Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 14 February 2018

ஸ்மார்ட் க்ளாஸ்ரூம் உள்ளே... இயற்கை தோட்டம் வெளியே... சூப்பர் அரசுப் பள்ளி!


அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு மெத்தப் படித்தவர்கள் பலரே யோசிக்கிறார்கள். 'தனியார் பள்ளிகளில்தான் அறிவு ஊற்றெடுக்கும்; அரசுப்பள்ளிகளில் அறிவின்மையே வளரும்' என்ற அவர்களின் தவறான கற்பிதங்கள்தாம் அதற்கு காரணம். ஆனால், தமிழகத்தில் இன்று பல அரசுப்பள்ளிகள் மாணவர்களுக்கு கல்வி போதிப்பதிலும்,சுற்றுப்புறத்தை செம்மையாக வைத்திருப்பதிலும்  தனியார் பள்ளிகளைவிட சிறப்பாக செயல்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் கரூர் மாவட்டம்,குளித்தலை ஒன்றியத்தில் உள்ள பொய்யாமணியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. சுற்றுச்சூழல் மன்றம் மூலமாக இயற்கை முறையில் மாடித்தோட்டம், கிடைக்கும் சொற்ப இடங்களில் எல்லாம் கத்தரி, வெண்டை, தக்காளி,கீரைகள் என்று மாணவர்களை கொண்டு இந்த பள்ளியில் தோட்டத்தை இயற்கை முறையில் பராமரிக்கிறார்கள். அதோடு, அந்தக் கிராமம் முழுக்க நாட்டு மரக்கன்றுகளை நட்டு,அவற்றிற்கு ஒவ்வொரு மாணவரின் பெயரையும் வைத்து, அவர்கள் மூலம் அந்த மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார்கள்.

 

