட்டிய உறையுடன், அக்., 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், தகவல்களுக்கு, 2432 1542 என்ற தொலைபேசி எண்ணிலும், www.labour.tn.gov.in என்ற இணைய தள முகவரியிலும், தெரிந்து கொள்ளலாம். இத்திட்டங்கள், தொழிலாளர் நல நிதி செலுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!