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் நாம் அந்த பள்ளிக்குச் சென்றோம். 'அது அரசுப்பள்ளியா, இல்லை இயற்கைக் காடா' என்று நாம் குழம்பும் அளவிற்கு எங்கு பார்த்தாலும், மரங்கள், காய்கறித் தோட்டங்கள் என்று பச்சை போர்த்தி இருந்தது. பள்ளிக்கு முகப்பிலேயே, 'இயற்கையைக் காப்போம்; உயிரைக் காப்போம்... சுற்றுச்சூழல் மன்றம்' என்ற பலகை நம்மை வரவேற்றது. காய்கறிகளைப் பறித்துக் கொண்டிருந்த ஆறாவது படிக்கும் சாரதி என்ற மாணவன்,
 "அண்ணே,எங்க குடும்பம் விவசாய குடும்பம்தாண்ணே. ஆனா,எனக்கு விவசாயத்து மேல விருப்பம் இருந்ததில்லை. ஆனால், ஒன்றரை வருஷமா எனக்கு விவசாயத்து மேல, குறிப்பா இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்திருக்கு. அதற்கு, காரணம் எங்க ஆங்கில வகுப்பு சார் பூபதிதான். அவர் வந்தப்புறம், எங்களுக்கு இயற்கை மீது ஆர்வத்தை வளர்த்தார். இயற்கை விவசாயம் செய்வதன் அவசியத்தை உணர்த்தினார். அதனால், அவர் தூண்டுதலில் முதலில் ஊர் முழுக்க வேம்பு,புங்கை,பூவரசுன்னு 500 நாட்டு மரக்கன்றுகளை வைத்தோம். அந்த மரக்கன்றுகள் ஒவ்வொன்றுக்கும் எங்களது பெயரை சார் சூட்டினார். 'ஒவ்வொரு மரமும் உங்கள் சகோதரர். அதை நீங்கள்தான் காபந்து பண்ணனும்'ன்னு சார் சொன்னார். அதனால்,தினமும் தண்ணீர் பாய்ச்சி அதை கண்ணும் கருத்துமா வளர்த்துட்டு வர்றோம். அதேபோல்,மாடித்தோட்டம் உருவாக்கி கத்தரி, வெண்டை, தக்காளி, பாகை, மிளகாய், கீரை வகைகளான அரைக்கீரை, சிறுகீரை, புளிச்சக்கீரை, முருங்கை கீரைன்னு இயற்கை முறையில் பயிரிடுறோம். அதோட, அத்தனை காய்கறிகளையும் கீழேயும் பள்ளியை சுத்தி கிடைக்கிற சின்ன சின்ன இடங்களில்கூட பயிர் செஞ்சுருக்கோம். அந்தக் காய்கறிகளை கொண்டுதான் மதிய உணவு சமைக்கப்பட்டு,நாங்க சாப்பிடுறோம். விவசாயம் மீது எங்களுக்கு பெரும் விருப்பம் ஏற்பட்டிருக்கு அண்ணே" என்றான்.
 இந்த மாற்றத்திற்கு காரணகர்த்தாவாக அனைவராலும் கைநீட்டப்பட்ட ஆசிரியர் பூபதியிடம் பேசினோம்.
 "பள்ளியில் ஸ்பான்சர் மூலமா போர் போட்டு, அனைத்து மரக்கன்றுகள், காய்கறித் தோட்டப் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறோம். மாணவர்கள் கைகழுவும் தண்ணீரையும் மறுசுழற்சி முறையில் பயிர்களுக்கு தானாக பாயும்படி செட்டப்பை அமைத்திருக்கிறோம். அதேபோல், பத்து இடங்களில் மழைநீர் சேமிப்பு அமைப்பை அமைத்திருக்கிறோம். இந்தக் காய்கறி பயிர்களுக்கு குப்பைகள், அசோஸ் பயிரில்லம், மண்புழு உரம் உள்ளிட்ட இயற்கை உரங்களைதான் பயன்படுத்துகிறோம். எங்கள் பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களை மரக்கன்றுகள் கொடுத்து வரவேற்கிறோம். மாணவர்களுக்கு அடிக்கடி புராஜெக்ட் கொடுத்து, அதை செயல்முறையிலும் அவர்களை அமைக்க சொல்கிறோம். அந்த வகையில், பத்து எட்டாம் வகுப்பு மாணவர்கள் செயல்வடிவமாக பறவைகளை வளர்க்கிறார்கள். முன்னாள் மாணவர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழகத்தை வைத்து அடிக்கடி பள்ளி வளர்ச்சி தொடர்பான கூட்டங்களை போடுறோம். வாராவாரம் மாணவவர்களுக்கு இலவச கராத்தே,யோகா உள்ளிட்ட கிளாஸ்களை நடத்துகிறோம்.
மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க பல்வேறு ஸ்பான்ஸர்களை பிடித்து, ஒவ்வொரு வசதியா செஞ்சுகிட்டு இருக்கோம். எட்டு கணினிகளை வாங்கினோம். ஸ்மார்ட் கிளாஸ்ரூம் அமைத்து, மாணவர்களுக்கு பாடங்களை இணையம் மூலமாக பிடிஎஃப் பைலாக மாற்றி நடத்துகிறோம். இதனால்,அவர்களுக்கு ஆர்வம் கூடுகிறது. அதேபோல்,கரூர் மாவட்டத்திலேயே இரண்டு ஏ.சி வகுப்பறைகள் கொண்ட ஒரே பள்ளியாக எங்க பள்ளியை மாற்றினோம். பசங்களோட எல்லா நிகழ்வுகளையும் வீடியோ,போட்டோவாக்கி யூடியூப், பேஸ்புக், வாட்ஸப் என்று அப்லோடு செய்கிறோம்.
அதற்கு,கிடைக்கும் வரபேற்பை பார்த்து,மாணவர்களுக்கு ஆர்வம் கூடுகிறது. எல்லா வகுப்பறைகளிலும் டைல்ஸ் போட்டிருக்கிறோம். மாணவர்கள் அனைவருக்கும் நல்ல தரமான சீருடைகள் தந்திருக்கிறோம். நடனம், இசை மூலம் பாடங்களை கற்பிக்கும் முறையையும் இங்கே செயல்படுத்துகிறோம். இதற்கெல்லாம்,சென்னையில் உள்ள ஸ்ரீராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளை, பெங்களூர், ஆஸ்திரேலியா, டெல்லியில உள்ள நண்பர்கள் உதவி பண்ணினாங்க.


இப்போ, இங்கே இன்னும் இருக்கும் ஆறு வகுப்பறைகளையும் ஸ்மார்ட் கிளாஸ் ஆக்குறது, மல்டி மீடியம் லேப் அமைக்கிறது, ஆங்கில லேப் அமைக்கிறதுங்கிற முயற்சியிலும் இறங்கியிருக்கோம். இத்தனை விஷயங்களையும் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை முத்துலெட்சுமி,சக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்,முன்னாள் மாணவர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள் என எல்லோரும் சேர்ந்துதான் சாதித்தோம். இன்னும் இலக்குகள் அதிகம் இருக்கு சார். அதையும் அடைவோம்" என்றார் உணர்ச்சி மேலிட!.
 கல்விச்சிறகுகள் வாழ்த்துகிறது. 

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!